ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக குரல்- சமூக வலைதளம் மூலம் ஒன்று திறண்ட இளைஞர் அணி!

1

சென்னையை கலக்கிய இளைஞர் கூட்டம் ! சாதித்த சமூக வலைத்தளங்கள் !

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவதில் தொடர்ந்து சில வருடங்களாக சிக்கல்கள் எழுந்து வருகின்றது. இந்த ஆண்டாவது, ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற ஏக்கத்தில் கிராமத்தில் காளைகளுடன் மக்கள் பரிதவித்து காத்திருக்கின்றனர். மார்கழி மாத பனியை போல, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு குறித்து பேசும் அரசியல் கட்சிகள் அதற்கு பின்பு அதை காற்றோடு மறந்து விடும் நிலையே பார்க்க முடிகிறது. 

இந்த சூழலில், இயல்பான ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில், மெரினாவில் நடைபயிற்சி செய்த சென்னைவாசிகளை அசர வைத்தது இன்றைய நிகழ்வு.

சென்னையில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி, பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திய பிரமாண்ட பேரணி மெரினா கடற்கரையில் நடைபெற்றது. கலங்கரை விளக்கத்தில் இருந்து, உழைப்பாளர் சிலை வரையில், பாரம்பரிய தப்பாட்ட இசையோடு, காலை 7 மணிக்கே ஆண்களும், பெண்களும் அணிவகுத்து நடந்தது பிரமிக்கவைக்கும் வகையில் அமைந்தது.

Chennai memes என்று குறிப்பிடப்படும் முகநூல் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றது தமிழகத்தையே கவனிக்க வைக்கும் விஷயமாக மாற்றியிருக்கிறது. நகர்புற இளைஞர்களின் பாரம்பரிய மற்றும் பண்பாட்டை மதிக்கும், பேணிக்காக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு அமைந்ததாக கூறுகின்றனர் இதில் பங்கேற்றோர். ஜல்லிக்கட்டின் பெருமையை விளக்கும் வகையில், பேரணியின் இறுதியில் ஒரு ஜல்லிக்கட்டு காளை அங்கு கொண்டுவரப்பட்டு, அதற்கான மரியாதைகளும் செய்யப்பட்டது. இளைஞர்களின் கட்டுக்கடங்காத கூட்டம், போலிசார், பாதைசாரிகள் என எல்லோரின் புருவமும் உயரும் வகையில் அமைந்தது.

இதை தொடர்ந்து நடைபெற்ற உண்ணாவிரதமும், தமிழகத்தின் விவசாயிகள் தொடர் மரணத்திற்கு குரல்கொடுக்கும் வகையில் அமைந்தது. மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் உணவை விளைவிக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளும், நலனையும் அரசு கவனித்து கொண்டு வர வேண்டும் என்பதையும், விவசாயிகளுக்காக குரல் கொடுக்கவே இத்தனை இளைஞர்களும் கூடியதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

அதிகப்படியான இளைஞர்களை கொண்டுள்ள நாடாக இந்தியா உள்ள நிலையில், சமூக ஊடகங்கள் அதிகம் பயன்படுத்தும் நாடாகவும் மாறிவருகிறது. இந்த தளங்கள் என்பது, ஒத்த கருத்துடைய மக்களை ஒன்றிணைப்பது மட்டுமின்றி, ஒன்று கூடி போராடவும் சிறந்த பாலமாக அமையும் என்பதை ஒரே நாளில் காண்பிள்த்துளது இன்றைய நிகழ்வு.