சரித்திர நிகழ்வு- கேரள உயர் நீதிமன்றத்திற்கு 4 பெண் நீதிபதிகள்! 

0

இதுவரை இல்லாத வகையில், நீதித்துறையில் சரித்திர நிகழ்வு ஒன்று கேரள மாநிலத்தில் நடந்துள்ளது. கேரளா உயர் நீதிமன்றம் தனது நான்காவது பெண் நீதிபதியை நியமித்து புதிய வரலாற்றை எழுதியுள்ளது. ஏற்கனவே பி.வி.ஆஷா, அனு சிவராமன், மேரி ஜோசப் ஆகியோர் நீதிபதிகளாக கேரள உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வரிசையில் வி.ஷிர்சி என்பவரை நீதிபதியாக நியமித்துள்ளது கேரள நீதித்துறை. கேரளாவை சேர்ந்த பெண்கள் உயர் பதவிகளை வகித்து சமூகத்துக்கு பணியாற்ற வல்லவர்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதியும் கேரளாவை சேர்ந்தவர் என்பது சுவாரசியமான தகவல். கேரள உயர் நீதிமன்றத்தில் பதிவி ஏற்ற புதிய நீதிபதி வி.ஷிர்சி லைவ்லா’விற்கு அளித்த பேட்டியில்,

“உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் அதிகமாக பெண்களை நீதிபதிகளாக நியமிக்கவேண்டும். அப்போதுதான் உயர் நீதிமன்றங்களில் பெண்களின் பங்கு அதிகரிக்கும்", என்றார். 

இந்தியா டுடே வெளியிட்ட அறிக்கையின் படி, நீதித்துறையில் பெண்களின் பங்கு மிக குறைவாக உள்ளது. இந்தியா முழுதிலும் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையில் 10சதவீதத்திற்கும் குறைவாகவே பெண் ஜட்ஜுகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தற்போது ஒரே ஒரு பெண் ஜட்ஜ் உள்ளார். 1950 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் இதுவரை நியமிக்கப்பட்ட 229 நீதிபதிகளில், ஆறு பேர் மட்டுமே பெண் நீதிபதிகள். மொத்தம் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் 9 நீதிமன்றத்தில் பெண் ஜட்ஜுகளே இல்லை என்பது வருத்தமான விஷயம்.   

கட்டுரை: Think Change India