21-ம் நூற்றாண்டிற்கான ஆயுர்வேதம்: நவீன வாடிக்கையாளர்களை கவர புதுமையை புகுத்திய Dr.Vaidya’s அர்ஜுன் வைத்யா! 

0

கிமு 5000-ல் துவங்கிய ஆயுர்வேதம் இன்று வரையில் இந்தியாவில் வழக்கில் இருந்து வருகிறது. ரிஷிகளும் முனிவர்களும் தங்களது குடும்பத்தினர்களுக்கு அவர்களது அறிவாற்றலை அளித்து எதிர்கால சந்ததியினருக்கு பாரம்பரியத்தை ஒப்படைத்தனர். இவ்வாறாக ஆயுர்வேதம் இப்போது வரை தொடர்ந்து வருகிறது.

ஆயுர்வேதம் குறித்த 150 வருட கால அறிவாற்றலை ஆறு தலைமுறைகள் தாண்டி குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்து வந்துள்ளார் 25 வயதான Dr.Vaidya’s-ன் சிஇஓ அர்ஜுன் வைத்யா. சாதாரணமாக லெப் (பூசம் மருந்து) அல்லது தந்த் மஞ்சன் (பற்பொடி) ஆகியவற்றை பயன்படுத்தாத நவீன நுகர்வோருக்கு ஏற்றவகையில் முன்னோர் வழி வந்த இந்த பாரம்பரியத்தை மறுபேக்கிங் செய்வதில் கவனம் செலுத்துகிறார் அர்ஜுன்.

”21-ம் நூற்றாண்டிற்கான ஆயுர்வேதமே Dr.Vaidya’s-ன் முக்கிய நோக்கமாகும். இந்த பாரம்பரிய இந்திய ஃபார்முலேஷன்களை கையில் எடுத்து நவீன நுகர்வோருக்கு ஏற்றவாறு அழகான, கவர்ச்சியான, கேளிக்கையான முறையில் மறுப்ராண்ட் செய்வதே எங்களது எண்ணமாகும்.” என்றார் அர்ஜுன்.

ஆறு தலைமுறைகளாக தொடர்ந்த ஆயுர்வேதம் 

அர்ஜுனின் தாத்தா Dr.நட்டூபாய் வைத்யா ஒரு பழம்பெரும் ஆயுர்வேத மருத்துவர். தனது அறிவாற்றலைக் கொண்டு பலருக்கு சிகிச்சை அளித்துள்ளார். முக்கியமாக அவரது தாத்தாவின் அப்பாவும் தாத்தாவும் சிகிச்சையளிக்கையில் ஒரு நாளைக்கு 250க்கும் மேற்பட்ட நோயாளிகள் க்ளினிக்கிற்கு வந்தனர். 12,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் தபால் மூலம் தொடர்பு கொண்டன்ர். 

தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு தபாலில் தொடர்பு கொண்டவர்களை அவர்களது வலைதளம் மூலமாகவும் அமேசான், பேடிஎம், ஷாப்க்ளூஸ், ஈபே, ஸ்நாப்டீல் போன்றவற்றின் மூலமாகவும் ஆன்லைனில் தொடர்பு கொள்ளச் செய்தனர். 2013-ல் அர்ஜுனின் தாத்தா இறந்துவிட்டபோதும் மும்பையில் அவர் தொடங்கிய கிளினிக்கில் ஒவ்வொரு நாளும் 60 முதல் 70 நோயாளிகள் இன்றும் சிகிச்சைக்கு வருதுகொண்டிருக்கின்றனர். அர்ஜுன் கூறுகையில், 

“நாங்கள் பல புதிய விஷயங்களை திட்டமிட்டாலும் கிளினிக்கை தொடர்வோம். அதுதான் எங்களது மரபு.”

Dr Vaidya’s ஒரு ப்ராண்டாக FDA-வால் ஒப்புதல் வழங்கப்பட்ட ஆயுர்வேத தனியுரிம மருந்துகளுக்கான 96 சூத்திரங்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் சில்வாசாவில் இருக்கும் இவர்களது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு கிளினிக்கில் கிடைக்கிறது.

கட்டுப்பாட்டை கையில் எடுத்தார்

அர்ஜுனுக்கு 14 வயதிருக்கும்போது வார இறுதியை அவரது தாத்தாவுடன் செலவிடுவார். பண்டைய சமஸ்கிருத எழுத்துக்களால் நிறைந்த ஆயுர்வேதம் குறித்த சூத்திரங்கள் மற்றும் தகவல்களை தெரிந்துகொள்வார். பயோடெக் மற்றும் பயோகெம் படிக்க திட்டமிட்டு இறுதியில் பொருளாதாரம் மற்றும் அரசியல் பயின்றார். ப்ரௌன் பல்கலைக்கழகத்திலிருந்து திரும்பியதும் பர்கா தத்துடன் சில மாதங்கள் பணிபுரிந்தார். அதன் பிறகு தொழில்முனைவில் ஆர்வம் ஏற்பட்டது. இதனால் 2013-ல் எல் கேப்பிடல் ஏசியா என்கிற வென்சர் கேப்பிடல் மற்றும் தனியார் பங்கு நிறுவனத்தில் சேர்ந்தார். 

மற்ற நிறுவனங்களுடன் பணிபுரிந்தபோது தன்னுடைய பாரம்பரியத்தை நினைத்து, “வாழ்க்கை என்கிற வட்டத்தில் மறுபடி துவங்கிய இடத்தையே அடைந்து Dr Vaidya’s –ஐ நியூ ஏஜ் வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் செல்ல முடிவெடுத்தேன்.” 2016-ல் கட்டுப்பாட்டை அவர் தன் கையில் எடுத்தார். 

சந்தையை அணுகுதல் மத்தியில் புதிய அரசு அமைந்த 2014-ம் ஆண்டு முதல் ஆயுர்வேதத்தில் ஆர்வம் பெருகத் துவங்கியது. இது பெரிதும் உதவியதாக தெரிவித்தார் அர்ஜுன். மேற்கத்திய மருத்துவம் மக்களைச் சென்றடைந்து பிரசித்தி பெற்றதற்கு எதிராக ஆயுர்வேத மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் இந்தத் துறை இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டிய நிலையிலுள்ளது.

இந்தியர்கள் பாரம்பரியமாக உருவாக்கிய யோகாவை மேற்கத்தியர்கள் முழுவதுமாக மறுப்ராண்ட் செய்துள்ளனர். யோகா பேண்ட், யோகா ஜிம், யோகா மேட் என இன்று யோகா பரவலாக பேசப்படுகிறது. இது நம்முடன் எளிதாக தொடர்புப்படுத்தப்படும் காரணத்தால் இந்தத் துறை அமெரிக்க சந்தையில் 36 பில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளது. இதைத்தான் ஆயுர்வேதத்தில் செய்யவேண்டும். அதாவது பாரம்பரிய இந்திய அறிவாற்றலை (2,500 ஆண்டுகளுக்கும் மேலாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது) கையில் எடுத்து நவீன வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பேக்கிங் செய்யவேண்டும்.

அறியியல்-தொழில்நுட்ப ஆராய்ச்சியின் சமீபத்திய அறிக்கையின்படி நாட்டின் ஆயுர்வேத பொருட்கள் சந்தை 2016-2021- ல் 16 சதவீத CAGR இருக்கும் என குறிப்பிடுகிறது.  இதை மனதில் கொண்டு ஆயுர்வேதத்தை பல நாட்களாக மறந்திருந்த இளைஞர்களிடம் கவனம் செலுத்துகிறார். இதற்காக தற்காலத்திற்கேற்ற நேரடியாக விற்பனை செய்யும் (OTP) தயாரிப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார். மும்பையில் HERBofit மற்றும் LIVitup என்கிற இரண்டு புதுமையான தயாரிப்புகளை OTP சானல் வாயிலாக  அறிமுகப்படுத்தியுள்ளனர். அர்ஜுன் கூறுகையில், 

“நவீன வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பியவற்றை குடித்து அனுபவிக்க விரும்புகின்றனர். இருந்தும் அடுத்த நாள் திறம்பட செயல்பட வேண்டும் என்று எண்ணுகின்றனர். LIVitup இதைச் செய்யும். இந்த ஆயுர்வேத ஹாங்ஓவர் தற்காப்பு பொருள், இருமடங்காக அதிகரித்து நீண்ட நாட்கள் கல்லீரலை பாதுகாக்கும்.”

ச்யாவன்ப்ராஷ்-ன் நன்மைகளை HERBofit அளிக்கும். இதற்கான சந்தை 900 கோடி ரூபாய் மற்றும் மல்டிவிட்டமின்களின் சந்தை 1,200 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என்கிறார் அர்ஜுன். மேலும் துணை உணவுகளை இணைத்துக்கொண்டால் சந்தையின் அளவு 12,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும். இவரது 280mg கேப்சூல் இந்த சூத்திரங்களின் மல்டிவிடமின் வகை மருந்தாகும்.

சந்தையில் ஹிமாலயாஸ் பார்ட்டி ஸ்மார்ட் போன்றோரிடமிருந்து போட்டியும் உள்ளது. அர்ஜுன் கூறுகையில்,

“பல நிறுவனங்கள் கல்லீரல் பாதுகாப்பு தயாரிப்புகள் மற்றும் ச்யவன்ப்ராஷ் போன்றவற்றை விற்பனை செய்தாலும் ப்ராண்டிங், பேக்கேஜிங், மார்கெட்டிங் போன்றவற்றில் எங்களது அணுகும்குறையும் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் பேசும் விதமும் வேறுபடும். மேலும் எங்களது தயாரிப்புகள் அனைத்தும் பாரம்பரிய தனியுரிம சூத்திரங்களைக் கொண்டது என்பதால் எங்களது தயாரிப்பு முறையை மற்றவர்கள் மிகச்சரியாக மறுதயாரிப்பு செய்வது கடினமாகும்.”

மும்பையில் துவங்கி இந்தியா முழுவதும் தற்போது இவர்களது தயாரிப்புகள் ஆன்லைனிலும் மும்பையில் சிறிய கடைகளிலும் கிடைக்கிறது. 40 சிறந்த பார்களுடன் இணைந்துள்ளனர். இதில் LIVitup-ஐ முதலில் சோதனை செய்துவிட்டு பிறகு சில்லறை வர்த்தகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். பார் ப்ரொமோஷன் மூலமாக மும்பையில் மட்டும் 50,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தயாரிப்பை பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்தார் அர்ஜுன். சரியான இடங்களில் வாடிக்கையாளர்களை கவர Sula Fest போன்ற சில மியூசிக் ஃபெஸ்டிவலுடன் இணைந்துள்ளனர். 

இரவு வாழ்க்கையை அனுபவிக்க வாடிக்கையாளர்கள் செல்லும் பல்வேறு மதுபானக் கடைகளுடன் இணையும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல HERBOfit–ற்காக ஜிம், யோகா மற்றும் சூம்பா வொர்க்‌ஷாப்கள், உணவியல் வல்லுநர், ஊட்டச்சத்து நிபுணர் ஆகியோருடன் இணைந்துள்ளனர்.

”குறுகிய கால திட்டமாக மும்பை மற்றும் பூனேவின் வெளிப்புறப் பகுதிகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்ததாக இந்தியாவின் மேற்கு பகுதிகளுக்கு தயாரிப்புகளை எடுத்துச் செல்வோம். அனைத்து சந்தைகளிலும் நீண்ட காலம் நிலைத்திருக்கும் ப்ராண்டை உருவாக்க ஒரு சிறிய ஆனால் சரியான உள்கட்டமைப்பை துவங்குவதில் எங்களது விற்பனைக் குழு கவனம் செலுத்தி வருகிறது.”

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் கிடைக்கும் தொடர் ஆர்டர்கள் வேகமாக விரிவுபடுத்தும் பணியை மேற்கொள்ளத் தூண்டியது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 9 நபர்களாக இருந்த இவர்களது குழு இன்று உற்பத்தி, விற்பனை, மார்கெட்டிங், அக்கவுண்ட்ஸ் என 40-க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டுள்ளது.

Dr.Vaidya’s-ன் தனித்துவம்

ஹிமாலயா, இமாமி, டாபர் போன்ற பிரபலங்கள் ஏற்கெனவே சந்தையில் சிறப்பாக செயல்பட்டு பதஞ்சலி தயாரிப்புகளும் பிரபலமாகி வரும் நிலையில் Dr Vaidya’s எவ்வாறு தன்னை வேறுபடுத்திக் காட்டப்போகிறது? பிரபல தயாரிப்புகள் குறித்து அர்ஜுன் கூறுகையில், 

“அவர்கள் பல்லாண்டுகளாக செய்து வந்ததைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். எனக்கு அவர்கள் மீது அளவலாவிய மரியாதை உண்டு. பதஞ்சலியைப் பொருத்தவரை அவர்களது தயாரிப்புகளில் 5 சதவீதத்திற்கும் குறைவான பொருட்கள் மட்டுமே தனியுரிம சூத்திரங்களில் இருந்து பெறப்பட்டதாகும். அவர்களது பெரும்பாலான தயாரிப்புகள் வருவாயை ஈட்டும் FMGC தயாரிப்புகளாகவே உள்ளது. ஆனால் நாங்கள் எங்களது தனியுரிம பொருட்களை பயன்படுத்தி எங்களது தொழிற்சாலையிலேயே தயாரிக்கிறோம்.” என்கிறார்.

10 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டும் ஆரம்ப நிலையில் தாங்கள் இருப்பதாகவே அர்ஜுன் தெரிவித்தார். அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மிக்குறுகிய காலமான ஆறு மாதங்களில் இவர்களின் தயாரிப்புகள் சீனாவில் கிடைக்கிறது. இவர்களது ஆயுர்வேத ப்ராண்டை உலகெங்கும் எடுத்துச் செல்ல 14 நாடுகளுடன் இணைய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார் அர்ஜுன்.

எதிர்கால திட்டங்கள்

ஏஞ்சல் முதலீட்டிற்கு குடும்பத்தின் தரப்பிலிருந்து கிடைத்தாலும் Series A சுற்றை உயர்த்த திட்டமிட்டுள்ளார் அர்ஜுன். முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றாலும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் நடப்பதற்கான வாய்ப்பில்லை. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சென்றடைவதற்கு முன்னுரிமை அளிக்கிறார் அர்ஜுன். ஒரு வலுவான ப்ராண்டை நிலைநிறுத்தி Dr Vaidya’s தயாரிப்புகளை ஒவ்வொரு வீட்டிலும் பொதுவாக பயன்படுத்தும் விதத்தில் செயல்பட திட்டமிட்டுள்ளார். ஆயுர்வேதத்தால் பலனடைந்த அர்ஜுன் அதன் சக்தியை நம்புகிறார். 

”நாங்கள் ஒரு இந்திய ப்ராண்ட் என்பதை எங்களது ஒவ்வொரு தயாரிப்புகளிலும் உறுதி செய்கிறோம். ஆயுர்வேதத்தின் பாரம்பரிய இந்திய அறிவியலை உலகெங்கும் எடுத்து செல்வதை நீண்ட கால நோக்காமக் கொண்டுள்ளோம்.”

மோடி அரசாங்கம் ஆயுஷ் அமைச்சகத்தை (Ministry of AYUSH) உருவாக்கியதாலும் மாற்று மருந்துகள் மற்றும் தயாரிப்புகளில் ஆர்வம் காட்டப்படுவதாலும் இந்தத் துறைக்கு சக்தியூட்டப்படுகிறது. 440 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுர்வேத மற்றும் ஹெர்பல் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இந்திய ஹெர்பல் துறை 4,205 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளதாக Exim Bank அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு 7,000 கோடியாக உயர்வதற்கான திறன் இந்தத் துறைக்கு உள்ளது. இந்தத் துறை வளர்ச்சியடைந்தும் விரிவடைந்தும் வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அரசாங்கத்தின் தரப்பிலும் ஆதரவளிக்கப்படுகிறது. இதனால் நியூ ஏஜ் நுகர்வோருக்கு புதிய பேக்கேஜ்களில் மதிப்பு கூட்டி ஆயுர்வேதப் பொருட்களை அளிக்கும் அர்ஜுனின் திட்டம் நிச்சயம் வெற்றிபெறும்.

ஆங்கில கட்டுரையாளர் : தன்வி துபே