உணவகங்களில் சாப்பிடுவோர் இனி விருப்பப்பட்டால் மட்டுமே சேவை கட்டணம் செலுத்தலாம்!

0

ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்களில் சாப்பிட செல்லும் மக்கள், தாங்கள் விருப்பப்பட்டால் மட்டுமே சேவை கட்டணம் (service charges) செலுத்த முன் வரலாம் என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை இன்று கூறியுள்ளது. சேவை கட்டணத்தை கட்டாயமாக்க வேண்டாம், என்றும் நுகர்வோரின் விருப்பத்துக்கு ஏற்ப அதை பெறலாம் என இந்திய உணவகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவகங்களில் நாம் சாப்பிட்ட உணவின் கட்டணத்தில் சேவை வரியுடன் கூடுதலாக சேவை கட்டணமும் வசூலிக்கப்படுவது வழக்கம். உணவகங்களின் சேவை திருப்தியளித்தால் மட்டும் வாடிக்கையாளர்கள் இந்த சேவை கட்டணத்தை இனி செலுத்தலாம். விருப்பமில்லாதவர்கள் செலுத்தத் தேவையில்லை. 

உணவகங்களில் பொதுவாக 5%-20% வரை சேவை கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். உணவு உண்போர் கட்டாயப்படுத்தி சேவை கட்டணம் செலுத்தி வருகின்றனர். தற்போது வந்துள்ள அறிவிப்பின் படி, விருப்பப்பட்டால் மட்டுமே ஒருவர் உணவு உண்டபின் சேவை கட்டணத்தை செலுத்தலாம். இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை எல்லா மாநில அரசையும் நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளுக்கு இதை தெரியப்படுத்த கேட்டுக்கொண்டுள்ளது. அதே போல் எல்லா உணவகங்களிலும் இந்த அறிவிப்பை காட்சிப்படுத்தும் விதத்தில் பலகைகள் வைக்கவும் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை தெரிவித்துள்ளது.