மீதமாகும் உணவை தேவை இருப்போருக்குக் கொண்டு சேர்க்கும் உன்னத மனிதர்!

1

”பசியோடு இருப்பவருக்கு உணவைத் தவிர வேறு எந்த மொழியும் புரியாது...” – இது மகாத்மா காந்தியின் வரிகள். 

மைசூருவைச் சேர்ந்த ஹெச் ஆர் ராஜேந்திரா உணவு விடுதிகள், திருமணங்கள், பார்ட்டி ஹால் போன்ற இடங்களில் இருந்து மீதமாகும் உணவை சேகரித்து ஏழை மக்களுக்கும் பசியுடன் இருப்போருக்கும் விநியோகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக ’உணவு வீணாதல்’ மற்றும் ’உணவுத் தேவை’ ஆகியவற்றிற்கிடையே இருக்கும் இடைவெளியை நிரப்ப முயற்சி மேற்கொண்டு வருகிறார். தயாரிக்கப்பட்ட அதிகப்படியான உணவு வீணாக்கக்கூடாது என்பதில் தனிப்பட்ட முறையில் அவருக்கு மிகுந்த அக்கறை இருந்த காரணத்தினாலேயே வீடு கட்டவேண்டும் என்கிற திட்டத்தைக் கைவிட்டு அந்த நிதியைக் கொண்டு தன்னார்வலர்கள், ஓட்டுநர்கள், மீதமிருக்கும் உணவை சேகரித்து விநியோகிக்க உதவும் வாகனம் ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தினார். சில மாதங்களிலேயே அக்‌ஷய ஆஹாரா ஃபவுண்டேஷன் (AAF) அறிமுகப்படுத்தினார்.

மத்திய அரசாங்க ஊழியரான ராஜேந்திரா, வாரத்தில் ஐந்து நாட்கள் பணியாற்றுகிறார். இருப்பினும் தனது திட்டத்திற்காக நேரம் ஒதுக்கி காலை முதல் இரவு வெகு நேரம் வரை அழைப்புகளை ஏற்கிறார். ஏனெனில் சமையல் செய்பவர்கள் சிற்றுண்டி / மதிய உணவு நேரம் / இரவு உணவு நேரம் முடிந்த பிறகே அழைப்பார்கள்.

குடிசைப்புற மக்கள் தங்களது பகுதியில் அரசு சாரா நிறுவனத்தின் வாகனத்தைக் கண்டால் உணவைப் பெற்றுக்கொள்ள வேகமாக விரைந்து செல்கின்றனர். இது நகரில் பல்வேறு குடிசைப்பகுதிகளில் வழக்கமாக நடக்கும் ஒரு காட்சியாகும். அப்படிப்பட்ட ஒரு காட்சியே அவருக்கு உந்துதலளித்துள்ளது. அவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை ஒரு கூட்டத்தில் அதிகப்படியான உணவு வீணாவதைக் கண்டார். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண முடிவெடுத்தார்.

ராஜேந்திரா பல இடங்களைப் பார்வையிட்டு குடிசைப்பகுதிகள், அரசு மருத்துவமனைகள், ஏழை மக்களின் வசிப்பிடங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து பட்டியலிட்டார். திருமணங்கள், விழா அரங்குகள், பெரிய உணவகங்கள் போன்ற இடங்களுக்குச் சென்று அவரது தொலைபேசி எண்ணைப் பகிர்ந்துகொண்டார். அவர்களது சமையலறையில் உள்ள அதிகப்படியான உணவை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

”அதிகப்படியான உணவை நாங்கள் இலவசமாகவே பெற்றுக்கொள்கிறோம். இந்த உணவை வழங்கும் அனைத்து கொடையாளிகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் உணவை சேகரிக்கவும் எங்களது மினி வேன்களில் அந்த உணவை அரசு மருத்துவமனைகள், குடிசைப்பகுதிகள், ஏழை மக்களின் வசிப்பிடங்கள் போன்றவற்றிற்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவு மிகவும் அதிகமாக உள்ளது. எங்களது இந்த உன்னத நோக்கத்திற்காக ஒத்த சிந்தனையுடைய மக்கள் கொடையளிக்கவேண்டும் என விரும்புகிறேன்,” என்றார்.

ராஜேந்திரா பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று உணவு வீணாக்கப்படுவதை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அத்துடன் மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஃபவுண்டேஷனில் தன்னார்வலர்களாக பணிபுரியவும் ஊக்குவித்தார்.

”என்னுடைய சேமிப்பை ஃபவுண்டேஷனுக்காக செலவிட்டேன். அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல நிதி உயர்த்த திட்டமிட்டுள்ளேன். சிலர் எங்களது இரு சக்கர வாகனங்களுக்கான பெட்ரோல் செலவை ஏற்றுக்கொள்கின்றனர். சிலர் ரொக்கமாக நன்கொடை அளிக்கின்றனர். ஒரு மாதத்திற்கு உணவை சேகரித்து விநியோகிப்பதற்கான செலவு சராசரியாக 60,000 ரூபாய் ஆகும்,” என்றார் ராஜேந்திரா.

இக்குழுவிற்கு தினமும் சராசரியாக 50-60 ஆர்டர்கள் கிடைக்கின்றன. திருமணங்கள் அதிகம் நடைபெறும் மாதங்களில் இந்த எண்ணிக்கை அதிகளவு உயரும். இவர் 8,000 – 10,000 சாப்பாடுகளை விநியோகித்த நாட்களும் உண்டு. அவர் கூறுகையில்,

”குடிசைப்பகுதியில் பசியோடு வாடும் குழந்தைகளின் முகத்தில் சிரிப்பை பார்க்கும்போதும் அரசு மருத்துவமனைகளில் நோயாளியை அருகில் இருந்து பராமரிப்பவரின் முகத்திலும் சிரிப்பைப் பார்க்கும்போது நான் உணவை சேகரித்து விநியோகிப்பதில் சந்திக்கும் அத்தனை கஷ்டங்களும் மறைந்துவிடும்,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL