கிளாஸ்... மாஸ்..? - எந்த நெருப்பைப் பற்றப் போகிறான் கபாலி?

0

#நெருப்புடா... #ரஜினிடா...

‘சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் அப்போ மட்டும், தமிழ்நாட்டுல எல்லோருமே ரஜினி ரசிகன் தான்’ என்று சொல்லப்படுவதுண்டு... அது, எந்தளவுக்கு உண்மை என்பது கடந்த 24 மணிநேரத்தில் சமூக வலைத்தளங்கள் திருவிழாக் கோலம் ஆனதை பார்க்கும்பொழுது தெரிந்திருக்கும். 

வெறும் 1 நிமிட டீசர் முந்தைய YouTube ரெக்கார்டுகளை எல்லாம் அடித்து நொறுக்கியது, கிட்டத்தட்ட இணையத்தை பயன்படுத்துபவர்கள் யாரும் இந்த டீசரை பார்க்காமல் இருந்திருக்கமாட்டார்கள் என்றே சொல்லலாம். 

ஒவ்வொருவர் profile picture’இலும், மொபைல் wallpaper’இலும் #கபாலி தான்!!

எப்படி ரஜினி என்கிற மனிதனுக்கு மட்டும் இப்படியொரு சக்தி, புகழ், ரசிகர் கூட்டம்?

எப்படி சாத்தியம் இது?

இவருக்கு உடம்பு சரியில்லை என்றால் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் மொட்டை போட்டு வேண்டுகிறார்கள். இவர் படம் ரிலீஸ் என்றால் தமிழ்நாடே பரபரப்பாகிறது. குழந்தைகள் முதல் தாத்தாக்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர் இவர். 

65 வயதான இவர் தன் வயதில் பாதி கூட இல்லாத அழகு நடிகைகளுடன் நடிக்கும்பொழுதும் கூட, இவரது வசீகரமே காந்தமாய் ஈர்க்கிறது. தமிழ் சினிமா மற்றும் தென்னிந்திய சினிமாவின் வியாபார எல்லையை தனது ஒவ்வொரு படத்தின் மூலமும் விரிவாக்கிக் கொண்டே போகும் ராட்சஷன், இந்த ‘சூப்பர் ஸ்டார்’! 

40 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார் ரஜினிகாந்த்; தான் நடித்ததில் 90% படங்களுக்கு மேல் வெற்றிப்படங்களை மட்டுமே தந்தவர். ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்கிற பெருமையை கொண்டவர் ரஜினிகாந்த். ஜப்பான் உட்பட உலகத்தின் பல நாடுகளில் இவருக்கு பெரும் கூட்டம் கொண்ட ரசிகர் மன்றங்கள் உண்டு. 

அது மட்டுமில்லை, CBSE பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே! ஆம், இவரது வாழ்க்கை வரலாறு ‘From Bus Conductor to Superstar’ என்கிற பெயரில் பாடமாக உள்ளது. இத்தனை புகழ்களையும் கொண்ட ‘சூப்பர் ஸ்டார்’, எளிமையின் உச்சம்! 

தன் முதுமையை என்றுமே மறைக்க விரும்பாதவர்; இந்தியா முழுக்க உள்ள மெகா நட்சத்திரங்களில் இப்பொழுது வரை 'விக்'கை பயன்படுத்தாத வெகு சில ஸ்டார்களில் ஒருவர். ‘Big B’ என அழைக்கப்படும் அமிதாப் பச்சன் கூட பொது இடங்களில் எப்பொழுதுமே தன்னை படு ஸ்டைலாக காட்டிக்கொள்ளவே விரும்புவார், தனக்கெனஒரு stylist’டை உடன் வைத்திருப்பார்; ரஜினிகாந்தின் stylist, ரஜினிகாந்த் மட்டுமே! விளம்பர படங்களில் நடித்தால், திரையில் தோன்றும் ஒவ்வொரு நொடிக்கும் பல கோடி ரூபாய் தரக்கூட பலர் தயாராக இருந்தும், இன்றளவிலும் எந்த விளம்பரப் படங்களிலும் நடிக்காத நடிகர்களில் ஒருவர். 

சத்தமே இல்லாமல் ஏழை, எளியவர்களுக்கு எண்ணற்ற உதவிகளை சத்தமில்லாமல் எப்பொழுதும் செய்து வருபவர் ‘சூப்பர் ஸ்டார்’. இவை எல்லாம் ‘ரஜினிகாந்த்’ அவர்கள் என்றுமே தமிழ் சினிமாவின் அதிசயமாக கொண்டாடப்படுவதற்கான சில காரணங்களாக இருக்கலாம். 

அவரை விட அழகான நடிகர்கள், இன்னும் சிறப்பாக நடிக்கத் தெரிந்த நடிகர்கள், கட்டுமஸ்தான நடிகர்கள், நன்றாக நடனமாடக்கூடிய நடிகர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் அவர் மட்டுமே ‘சூப்பர் ஸ்டார்’ ஆக இருக்கும் மேஜிக்கை வார்த்தைகளில் மிகச்சரியாக விவரிப்பது ரொம்பவே கடினம். ஒரு சூப்பர் ஸ்டாருக்கு உரிய அத்தனை இலக்கணங்களையும் உடைத்து, உச்சத்தில் இருக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ அவர்! 

கடந்த 25-30 ஆண்டுகளில், ‘சூப்பர் ஸ்டார்’ என்பவர் அனைவராலும் விரும்பப்படும் ஒரு 'brand' ஆகவே பார்க்கப்பட்டு வருகிறார். மற்ற நடிகர்களின் படங்களைப் பொறுத்தவரையில், இரண்டு வகையிலான சினிமா ரசிகர்கள் உண்டு. ஒன்று, நடிகருக்காகவோ அவரது நடிப்புக்காகவோ படத்தைப் பார்ப்பவர்கள்; இரண்டு, யார் நடிகராக இருந்தாலும் நல்ல படங்களை மட்டுமே பார்ப்பவர்கள். 

ஆனால், ‘சூப்பர் ஸ்டார்’ படங்களைப் பொறுத்தவரை இங்கே பெரும்பாலான மக்கள் ரஜினி’க்காக மட்டுமே திரையரங்கை நோக்கி படை எடுப்பவர்கள்; படம் எப்படியிருந்தாலும் சரி, அவரை திரையில் பார்த்து ரசிக்க நினைப்பவர்கள். அதனால் தானோ என்னவோ, பெரும்பாலும் ரஜினி படங்கள் எவருக்கும் நஷ்டத்தைத் தருவதில்லை.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் என்பது வெறும் நடிகரின் பெயர் அல்ல, இது மிகப்பெரிய சக்தி! இந்த மனுஷனுக்கு வயசே ஆகக் கூடாது என வேண்டும் ரசிகர்கள் லட்சக்கணக்கானோர்! எத்தனை படங்கள் வந்தாலும் இன்றும் ரஜினியின் படங்களின் வசூல் தான் Benchmark! 

ஒவ்வொரு ஆண்டும், பல பல புதுமுக நடிகர்களும் வாரிசு நடிகர்களும் சினிமாவில் நுழைகிறார்கள்; இரண்டு இல்லது மூன்று ஹிட் கொடுத்து விட்டாலே, 'மாஸ் ஹீரோ' என்றே சொல்லிக் கொள்கிறார்கள். தங்கள் படங்களின் வசூலினை, சூப்பர் ஸ்டாரின் படங்களோடு ஒப்பிடுகிறார்கள். ‘சின்ன சூப்பர் ஸ்டார்’ ‘ஜுனியர் சூப்பர் ஸ்டார்’ என்றெல்லாம் தனக்குத் தானே பட்டம் போட்டுக் கொள்ளும் நடிகர்களும் இங்கு உண்டு. எல்லாவற்றிற்கும் மேல், சூப்பர் ஸ்டாரின் ஏதாவதொரு மேனரிசத்தையோ, Dialogue Delivery'யையோ, ஸ்டைலையோ, அவரது பாணியிலான பஞ்ச் வசனத்தையோ, தனது படங்களில் பயன்படுத்தாத ஒரு நடிகர் கூட இங்கு கிடையாது. 

அவர் பாணியிலேயே எத்தனை வருடங்கள் நடித்தாலும், எத்தனை ஹிட் கொடுத்தாலும் இங்கே இன்னொரு ‘சூப்பர் ஸ்டார்’ வர முடியாது. ஒரே சூரியன், ஒரே சந்திரன் போல்... என்றைக்குமே ஒரே ‘சூப்பர் ஸ்டார்’ தான். 'துப்பாக்கி', 'மங்காத்தா', 'சிங்கம்' என யார் எவ்வளவு வாரி குவித்தாலும், எந்திரனோ, கபாலியோ வந்தால் அனைவரும் ஒதுங்கியே நிற்பர்!

‘கபாலி’ டீசரைப் பொறுத்தவரை, ரஜினி ரசிகர்கள் அல்லாதவர்களைக் கூட பெருமளவில் கவர்ந்துள்ளது! 12 மணி நேரத்திற்குள் 40 லட்சம் பேரால் YouTubeல் பார்க்கப்பட்டுள்ளது. இந்த படம் அறிவிக்கப்பட்ட பொழுது, ‘கபாலி’ என்கிற டைட்டில் சரியில்லை என்றும் ‘ஒரு இளம் இயக்குனரை நம்பி படத்தைக் கொடுத்துள்ளாரே ரஜினிகாந்த்.. இது எப்படிப்பட்ட படமாக இருக்கும்? ரஜினி படமா? ரஞ்சித் படமா?’ என்றும் பலர் கேள்விகள் கேட்டனர். அதற்கான பதில் அனைத்தும் இந்த டீசரில் உள்ளது.

டீசரைப் பார்க்கும்பொழுது, ஒரு விஷயம் மட்டும் உறுதியாக தெரிகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்க வேண்டும் என இயக்குனர் ரஞ்சித் அணு அணுவாய் ரசித்து எழுதி இயக்கியிருப்பதைப் போல தோன்றுகிறது. தன் தலைமுடியை சிலுப்பிக் கோதிவிட்டு பரபரவென ஸ்டைலாக நடக்கும் அந்த காட்சியில் அப்படியே 1970, 1980களில் இருந்த ரஜினிகாந்தைப் பார்க்க முடிகிறது!

கடந்த பத்தாண்டுகளில் ரஜினி ரசிகர்கள் அவரை எப்படி காண வேண்டுமென தவித்திருப்பார்களோ, அப்படியே இருக்கிறார் ‘சூப்பர் ஸ்டார்’! அந்த காட்சியிலும், ‘SUPER STAR’ என பெயர் போட்டு சந்தோஷ் நாராயணனின் தெறிக்கும் பின்னணி இசையைக் கேட்கும்பொழுதும் விவரிக்க முடியாத ஒரு ஆனந்தம் தொற்றிக்கொள்கிறது. 

‘இந்த படம் எப்போடா ரிலீஸ் ஆகும்?’ என கத்தத் தோன்றுகிறது! “நம்பியார் கூப்பிட்டதும் வந்து குனிஞ்சு ‘சொல்லுங்க எஜமான்’ன்னு நிப்பானே, அந்த மாதிரி கபாலி’ன்னு நெனச்சியாடா” என்கிற வசனத்தில் அந்த பெயருக்கான அடையாளத்தை உடைத்து தனக்கே உரிய ஸ்டைலில் சமுதாய அரசியல் பேசுகிறார் ரஞ்சித். 

‘மெட்ராஸ்’ படத்தில் குனிந்தே கிடக்கும் மக்களைப் பற்றி  வரும் ஒரு வசனத்தை நினைவுப்படுத்தும் இந்த காட்சியே இந்த படத்தின் டைட்டிலையும் அற்புதமாக நியாயப்படுத்தி விடுகிறது. ரஞ்சித் ஸ்டைலில் ரஜினி ரசிகர்களுக்குமான ஒரு ஆக்ஷன் படமாக ‘கபாலி’ இருக்குமென தோன்றுகிறது;

மேக்கிங்கைப் பார்க்கையில் ‘Godfather’, ‘Scarface’ போன்றதொரு தாறுமாறான ஆக்ஷன் படத்தை எதிர்பார்க்கலாம் என்கிற நம்பிக்கையைத் தருகிறது. ஸ்டார், மாஸ் என்கிற வட்டம் தாண்டி ரஜினி ஒரு மிகச்சிறந்த நடிகர். ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’, ‘தளபதி’ என இவர் நடிப்பில் மின்னிய படங்கள் எத்தனையோ உண்டு! தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்காக மட்டுமே ‘பாட்ஷா’, ‘படையப்பா’, ‘முத்து’, ‘சிவாஜி’ போன்ற முழுக்க முழுக்க style factorகள் நிரம்பிய படங்களில் நடித்தார் ரஜினி.

‘கபாலி’ திரைப்படம் இந்த இரண்டு தரப்பு ரசிகர்களையுமே திருப்திபடுத்தும் வகையில் ஒரு பக்கா ‘கிளாஸ் + மாஸ்’ படமாக இருக்குமென நம்பலாம். எது எப்படியோ, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையிலும், முந்தைய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்களை எல்லாம் நொறுக்கும் வகையிலும் ‘கபாலி’ தயாராகிக் கொண்டிருக்கிறான்... 

முந்தைய ரஜினி பட வசூல் சாதனைகளை, அவரே தானே முறியடிக்க வேண்டும்! :-)

(இந்த கட்டுரையை எழுதியவர் கலிலூர் ரஹ்மான். MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் HR ஆக பணிபுரிந்து வரும் இவர் சிறுவயது முதலே சினிமா மீது தீராக்காதல் கொண்டு; திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற கனவோடும் இருந்தார். தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதும், திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள் / பதிவுகள் எழுதுவதும் பொழுதுபோக்காக கொண்டுள்ளார். நண்பர்கள் இயக்கும் குறும்படங்களுக்கும், திரைப்படங்களுக்கும் திரைக்கதை குறித்து Consulting செய்துவருகிறார். அவரை தொடர்பு கொள்ள்- ஃபேஸ்புக் பக்கம்)

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

இணையத்தை அதிரவைத்த 'கபாலி' டீசர்!