பாரம்பரிய பைத்தானி புடவை வகைகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பொறியாளர்!

0

மகாராஷ்டிரிய திருமணங்களில் மணப்பெண் அலங்காரத்தில் முக்கிய அம்சமாக விளங்குவது பைத்தானி புடவைகள். இந்தியாவின் கைத்தறி புடவை வகைகளில் பைத்தானி ‘பட்டின் ராணி’ என்கிற பெருமையுடன் திகழ்கிறது.

மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத் பகுதியில் உள்ள பைத்தான் நகரில் உருவாக்கப்படுவதால் பைத்தானி புடவை என்கிற பெயர் வந்தது. ஆறு கஜம் மற்றும் ஒன்பது கஜங்களில் கிடைக்கும் இந்தப் புடவையின் இருபுறமும் ஒரே மாதியாக நெய்யப்பட்டிருப்பதே இதன் சிறப்பம்சம். புடவைகள் அகலமான பார்டருடன் அமைந்திருப்பது இவர்களது தனித்துவமான பாணியாகும். இதை அணியும் போது மிகவும் அழகாக காட்சியளிக்கும்.

நெசவாளர்கள் தங்களது பாரம்பரியத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்துவிட்ட நிலையில் இந்தியாவின் பெரும்பாலான கைத்தறிப் புடவைகளைப் போலவே பைத்தானி புடவைகளும் விசைத்தறியால் நெய்யப்படுகிறது.

ஆரத்தி பாந்தல் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ’ஒன்லி பைத்தானி’ (Only Paithani) நிறுவினார். இந்நிறுவனம் அதிகம் கவர்ந்திழுக்கும் வடிவமைப்பு கொண்ட பைத்தானி புடவைகளை தொகுத்து வழங்குவதில் தனி கவனம் செலுத்துகிறது. தற்போது வளர்ச்சியடைந்து உயர்தரமான தனித்துவமான வடிவமைப்பு கொண்ட கைத்தறி ஆடை வகைகளையும் தொகுத்து வழங்குகிறது.

ஆர்த்தி எலக்ட்ரானிக்ஸ் பொறியாளர். எல் & டி தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றார். 2001-ம் ஆண்டு முதல் 2008 வரை விற்பனைப் பிரிவில் பணியாற்றினார்.

இவர் யதேச்சையாகவே தொழில்முனைவில் ஈடுபட்டார். 

“ஆடைகள் குறிப்பாக புடவைகள் எனக்கு மிகவும் நெருக்கமானவை. என் அம்மாவிற்கு புடவை மீது ஈடுபாடு அதிகம். ஆர்வமாக புடவைகள் வாங்கி அதை முறையாகப் பராமரிப்பார். அவரைப் பார்த்து வளர்ந்ததால் எனக்கும் புடவை மீது ஆர்வம் ஏற்பட்டது. 2006-ம் ஆண்டு எனது திருமணத்திற்காக மும்பையில் ஷாப்பிங் செய்யும்போது ஒரு நல்ல பைத்தானி புடவையை கண்டறிவதில் சிரமத்தை சந்தித்தோம். மிகப்பெரிய கடைகளில்கூட 10-12 புடவைகளே இருந்தது. வழக்கமான மந்தமான நிறங்களிலேயே புடவைகள் இருந்தது. அதிக தேர்வுகள் இல்லை."

ஆர்த்தி இதை மாற்ற விரும்பினார். “2008-ம் ஆண்டு நான் என்னுடைய பணியை விட்டுவிட தீர்மானித்தபோது ஆன்லைன் பிரிவில் செயல்படுவது குறித்து ஏற்கெனவே திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். என்னுடைய புகுந்த வீட்டினர் சுயசார்புடன் இருப்பதற்கும் சாதிப்பதற்கும் அதிக ஊக்கமளித்தனர். என்னுடைய கணவரும் முதல் தலைமுறையைச் சேர்ந்த தொழில்முனைவர். அமெரிக்காவில் வசிக்கும் என்னுடைய மைத்துனர் ஆன்லைன் புடவை சந்தையில் கவனம் செலுத்தலாம் என பரிந்துரைத்தார். எனக்கு முதலில் நினைவிற்கு வந்தது பைத்தானி புடவைகளே,"  என்றார்.

மேலும், “இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்த போது மஹாராஷ்டிராவைத் தவிர பிற பகுதிகளில் பைத்தானி புடவைகள் பிரலமாக அறியப்படாததை உணர்ந்தோம். இவ்வளவு பாரம்பரியமான புடவை வகை பிற பகுதிகளில் பிரபலமாகாத நிலையை எண்ணி வருந்தினோம். அப்போதுதான் பைத்தானி புடவைகளை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்று தீர்மானித்தேன். பைத்தானி குறித்து அதிகம் ஆராய்கையில் எனக்கு அதன் மீதான ஈடுபாடும் அதிகரித்துக்கொண்டே வந்தது,” என்றார்.
’ஒன்லி பைத்தானி’ நிறுவனத்தின் 80 சதவீத தொகுப்புகள் அவர்களது சொந்த தறியில் கைகளால் நெய்யப்பட்டதாகும். இதற்கான வண்ணங்களின் கலவை மற்றும் வடிவமைப்பை ஆர்த்தி தீர்மானிக்கிறார். 

“நாங்கள் பைத்தானியின் உண்மையான வேலைப்பாடுகளை தக்கவைத்துக்கொள்ள பாரம்பரிய வடிவமைப்பையே பயன்படுத்துகிறோம். கட்டங்களைக் கொண்ட வகை, மென்மையான வெளிர் நிறங்களைக் கொண்ட வகைகள் என புதுமைகளையும் புகுத்துகிறோம். பைத்தானி வடிவமைப்புகளில் மிகவும் பழமையானவற்றை மீட்டெடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். மற்ற புடவைகளின் தொகுப்பிற்கு நேரடியாக நெசவாளர்களுடன் பணியாற்றுகிறோம். ஆர்டரின் பேரில் இவை நெய்து தரப்படும். சில சமயம் எங்களது சேகரிப்பிற்காகவும் புடவைகளை தேர்ந்தெடுக்கிறோம்,” என்றார்.

’ஒன்லி பைத்தானி’ நேரடியாக நெசவாளர்களிடம் மட்டுமே இணைந்து செயல்படுகிறது. இடைத்தரகர் அல்லது ஏஜெண்டுகளின் தலையீடு அனுமதிக்கப்படுவதில்லை. இங்குள்ள ஆடைகள் கைகளால் நெய்யப்படுவதுடன் கைகளாலேயே சாயம் போடப்படுகிறது. நெசவாளர்கள் பொதுவாக பைத்தானி புடவைகளை மயிலின் உருவத்துடன் நெய்வது வழக்கம். ஆனால் தாமரை, aswali ஆகியவற்றை புடவைகளில் நெய்வதற்காக ஒன்லி பைத்தானி கைவினைஞர்களுடன் இணைந்து செயல்படுகிறது. இதுவே ஒன்லி பைத்தானியின் ஒவ்வொரு புடவையையும் தனித்துவம் வாய்ந்ததாக மாற்றுகிறது.

”பைத்தானி புடவைகள் திருமணம், பண்டிகை போன்ற சிறப்புத் தருணங்களுக்காகவே வாங்கப்படுவதால் இவை எப்போதும் விலையுயர்ந்ததாக உள்ளது. ஒரு பைத்தானியைத் தயாரிக்க செலவிடும் நேரத்தை ஈடுசெய்யும் வகையிலேயே அதன் விலை அமைந்துள்ளது. உதாரணத்திற்கு கைகளால் நெய்யப்படும் பைத்தானி புடவையின் அடிப்படை ரகத்தை தயாரித்து முடிக்க ஒன்பது முதல் 10 நாட்களாகும். அத்துடன் சரிகை மற்றும் பட்டு உயர்தரமாக இருக்கவேண்டும்.”

ஒன்லி பைத்தானியில் பைத்தானி மட்டுமல்லாமல் மஹேஷ்வரி, சந்தேரி, இக்கத் போன்ற வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.

இவை அதன் வலைதளங்கள் வாயிலாகவும் மும்பை மற்றும் பெங்களூருவில் உள்ள கடை வாயிலாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இவர்களது புடவைகளை உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்து பெறுகின்றனர்.

இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களும் இந்தப் புடவை வகைகளை தொடர்ந்து அணிய விரும்புவதால் இது புத்துயிர் பெற்றிருப்பதைக் கண்டு ஆர்த்தி மகிழ்ச்சி அடைந்துள்ளார். புடவைகளை தினசரி அணிவது சிரமமானதாகவே பார்க்கப்பட்டது.

“இந்த நிலை மாறி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இது மிகவும் பிரபலமாகி வருகிறது. இளம் தலைமுறையினர் இதை அதிகம் விரும்பி அணிவதைக் காண முடிகிறது. அது மட்டுமல்லாது புடவை அணிவதை ஊக்குவிக்கும் வகையில் பல ஹேஷ்டேக்குகள் (#100sareepact, #sareespeak etc.) வாயிலாக சமூக வலைதளங்களிலும் பிரபலமாகி வருகிறது. தற்போது பல இளம் நிர்வாகிகளும் வாரத்தில் இருமுறையாவது பணியிடத்திற்கு புடவை அணிய விரும்புகின்றனர். இந்த மிகப்பெரிய மாறுதல் வரவேற்கத்தக்கதாகும்,” என்றார்.

பல்வேறு நிறங்களில் காட்டன் பைத்தானி புடவைகள், இர்கல்ஸ், கந்தா வேலைப்பாடுள்ள புடவைகள், கலம்காரி, மிருதுவான பட்டு என பல்வேறு வகைகள் ஆர்த்திக்கு பிடித்தமான ரகங்களாகும்.

ஒன்லி பைத்தானி நிறுவனம் தற்போது சுயநிதியில் இயங்கி வருகிறது. ஆர்த்தி தனது போர்டல் வாயிலாக பைத்தானி மற்றும் அதிகம் அறியப்படாத கைத்தறி வகைகளை இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும் எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

ஆங்கில கட்டுரையாளர் : ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில் : ஸ்ரீவித்யா