திருடப்பட்ட சிலைகளை ரகசியமாக மீட்கும் அமைப்பு!

0

நாடு முழுவதும் கோவில்கள் தொடர்பாக பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக பெண்கள் கோவிலுக்குள் செல்லலாமா கூடாதா? என்ற விவாதம். சில கோவில்களில் வானவேடிக்கை கொண்டாடலாமா என்ற கேள்வி. இது போன்ற பலவற்றைச் சொல்லலாம். ஆனால் ஒரு குழு சத்தமே இல்லாமல் ஒரு மகத்தான வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் ( போட்டோ உதவி : ஐஸ்டாக்) 
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் ( போட்டோ உதவி : ஐஸ்டாக்) 

‘த இண்டியா பிரைட் பிராஜக்ட்’ என்ற பெயரில் உலகம் முழுக்க இருக்கும் தன்னார்வலர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து இந்திய கோவில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளையும் புராதன சின்னங்களையும் மீட்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள்.

“இந்தியக் கலைப்பொருட்களின் திருட்டு என்பது பல நூற்றாண்டுகளாக நடைபெற்றிருக்கிறது. ஆனால் இப்போது நடக்கும் திருட்டுக்குக் காரணம் தீவிரவாத அமைப்புகளோ, எதிரிநாட்டு மன்னர்களோ அல்ல.பேராசை கொண்ட நம் மக்களாலே இது நடைபெறுகிறது,” 

என்கிறார் அனுராக் சக்சேனா. இவர் ஐபிபி என்ற அமைப்பின் இணை நிறுவனராக இருக்கிறார்.

அனுராக் சக்சேனா
அனுராக் சக்சேனா

அனுராக் மற்றும் விஜய்குமார் ஆகிய இருவருக்கும் இந்தியப் புராதனச் சின்னங்கள் மீது அலாதி ஆர்வம். எனவே இவ்விருவரும் இணைந்து ஐபிபி என்ற இந்த அமைப்பைத் துவங்கினர். இந்த அமைப்பு உலகம் முழுவதும் இருக்கும் அருங்காட்சியகங்கள், பழம்பொருள் சேகரிப்பாளர்கள் மற்றும் உலக தலைவர்கள் ஆகியோரிடம் இருந்து இந்திய புராதனச்சின்னங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

அனுராக் தற்போது இங்கிலாந்தைச் சேர்ந்த உலக கல்வி அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். விஜய் கப்பல் வாணிப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இருவரும் தற்போது சிங்கப்பூரில் இருக்கிறார்கள்.

இந்தியா ஒரு எளிய இலக்கு

சமூகவலைதளங்களில் சிலரோடு எதேச்சையாக உரையாடியிருக்கிறார் அனுராக். அப்போது தான் சிலை திருட்டுக்களைத் தடுக்க இந்திய அரசிடம் எந்த அமைப்பும் இல்லை என்று தெரியவந்திருக்கிறது. மும்பையில் கடந்த ஆண்டு நடைபெற்ற இன்க்ராக்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அனுராக். அப்போது என்னிடம் பேசிய அவர், “உலக கலைச்சந்தையைப் பொருத்தவரை இந்தியா ஒரு தோதான இடம். மற்ற தெற்காசிய நாடுகளை விட இந்தியாவிலிருந்து தொன்மப்பொருட்களைத் திருடுவது எளிது என்று அவர்கள் நினைக்கிறார்கள்” என்றார். இது தான் அவரை கடுமையாக பாதித்திருக்க வேண்டும்.

அனுராக் ஒரு உதாரணம் சொன்னார். “நான் ஒரு தனியார் வங்கியாளர், ஸ்விஸ் வங்கிக்காக பணியாற்றுக்கிறேன். எனவே எனக்குத் தெரியும். உங்களிடம் மில்லியன் டாலர் பணம் இருக்கிறது, அதை சூட்கேஸில் வைத்து விமான நிலையத்திற்கு எடுத்து செல்ல முடியாது. சுங்க அதிகாரிகள் பிடித்து விடுவார்கள். ஆனால் மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு ஓவியத்தை எடுத்துச் சென்றால் யாருமே உங்களைத் தடுக்க மாட்டார்கள்” என்றார். சமீபத்தில் வெளியான பனாமா பேப்பர்ஸ் பற்றி நியூயார்க் டைம்ஸில் எழுதியிருந்தார்கள். மொசாக் பொன்சேகா என்ற சட்ட நிறுவனம் ஒன்றிலிருந்து வெளியான 11.5 மில்லியன் கோப்புகள் தான் பனாமா பேப்பர் எனப்படுகிறது. அந்த செய்தியில் புராதன சின்னங்களை விற்பதில் ஆஃப்சோர் ஷெல் நிறுவனங்களின் பங்கு பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.

சிலைகளை திரும்பப் பெறுதல்

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் வளாகத்தில் இருக்கும் ஸ்ரீபுரந்தன் கோவிலில் இருக்கும் மிகப்பழமையான நடராஜர் சிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டது. அது எங்கே என்று ஐபிபி அமைப்பைச் சேர்ந்த விஜய் உள்ளிட்ட சிலர் தேடத் துவங்கினர். கடைசியில் அது ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் இருந்தது. இத்தனைக்கும் அது திருடப்பட்ட ஒன்று என்று தெரியாமலே அருங்காட்சியத்தில் வைக்கும் அளவுக்கு இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய்ப் பிரதமர் மோடியைச் சந்தித்து நடராஜர் சிலையை வழங்கிய ஆஸ்திரேலியப் பிரதமர்
இந்திய்ப் பிரதமர் மோடியைச் சந்தித்து நடராஜர் சிலையை வழங்கிய ஆஸ்திரேலியப் பிரதமர்

“கடந்த செப்டம்பர் 2014ல் ஒரு அதிசயம் நடந்தது. ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் இந்தியா வரும்போது அந்த நடராஜர் சிலையையும் கொண்டு வந்தார்,” என்கிறார் அனுராக். பிரகதீஸ்வரர் கோவிலுக்கு ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. இந்திய அரசாங்கம் 1954ம் ஆண்டு வெளியிட்ட ஆயிரம் ரூபாய் தாளில் பிரகதீஸ்வரர் கோவில் வளாகத்தின் படம் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிரகதீஸ்வரர் கோவில் வளாகம் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. மன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இந்த கோவில் வளாகத்தில் இருக்கும் பெரும்பாலான கோவில்களில் உள்ள பல புராதனச்சின்னங்கள் திருடப்பட்டிருக்கின்றன. பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்து ஸ்ரீபுரந்தன் கோவில் ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

“நாங்கள் எல்லோரும் குழுவாக சேர்ந்து கூகிளில் தேடுகிறோம். அதேபோல சமூகவலைதளங்களில் ஆர்வமாக இருக்கும் சிலரையும் அணுகி சிலை திருட்டு தொடர்பான தகவல்களை சேகரிக்கிறோம். யார் திருடுகிறார், இது யாருக்கு விற்கப்படுகிறது என்பது போன்ற தகவல்களை திரட்டுகிறோம்” என்றார் அனுராக்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் நடத்திய தீவிர பிரச்சாரத்தின் விளைவாக பல் சர்வதேச அருங்காட்சியங்கள் விழிப்படைந்திருக்கின்றன. சர்வதேச ஊடகங்கள் விரைவில் விழிப்படையும். அப்போது அவர்கள் நாட்டு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து திருடப்பட்ட பொருட்களை திருப்பி அளிக்கச் செய்யும் என்கிறார்.

ஆஸ்திரேலியப் பிரதமர் நடராஜர் சிலையை வழங்கியதைத் தொடர்ந்து, கனடா பிரதமரும் தங்கள் நாட்டில் உள்ள திருடப்பட்ட சில சிலைகளை வழங்கியிருக்கிறார். இதேபோல கடந்த அக்டோபர் 2015ம் ஆண்டு ஜெர்மன் நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் இந்தியா வந்தபோது, பிரதமரை சந்தித்து பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த துர்க்கை சிலையை வழங்கினார். இது காஷ்மீரில் உள்ள கோவிலில் இருந்து இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு தொலைந்த ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

துர்க்கை சிலையை வழங்கிய ஜெர்மன் பிரதமர்
துர்க்கை சிலையை வழங்கிய ஜெர்மன் பிரதமர்
“இந்தியாவைப் பொருத்தவரை பூகோள அரசியல் வெற்றி என்பது உண்மையான சந்தோசத்தைக் கொடுக்காது. உண்மையான சந்தோசம் என்பது ஒரு கிராமத்திலிருந்து சென்றுவிட்ட தெய்வத்தை மீட்டெடுத்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதே” என்கிறார் அனுராக்.
ஒரு ஒப்பீடு
ஒரு ஒப்பீடு

நடராஜர் சிலை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டபின் அந்த கோயில் தற்போது எப்படியானது என்பதை ஒப்பிட்டு பேசினார்.

“கோகினூர் வைரத்தை எப்போது திருப்பி கொண்டுவரப்போகிறீர்கள்?” என்ற கேள்வியை அவரிடம் முன்வைத்தோம். “இதே கேள்வியை என்னிடம் பலரும் முன்வைக்கிறார்கள். குறிப்பாக பெண்கள் பலர் இந்த கேள்விகள் கேட்கிறார்கள்” என்று கூறி புன்னகைக்கிறார்.

ரகசிய அமைப்பு

ஐபிபியில் இருக்கும் பெரும்பாலான அங்கத்தினர் தாங்கள் யார் என்பதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாதவர்களாகவே இருக்கிறார்கள். காரணம் இது மிகவும் ஆபத்தான ஒரு வேலை. அரசாங்க அமைப்புகளோடு சேர்ந்து யாருக்கும் தெரியாத சில ரகசிய வழிகளில் தொலைந்து போன அரிய பொருட்களை சேகரித்து மீட்டு வருவதென்பது சாதாரண வேலையல்ல.

“இதுவரை எழுபதாயிரம் கலைப்பொருட்கள் இந்தியாவிலிருந்து திருடப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் எப்போது மீட்கப்போகிறோம் என்று தெரியவில்லை. இப்போதைக்கு அவற்றில் 200 மட்டும் கண்டறியப்பட்டிருக்கிறது. அவற்றை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன” என்றார் அனுராக்.

அனுராக் 1998ம் ஆண்டிலேயே சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டார். ஆனாலும் தற்போது இந்திய பாஸ்போர்ட்டை புதுப்பித்தே வருகிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இதுபோன்ற செயல்பாடு சாத்தியமில்லாத ஒன்று என்கிறார். “இப்போது தொழில்நுட்பமும் இணையமும் வளர்ந்திருக்கிறது. நாம் அதை பயன்படுத்தி இவையெல்லாம் செய்ய முடிகிறது” என்றார்.

இந்த மாதம் சென்னை, பெங்களூரு மற்றும் புதுதில்லியில் இந்த அமைப்பு சார்பாக ரோட்ஷோ ஒன்று நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதன்மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள்.

ஆங்கிலத்தில் : தீப்தி நாயர் | தமிழில் : ஸ்வரா வைத்தீ

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்