சித்தார்த்தா ஜோஷி, கதைகளை எப்படி படங்களாக மாற்றுகிறார்?

0

புனேயின் வீதிகளில் இருந்து வானுயர கட்டடங்கள் உள்ள சிங்கப்பூர் வரையில் ஜோஷி, தன் கேமராவுடன் மக்களிடம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான், “உங்கள் கனவைச் சொல்லுங்கள்” என்று. எப்போதும் கதைகளையே கவனித்துக் கொண்டிருக்கும் ஊர் சுற்றுவதில் ஆர்வலரான சித்தார்த்தா ஜோஷி கதைகளை அப்படியே படங்களாக உருவாக்கிவிடுகிறார்.

வேலையால் தொழில்துறை வடிவமைப்பாளரான அவர் பயண வலைப்பூ எழுத்தாளர் மற்றும் புகைப்படக்காரர். பக்கத்தில் உள்ளவர்களை புகைப்படங்கள் மற்றும் சுற்றி வாழ்கிற மக்களின் கனவுகள் வழியாக கண்டுபிடிக்க நினைத்தபோது அது எல்லோருக்கும் தெரிந்த சமூகரீதியான விளைவை ஏற்படுத்தும் “உங்கள் கனவைச் சொல்லுங்கள்” (Tell me your Dream) திட்டமாக அழைக்கப்பட்டது.

நாம் சித்தார்த்திடம் பேசியபோது கூடுதல் தகவல்கள் கிடைத்தது…

தொடக்கம்

“என்னுடைய தந்தையிடம் எப்போதுமே கேமரா இருக்கும். அப்படித்தான் என் கைகளுக்கு வந்தது மற்றும் இதயம் போட்டோகிராபிக்குள் வந்தது. அந்த தருணத்தில் நான் ஒரு பயணியாக மாறினேன். எனக்குக் கிடைத்த தருணங்களையும் கேமராவில் பதிவு செய்யத் தொடங்கினேன். தற்போது, நான் கேமராவை பெரிய விஷயங்களை படம்பிடிப்பதற்கான கருவியாகப் பயன்படுத்துகிறேன். மக்களுடைய கனவுகளைப் பகிர்ந்துகொள்ளவும், அவர்களுடைய கனவுகளை பூர்த்தி செய்வதுமான படங்களை கதையாக படம்பிடிக்கிறேன்” என்கிறார் சித்தார்த்தா.

உங்கள் கனவைச் சொல்லுங்கள்

முதலில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் முகங்களுடன் இது தொடங்கப்பட்டது – மளிகைக்கடைக்காரர், துணி வெளுப்பவர்கள், குப்பை சேகரிப்பவர்கள் மற்றும் பலர் என்று உங்கள் கனவைச் சொல்லுங்கள் பற்றி அவர் கூறுகிறார். அவர்களுடைய கனவுகளின் அப்பாவித்தனம்தான் அவருடைய கவனத்தை ஈர்த்தது. அந்தப் படங்கள் எண்ணிக்கையில் வளர்ந்தன. இந்த புதுமையான எண்ணம் சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றது.

இது அவரை கூடுதலாக பயணம் செல்லவும், மேலும் கனவுகள் மற்றும் விருப்பங்களை படம்பிடிக்கவும் உற்சாகப்படுத்தியது. இது அவருடைய மனத்தின் அடி ஆழத்தில் பதிந்து அந்தக் கனவுகளின் மீதான பொறுப்புணர்வை ஏற்படுத்தியது. இப்போது கனவுகளை சைத்தன்யா மகிளா மண்டல் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பாக சேகரித்துவருகிறார். சித்தார்த்தாவின் புகைப்படங்கள் வரும் மக்கள் சாதாரணமாக தெரிவதில்லை. மஹாராஷ்டிராவின் சிவப்பு விளக்குப் பகுதிகளின் முகங்களில் இருந்து உத்தரப்பிரதேச உள்கிராமங்களின் விவசாயிகள் முதல் சிங்கப்பூர் வரையில் அவரது பணி அழைத்துச் செல்கிறது. உலகம்முழுவதும் உள்ள கனவுகளை சித்தார்த்தாவின் கேமரா கொண்டு வந்து விடுகிறது.

அவர் தொடர்ந்து மேலும் பல அமைப்புகளை இணைந்து பணியாற்ற தேடிக்கொண்டிருக்கிறார். அவர்களுடைய கதைகளை உலகுக்கு எடுத்துச்சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் மற்றும் நிதி திரட்டலுக்கும் உதவுகிறார்.

அனுபவங்கள்

பல்வேறு மனிதர்களைப் பார்ப்பது சுவாரசியமான அனுபவம்தான், “ஒருமுறை ஒரு பையனை சந்தித்தேன். அவன் குப்பைகளைச் சேகரித்துக்கொண்டிருந்தான். அவனிடம் உன்னுடைய கனவு என்னவென்று கேட்டேன், டாக்டராக விரும்புவதாகக் கூறினான்” என்கிறார் சித்தார்த்தா. இந்தக் கனவுகள் இதயத்தை நொறுக்கக்கூடியவை அதேநேரத்தில் மேம்படுத்தக்கூடியவை.

மேலும் பல சுவையான அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார். கோவாவில் சந்தித்த ஒரு பெண் அவர் மனத்தில் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளார். “அவர் ஒரு பழைய வீட்டில் வசிக்கிறார். அதை பாதுகாப்பதில்தான் அவருடைய வாழ்க்கை முழுவதும் சுழல்கிறது.” ஆனால் எல்லா அனுபவங்களும் இனிமையானவை அல்ல. எல்லோருமே போட்டோ எடுப்பதற்கு விருப்பம் தெரிவிப்பதில்லை, பேசவும் விரும்புவதில்லை. “புறக்கணித்தல் என் ஊக்கத்தைக் குறைப்பதாக இருக்கும். ஆனால் அதற்குப் பிறகு சிறு புரிதலுடன் அடுத்த நபரை சந்திக்கச் சென்றுவிடுவேன்” என்கிறார் சித்தார்த்தா.

உத்தர்காண்டைச் சேர்ந்த சித்தார்தா, பிறந்தது பிகாரில் தற்போது வசிக்கும் நகரம் புனே. நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்த அவருக்கு, அந்த அனுபவம் வேலையிலும் சிந்தனையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பயணம் தனக்குள் ஏற்படுத்திய தாக்கம் பற்றி அவரே பேசுகிறார்…

“உண்மையில் மக்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே என்னை ஏற்றுக்கொள்ளவைத்தது பயணம் என்று நினைக்கிறேன். நாம் எல்லோருமே வித்தியாசமானவர்கள் மற்றும் தனித்துவமானவர்கள், அனைத்து கருத்துகள் மற்றும் அனைத்து நம்பிக்கைகள் என எல்லோருக்கும் இந்த உலகில் ஓர் இடம் இருக்கிறது. இந்த உலகம்தான் பாதுகாப்பான இடம் என்பதை உணர்ந்துகொள்ள பயணம் உதவுகிறது. மக்களின் ஆழ்ந்த விருப்பங்கள் மறுக்கமுடியாமல் ஒன்றாகவே இருக்கின்றன, அவர்கள் எந்த இடத்தில் இருந்து வந்தாலும் அது பிரச்சினையில்லை.”

உத்வேகம்

நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்திதான் சித்தார்த்தை மிகவும் பாதித்தவர். அவரே கூறுகிறார், “அவர் செய்த பணி பாராட்டத்தக்கதாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அவரோடு சேர்ந்து பணியாற்ற நான் விரும்புகிறேன். ஹெல்ப்பேஜ் இந்தியாவும் மிகச்சிறந்த பணியை செய்கிறது. அவர்களும்கூட என்னுடைய வேலைக்கும் மற்றும் இன்ஸ்டாகிராம் திட்டத்திற்கும் ஆதரவாக இருக்கிறார்கள்.”

உத்வேகம் பற்றிப் பேசினால், அவருடைய படைப்புகள் நம்முடைய மனங்களில் ஆழமான பதிவுகளை ஏற்படுத்துகின்றன. மிக மிக எளிமையான படம் ஒரு கனவுடன் சேர்ந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது

நம்பிக்கை

“அவர்களுடைய கனவுகள் எளிமையானவை. குறிக்கோள் மிக்கவை. என்னை அவை சிரிக்கவைக்கும். என்னுடைய இதயத்தை நொறுங்கவைக்கும், பெரும்பாலானவை எளிமையான கனவுகள். தற்போதைய அவர்களுடைய சூழலை கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள், முடியாத ஒன்றை அவர்கள் காணத் துடிக்கிறார்கள்” என்கிறார் சித்தார்த்.

தன்னுடைய படங்கள் மற்றும் இந்த திட்டம் இந்த விருப்பங்களை பார்வைக்குக் கொண்டு வந்து சரியான மனிதர்களுடன் இணைத்துவைப்பதாக அவருடைய ஒரே நம்பிக்கையாக இருக்கிறது.

“அவர்களுடைய கனவுகளுக்கும் மற்றும் அவற்றை மக்கள் அடைவதற்குமான பாலமாக நான் செயல்படுகிறேன்” என்று முடிக்கிறார்.

எல்லாமே கனவுகளுடன்தான் தொடங்குகிறது. இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

ஆக்கம்: Prateeksha Nayak | தமிழில்: தருண் கார்த்தி