கார்ப்பரேட் முதல் குக்கிராமம் வரை: அர்ச்சனா ஸ்டாலினின் அசத்தல் முகங்கள்!

1

கார்ப்பரேட் பணி, தொழில்முனைவு பயிற்சியாளர், சமூக சேவகர் என பன்முகத்துடன் சமூக மாற்றத்தை நோக்கி பயணிக்கும் அர்ச்சனா ஸ்டாலினின் கடந்து வரும் அனுபவங்கள், எந்தத் துறையிலும் புதிதாக களம் ஈடுபடத் தொடங்கும் பெண்களுக்கு தூண்டுகோலாக அமையும்.

கல்லூரி நாட்கள்தான் பலருக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும். அர்ச்சனாவின் கனவுகளுக்கும், கல்லூரி காலத்தில்தான் வழி பிறந்திருக்கிறது. கல்லூரியில் பயிலும்போதே தன்னுடன் பயின்ற நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் அர்ச்சனா தொடங்கியதே BUDS (Be united to do service) டிரஸ்ட்.

தேனியில் பிறந்து சென்னையில் வளர்ந்த அர்ச்சனா, 2008-இல் BUDS எனும் தன்னார்வ அமைப்பைத் தொடங்கி, கிராமப்புறங்களின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு அடித்தளம் அமைத்தார். குறிப்பாக கிராமப்புறங்களில் வறண்டு கிடக்கும் பராமரிக்கப்படாத நீர்நிலைகளையும், குளங்களையும் குழுவாகச் சென்று மராமத்து செய்து நீர் ஆதாரத்தை பெருக்கி, சுற்றுச்சூழலை வளமாக்க வேண்டும் என்ற சமூக பொறுப்புடன் செயல்படும் அர்ச்சனா ஸ்டாலின், தமிழ் யுவர்ஸ்டோரியுடன் பகிர்ந்து கொண்டவை இதோ...

கடந்து வந்த பாதை

சென்னையில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் பூலோக தகவலியல் (Geo Informatics) படித்து முடித்துவிட்டு, இரண்டு வருடம் டி.சி.எஸ்.சில் பணிப்புரிந்தவர் அர்ச்சனா. பின்பு, தொழில்முனைவில் ஈடுபட முடிவெடுத்து தனது ஐ.டி. பணியை விடுத்து, ஜனவரி 2012-ல், கணவர் ஸ்டாலினுடன் சேர்ந்து "ஜியோ வேர்ஜ்" (Geo Verge) எனும் ஐ.டி. நிறுவனத்தை விருதுநகரில் தொடங்கினார். முதல் தலைமுறை தொழில்முனைவராய் இருந்த அர்ச்சனா, பல ப்ராஜ்க்ட்கள் செய்ததிலும், புதியவர்களை சந்தித்ததிலும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாய் கூறினார். அதன் பின்னர் இரண்டாம் மூன்றாம் கட்ட நகரங்களில் தொழில்முனைவை ஊக்குவிக்கும் மதுரையின் நேட்டிவ் லீட் ஃபவுடேஷனின் (Nativelead Foundation) மையக்குழுவில் சேர்ந்தார்.

"சென்னை தவிர மற்ற நகரங்களிலும் தொழில்முனைவு பெருக வேண்டும். அதனால் இதுவரை மதுரை, திருச்சி, விருதுநகர் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில், 22-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில், 2000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொழில்முனைதல் பற்றி பயிற்சியும், கலந்துரையாடலும் நடத்தியுள்ளேன்" என்றார் பெருமிதத்துடன்.

ஜூலை 2015-ல் நேச்சுரல்ஸ் சலூனின் நிர்வாகக் குழுவில் சேர்ந்தார் அர்ச்சனா. தற்போது, அங்கு ஸ்ட்ரடேஜிக் மார்க்கெட்டிங் தலைமை அதிகாரி உள்ளார். கல்லூரி முடித்து கார்ப்பரேட் பணி, தொழில்முனைவு, பயிற்சியாளர் என்று பன்முகங்களைக் கொண்ட அர்ச்சனா, இதற்கு நடுவில் தன் நண்பர்களுடன் தொடங்கிய BUDS அமைப்பையும் கைவிடாமல் தொடர்வது அவரது சமூக ஆர்வத்தை காட்டுகிறது. 2014-ல் BUDS டிரஸ்ட்டில் அவரது மாமனாரும் இணைந்தார். தற்போது விருதுநகரில் BUDS சேவைகளை மேற்பார்வையிட்டு வருகிறார். 

ஊக்கமும் சேவையும்

"சமுகத்தில் பெரியளவில் மாற்றங்களை நிகழ்த்த IAS அதிகாரியாக ஆக ஆசைப்பட வேண்டும்" என்று கூறிய அவர் தந்தையின் வார்த்தைகளே, சிறிய வயதிலிருந்து அர்ச்சனாவின் ஊக்கத்துக்குக் காரணமாக இருந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் என்.எஸ்.எஸ். மூலம் சமுக சேவைகளைத் செய்ய அவ்வார்த்தைகளே தூண்டுதலாக இருந்ததாகக் கூறினார். இளம் மாணவர்கள் குழுவுக்கு தலைமை வகித்து அப்போதே பல கிராமங்களுக்குச் சென்று பணிபுரிந்துள்ளேன் என்று கூறினார்.

“அப்போது சந்தித்த கிராம மக்களிடம் அவர்களின் குறைகளைக் கேட்டு, நான் வளர்ந்து நல்ல நிலைக்கு வந்தபின் மீண்டும் வந்து அவர்களின் குறைகளை தீர்ப்பேன் என்று அன்று அவர்களிடன் உறுதி அளித்துவிட்டு வந்தேன்,” என்றார்.

BUDS மூலம் பல நற்செயல்களை செய்துவரும் அர்ச்சனா, "ஆரம்ப காலத்தில், 9 வயது குழந்தைக்கு இதய சிகிச்சைக்கு உதவுமாறு, ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபுவிற்கு மெயில் அனுப்பினேன். அதற்கு, அவர் உடனே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, டாக்டர் செரியனை சந்திக்க ஏற்பாடு செய்து உதவினார். 

"நாம் மனம்விட்டு கேட்டால், அதற்கு உதவ உலகமே ஒன்று கூடும் என்று அப்பொழுதுதான் உணர்ந்துக்கொண்டேன்" என்றார்.

கல்லூரியில் நண்பர்களுடன் சேர்ந்து, BUDS குறித்து திட்டமிடல், கருத்து பரிமாற்றம் செய்து வாரக்கடைசி நாட்களில் அனாதை இல்லங்களுக்குச் சென்று உதவிகள் செய்யத் தொடங்கினோம். ஆனால் அவை பெரிதாய் பலன் காணவில்லை. அப்போது தான் ஒரு நாள் ஸ்டாலின், "இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முதலில் அடிமட்ட வேரிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்" என்றார். அன்றிலிருந்துதான் எங்கள் கண்ணோட்டமே மாறியது.

ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று, அங்குள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சித்து சில வருடங்களில் மாற்றங்களை நிகழ்த்த முடிவுசெய்தோம். கல்லூரி காலத்தில், அத்தங்கி காவனூர் எனும் கிராமத்தில் இருந்து எங்கள் பணியைத் தொடங்கினோம். அந்த மக்கள் எங்கள்மீது வைத்திருந்த நம்பிக்கையும் அவர்கள் தந்த ஒத்துழைப்பும் என்னை மேலும் உற்சாகத்துடன் ஊக்குவித்தது என்று தன் ஆரம்பகால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் அர்ச்சனா.

“குத்தம்பாக்கம் கிராமத்தை ஒரு மாடல் கிராமமாக்கிய இளங்கோ மற்றும் கிராம் விகாஸ் அமைப்பின் ஜோ மடியத், ஆகிய இருவருமே என் முன்மாதிரிகள். அவர்கள் இருவரையும் என் வாழ்வில் சந்தித்த்து என் அதிர்ஷ்டம். என் முயற்சிகள் அனைத்துக்கும் ஊக்கப்படுத்தும் நபர்களும் அவர்களே” என்று சிலாகித்தார்.

அர்ச்சனா சந்தித்த சவால்கள்

கல்லூரி காலத்தில் BUDS ஆரம்பிக்கப்பட்டதால், நிதி ஒரு பிரச்சைனையாகவே இருந்தது. என் சீனியர்ஸும் நண்பர்களும்தான் BUDS-ன் முதல் ஆதரவாளர்கள். மாணவர்களை ஈடுபடவைப்பது, ஒரு பிணையம் உருவாக்கி, வேலைகளில் பங்குக்கொள்ள வைப்பதே என் முக்கிய பணியாய் இருந்தது. இதற்காக சில நேரங்களில் என் வகுப்புகளைக் கூட கட் செய்திருக்கிறேன் என்றார்.

தன் கல்லூரி நண்பராகிய ஸ்டாலினுடன் ஏற்பட்ட புரிதல் மற்றும் ஒத்த சிந்தனையின் காரணமாக இருவரும் காதலித்ததாகக் கூறினார் அர்ச்சனா. இவர் 2009-ல், ஸ்டாலினை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் தன்னுடைய எல்லாச் சூழலிலும் கணவர் ஸ்டாலின், மாமியார் மற்றும் மாமனாரின் முழு ஆதரவு, தனக்கு பெரிய பக்கபலமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.

அர்ச்சனா மற்றும் ஸ்டாலின்
அர்ச்சனா மற்றும் ஸ்டாலின்

பல கிராமங்களில் அந்த ஊர் மக்களிடன் தங்களின் பணிகளை புரியவைத்து, வேலைகளை தொடங்குவதும் பெரிய சவால் என்றே கூறுகிறார் அர்ச்சனா. இருப்பினும் இவரும் இவரது குழுவும் முனைப்போடு செயல்பட்டு பல வெற்றிச் செயல்களை நிகழ்த்தியுள்ளனர்.

வளர்ச்சியும் வெற்றிகளும்

கிராமப்புறங்களுக்கு பயனளிக்கும் பல செயல்களில் நாங்கள் ஈடுபட்டாலும், சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கே முதலில் கவனம் செலுத்தினோம். தமிழ்நாட்டில் உள்ள வறண்ட நகரங்களில் ஒன்றான விருதுநகரில், தண்ணீர் பற்றாக்குறை என்றும் ஒரு பெரிய பிரச்சனை. 1960-ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்ரிக்காவில் இருந்து கருவேலம் (Prosopis juliflora) எனும் மர வகைகள், விறகுகளாக எடுத்துவரப்பட்டது. இதன் விதைகள் நீர்நிலையங்களிலும் நிலத்திலும் கலக்க ஆரம்பித்தது. இது நிலத்தடி நீரில் விஷத்தன்மையை கலக்கக்கூடியது. அதனால், இந்த ஜூலிப்பொரா மரங்களை அகற்ற ஆரம்பித்தோம், இதனால் நீர்நிலைகளில் சேரும் குப்பைகளையும் அகற்றினோம்.

"இதுவரை 12 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கருவேல மரங்களை அகற்றியுள்ளோம். அதற்கு பதிலாக புங்கை, வேப்ப செடிகள் நட்டோம். தற்போது கிட்டத்தட்ட 400 மரங்களை நாங்கள் பராமரிக்கிறோம். இதனால் 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிக்கும் நீர் கிடைக்க உதவிக்கொண்டிருக்கிறோம்."

ஆனால் இந்தப் பணிகள் செய்ய நிதியுதவி அதிகம் தேவைப்படுகிறது. அதை சமாளிக்க கூட்டு நிதி மூலம் நிதி பெற முயற்சித்து https://milaap.org/campaigns/restorevirudhunagarpond மூலம் 1,36000 ரூபாய் நிதி திரட்டியுள்ளார். 

அதேபோல் பஞ்சாயத்தில் கஷ்டபட்டு அனுமதி வாங்கி, பல இன்னல்கள் கடந்து ஏறயனையகண்ணூர் குளத்தைச் சுத்தம் செய்தோம்.

கிராமத்தில் நன்றாக பெய்த மழையின் காரணமாக, பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் ஏறையநாயக்கர் ஊரணி குளம் நிரம்பியுள்ளதாக கிராம மக்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அது மறக்கமுடியாத நிமிடம். நாங்கள் செய்த பணிக்குக் கிடைத்த பெரிய வெற்றி அது” என்றார் அர்ச்சனா பூரிப்புப் பொங்க.

இந்த வருடத்திற்குள், இரண்டு குளங்களை சுத்தம் செய்ய பணிகள் தொடங்கியுள்ளோம். கருப்பசாமி குளத்தில் இந்த மாதம் முதல் வாரத்திலிருந்து பணிகளை தொடங்கிவிட்டோம். மேலும், 400 மரங்கள் இந்த வருடத்தில் நட உள்ளதாக கூறுகிறார்.

அர்ச்சனாவின் வருங்கால கனவுகள்

அண்மையில் கார்ப்பரேட் பணியை விட்டுவிட்டு, தொழில்முனைவில் ஈடுபட்டுள்ள இவர், BUDS அமைப்புக்காக முழுநேரமும் ஈடுபட திட்டமிட்டுள்ளார். ”

வருங்காலத்தில் நான் பஞ்சாயத்து தலைவராகி, அரசியலில் ஈடுபடவும் விரும்புகிறேன். பரவலாக்கப்பட்ட அரசாட்சிதான் நல்லாட்சி தரும் என்பதையே நான் நம்புகிறேன். ஆனால், இவை எனது நீண்ட கால லட்சியங்களாகும்."

தன்னைப் போல பல பெண்களும் தாங்கள் நினைக்கும் பணிகளைச் செய்ய இன்று துவங்கிவிட்டதாக கூறும் அர்ச்சனா, இருப்பினும் முன்மாதிரிகளாக பெண்கள் அதிகளவில் இல்லை என்று கவலை தெரிவித்தார். ஆனால் இன்றுள்ள ஏராளமான வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ள பெண்கள் அதிகளவில் வெளிவரவேண்டும் என்றும் கூறுகிறார்.

மாற்றத்தை ஏற்படுத்திவரும் BUDS சேவைகளுக்காக ஜாக்ரிதி யாத்ரா-வில் 450 அடங்கிய குழுவில் ஒருவராக அர்ச்சனாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

"மாற்றத்தை விரும்பினால் மாற்றமாய் இரு"என்ற மகாத்மா காந்தியின் வரிகளை முன்வைத்து நடைபோடும் அர்ச்சனா ஸ்டாலின்-க்கு, மேலும் வெற்றிகள் தொடர யுவர்ஸ்டோரியின் வாழ்த்துக்கள்! 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Stories by Induja Ragunathan