போலியோ நோய் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிளில் பயணம் மேற்கொண்ட பேராசிரியர்!

0

1988-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் போலியோ நோய் 99 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இருப்பினும் இன்று ஒரே ஒரு குழந்தைக்கு இந்த நோய் தாக்கம் ஏற்பட்டால் அது ஓராண்டில் 2,00,000 பேருக்கு பரவும் அபாயம் உள்ளது.

விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சுகாதார முகாம்கள் போன்றவற்றால் பெருமளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஒருவர் பிரச்சாரம் செய்வதற்காக மலேசியா முழுவதும் தனியாக சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கர்நாடகாவின் மணிப்பால் தொழில்நுட்ப கல்லூரியில் கணிணி பயன்பாடுகள் துறையில் துணை பேராசிரியரான எஸ் எஸ் ஷமீம் மலேசியாவின் மணிப்பால் சர்வதேச பல்கலைக்கழகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டார். இவர் ஜனவரி மாதம் 31-ம் தேதி முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை இரண்டு வாரங்கள் போலியோ ஒழிப்பு குறித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக 2,140 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்தார்.

”பத்தாண்டுகளுக்கு முன்பே மலேசியா போலியோ அற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லையெனில் போலியோ எங்கும் எப்போதும் பரவக்கூடும் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே இங்கு பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்தேன். இதற்கு முன்பு இந்தியாவில் ’பசுமையான ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குதல்’ என்பது போன்ற நோக்கங்களுக்காக இதே போல் பிரச்சாரம் செய்துள்ளேன்,” என்றார் ஷமீம்.

பிரச்சாரம்

ரோட்டரி இண்டர்நேஷனலின் உலகளாவிய போலியோ ஒழிப்பு இயக்கத்திற்காக 3 லட்ச ரூபாய் (18,000-க்கும் அதிகமான மலேசியன் ரிங்கிட்) நிதி உயர்த்த ஷமீமின் சைக்கிள் பயண பிரச்சாரம் உதவியது. மணிப்பாலின் போலியோ ஒழிப்பு நடவடிக்கை மணிப்பால் அகாடெமி ஆஃப் ஹையர் லெர்னிங் மற்றும் மணிப்பால் க்ளோபல் ஆகியவற்றின் இயக்கமாகும். ஷமீமின் சைக்கிள் பயணம் இந்நிறுவனத்தின் பசுமை மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் ஊக்குவித்தது

”உலகளவில் பெரும்பாலான அரசாங்கமும் அரசு சாரா நிறுவனங்களும் போலியாவை ஒழிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதில் நூறு சதவீதம் வெற்றியடைய முடியவில்லை. ஒரே ஒருவருக்கு போலியோ நோய் தாக்கம் இருந்தாலும் அது பரவக்கூடும். ரோட்டரி இண்டர்நேஷனல் பல ஆண்டுகளாக தொடர்ந்து போலியோ ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரோட்டரியின் முயற்சியுடன் இணைந்தே இந்த சைக்கிள் பயணமும் மேற்கொள்ளப்பட்டது. மலேஷியாவிலும் மருத்துவப் பிரிவில் செயல்பட்டு வந்த மணிப்பால் அதே நோக்கத்துடனான இந்த பயணத்தையும் ஊக்குவித்தது,” என்றார் ஷமீம்.

இந்தியாவில் கடைசியாக 2011-ம் ஆண்டு போலியோ நோய் பதிவானது. இந்த நோய் மீண்டும் தாக்காமல் இருப்பதை உறுதிசெய்வதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்துவது கட்டாயமாகும். முன்னர் இந்த வைரஸ் அதிகம் பரவியிருந்தாலும் பல்வேறு போலியோ பிரச்சாரங்கள் இந்த நோயை வெற்றிகரமாக ஒழிக்க வழிவகுத்தது.

”பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஒரு அதிகாரப்பூர்வமான ஆவணப்படுத்தப்பட்ட தகவலுக்கும் உண்மையான நடைமுறைக்கும் நிறைய வேறுபாடு இருக்கும் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்வோம். செயல்படுத்தப்படவேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. இதற்கான நிதித்தேவை உள்ளது. முக்கியமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவேண்டும். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக என் தரப்பிலிருந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்கிறேன்.

இவரது பயணம் அறிவை பகிர்ந்துகொள்ளும் நடவடிக்கையாகவே மாறியது. இதில் போலியோ நோய் குறித்த தவறான புரிதல்கள் சரிசெய்யப்பட்டு சரியான தகவல்கள் பரப்பப்பட்டன.

சைக்கிள் பயணம் மீதான ஆர்வம்

சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டாலும் அதிக மக்களை சென்றடைய ஒருவர் பயணம் மேற்கொள்வதே சிறந்தது என்கிறார் ஷமீம். போலியோவை ஒழிக்கும் நோக்கத்திற்காக நாள் ஒன்றிற்கு 100-200 கிலோமீட்டர் வரை சைக்கிளில் பயணித்தேன். இரண்டு வார பயணத்தை நிலை (nilai) பகுதியிலிருந்து துவங்கி கோலாலம்பூர், ரிவாங், தைப்பிங், ஈப்போ, பினாங்கு, பெர்லிஸ், கெடா, மெர்சிங், ஜோஹோர், பஹ்ரு, மூர், மெலகாக்கா, டம்பின், செரெம்பன் ஆகிய பகுதிகள் வழியாக பயணித்து நிலை பகுதியை வந்தடைந்தார். இந்தப் பயணம் மலேசிய நிலப்பரப்பு முழுவதையும் உள்ளடக்கியதாக இருந்தது.

இந்த முயற்சி மக்களின் கவனத்தை ஈர்த்தது. அவர்கள் இது குறித்து மேலும் தெரிந்துகொள்ள விரும்பினர். இதனால் நோக்கம் நிறைவடைந்தது. அத்துடன் நாள் ஒன்றிற்கு 100-200 கிலோமீட்டர் பயணித்து 2000-க்கும் அதிகமான கிலோமீட்டர் பயணத்தை தனியாக மேற்கொண்ட எனது முயற்சியைக் கண்டு மக்கள் உதவ முன்வந்தனர். இது போலியோ ஒழிப்பிற்கான நிதி உயர்த்தும் பிரச்சாரத்திற்கு உதவியது. என்னுடைய இந்த முயற்சியானது மக்களிடமிருந்து இதைவிட சிறப்பான வரவேற்பை பெறமுடியாது என்பதையும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சைக்கிளில் பயணம் மேற்கொள்வதைக் காட்டிலும் வேறு சிறப்பான வழிமுறை இல்லை என்பதையும் உணர்த்துகிறது.

ஷமீம் இந்தியாவில் வெற்றிகரமாக சைக்கிள் பயணங்களை மேற்கொண்டுள்ளார். 2016-ம் ஆண்டு 23 நாட்களில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3200 கிலோமீட்டர் தனியாக சைக்கிளில் பயணித்துள்ளார். மேலும் 2015-ம் ஆண்டு எட்டு நாட்களில் பெங்களூரு முதல் ஒடிசா வரை 1500 கிலோமீட்டர் தனியாக சைக்கிளில் பயணித்துள்ளார். 2016-ம் ஆண்டு 20 நாட்களில் மணிப்பால் முதல் ஜெய்ப்பூர் வரை குழுவாக 2500 கிலோமீட்டர் பயணித்துள்ளார். 2017-ம் ஆண்டு 19 நாட்கள் ஒக்கா முதல் திப்ருகர் வரை 3200 கிலோமீட்டர் பயணித்துள்ளார்.

கர்நாடகாவின் மணிப்பால் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள் போன்றோர் சைக்ளிங் க்ளப்களை உருவாக்கி பல்வேறு உள்ளூர் மற்றும் தேசிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இளைஞர்கள் சைக்கிளில் பயணம் செய்வதில் ஆர்வம் காட்டவேண்டும் என்றும் சமூகத்துடன் ஒருங்கிணைந்து தொடர்பில் இருக்க சைக்கிள் பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்கிறார் ஷமீம்.

எனக்கு சைக்கிள் ஓட்டுதல் பிடிக்கும். வரம்புகள் ஏதுமின்றி பயணிக்க விரும்புகிறேன். கடினமான விஷயங்களை முயற்சிக்க விரும்புகிறேன். பல பகுதிகளுக்கு சைக்கிளில் பயணிப்பது எனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அதை மேற்கொள்கிறேன்.”

ஷமீம் பயணக்குறிப்பிலிருந்து….

”வன விலங்குகளும் ஊர்ந்து செல்லும் பிராணிகளுமே கவலையளிக்கக்கூடியதாகும். வடக்கு மலேசியாவின் பயணத்தின்போது ஒரு குறிப்பிட்ட 250 கிலோமீட்டர் தொலைவு மலைகளாலும் அடர்ந்த காடுகளாலும் நிறைந்திருந்தது. பல மைல் தூரத்திற்கு மனித நடமாட்டமே தென்படவில்லை. காட்டு பன்றிகள், யானைகள், புலிகள் போன்றவை நெடுஞ்சாலையில் உலவுவதை காண முடிந்தது. அதிர்ஷ்டவசமாக எந்த விலங்கும் என்னை தாக்கவில்லை. அந்த குறிப்பிட்ட பயணத்தின் போது பாதுகாப்பிற்காக இரண்டு சிறிய கத்திகளை என்னுடன் வைத்திருந்தேன்,” என்றார் ஷமீம்.

ஆங்கில கட்டுரையாளர் : தீபிகா ராவ் | தமிழில் : ஸ்ரீவித்யா