’96’ ராம்-ஜானு பொம்மை தயாரித்து தோல்வியில் இருந்து மீண்டெழுந்த ’குல்போன்டா’ நிறுவனர்கள்...

மூன்று நண்பர்களால் தொடங்கப்பட்ட மரப்பொம்மைகள் தயாரிக்கும் தோல்வியுற்ற நிலையில் இருந்து கேலிகட்டைச்சேர்ந்த ’குல்போன்டா’ நிறுவனத்துக்கு தற்போது ஆர்டர்கள் குவியத் தொடங்கியுள்ளது.   

0

அண்மையில் வெளியான விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்த 96 திரைப்படம் மக்களிடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ராம், ஜானு கதாப்பாத்திரம் மக்கள் மனதை கொள்ளை அடித்து திரையரங்கை விட்டு வெளியேறிய பின்னும் அதன் தாக்கத்தை மனதில் ஏற்படுத்தியுள்ளது.

இதையே பல தொழில்முனைவர்கள் தங்களின் தொழில் யோசனையாகக் கொண்டு ஜானுவின் உடை, ராம்-ஜானு பொம்மை என்று சந்தையில் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் ’குல்போன்டா’ என்னும் ஓர் சிறிய கலை ஸ்டார்ட் அப், ராம் ஜானு பொம்மைகளை சந்தையில் அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மட்டுமின்றி அப்படத்தின் நாயகர்களையும் கவர்ந்துள்ளது.

ராம்-ஜானு பொம்மைகள் (வலது) குல்போன்டா நிறுவனர்கள் (இடது)
ராம்-ஜானு பொம்மைகள் (வலது) குல்போன்டா நிறுவனர்கள் (இடது)

கேரளாவைச் சேர்ந்த, 4 மாதங்கள் மட்டுமே ஆன ’குல்போன்டா’ என்னும் தொடக்க நிறுவனம் இந்த பொம்மைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் ரித்விக் மெக்காயில் மற்றும் பல்லவி.

“ராம் ஜானு பொம்மைக்கு முன்பு, இந்த நிறுவனத்தை தொடர முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. வேறு தொழிலில் ஈடுபடலாம் என்ற யோசனையும் இருந்தது, ஆனால் இந்த ஒரு தயாரிப்பு எங்கள் நிறுவனத்தின் போக்கையே மாற்றிவிட்டது,” என்கிறார் பல்லவி.

ரித்விக், பல்லவி இருவரில் ஒருவர் ஐடி ஊழியர் மற்றொருவர் கட்டிட வடிவமைப்பாளர். இருவரும் கை நிறைய சம்பளத்துடன் நல்ல பணியில் இருந்தாலும் தங்களின் கனவை நோக்கிச் செல்ல வேண்டும் என்று தங்கள் வேலைகளை விட்டு, தங்கள் குடும்பத்தை எதிர்த்து சுய தொழில் செய்ய முடிவு செய்தனர். சுய தொழில் செய்ய வேண்டும் என்று செய்த பல ஆராய்ச்சிகள் மற்றும் பல்லவிக்கு கலை மீது இருந்த ஆர்வத்தாலும் கலை சம்பந்தப்பட்ட தோழிலே செய்ய முடிவு செய்தனர்.

“ஆராய்ச்சியின் போது நம் கலாச்சார மர பொம்மைகள் அழிந்து வருவதை கண்டோம், இதனால் என் வரையும் திறனையும் மர பொம்மைகளையும் மக்களுக்கு பிடித்தவாறு ஏதேனும் செய்ய முடிவு செய்தோம்,” என்கிறார்.

கேரளாவில் மர வேலை செய்வது பிரபலம் என்றாலும் இப்பொழுது அதுவும் குறைந்து வருகிறது, தங்களின் யோசனையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மரத்தில் சில பொம்மை மாதிரிகளை ஓர் தச்சரிடம் கேட்டு தயார் செய்யக் கேட்டனர். இந்த யோசனை வெற்றி அடைந்தால் தொடர்ந்து வேலை கிடைக்கும் என்பதால் இவர்களிடம் பணம் ஏதும் பெறாமலே சில மாதிரி பொம்மைகளை செய்துக்கொடுத்துள்ளார் தச்சர் கண்ணன்.

சாதாரணமாக ஏதோ ஒரு பொம்மைகளை தயார் செய்யக் கூடாது என்று, குல்போன்டா என்னும் தனி கிரகத்தை உருவாக்கி அதில் குல்போன்டிய மக்கள் போன்ற கதையை உருவாக்கினர். முதலில் உருவான குல்போன்டியன்கள் பிங்கி மற்றும் சூ, அது வேறு யாரும் அல்ல நிறுவனத்தின் நிறுவனர்களே. அதன் பின்னர்  தயாரான மற்ற குல்போன்டியன்களை தத்துக் கொடுப்பதுபோல் தனித்துவமான தத்தெடுப்பு சான்றிதழ், பேக்கிங் என புதுமையான முறையில் விற்பனை செய்ய முடிவு செய்தனர். 

“பொம்மைகள் என்றதும் குழந்தைகளை மையமாக வைத்து 50 குல்போன்டியன்களை தயாரித்து நேரடியாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஓர் கண்காட்சியில் எங்களின் தயாரிப்புகளை வைத்தோம்.”

ஆனால் மக்கள் அவர்களின் தயாரிப்பில் ஆர்வம் காட்டவில்லை அதனால் அவர்களின் ஸ்டாலிற்கு வரும் குழந்தைகளுக்கு குல்போன்டியன் கதையை சொன்னார் பல்லவி. இருப்பினும் நினைத்த அளவு குல்போன்டியன்கள் விற்கவில்லை. சமூக வலைத்தளத்திலும் அவர்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

“இன்ஸ்டாகிராமிலும் பல தயாரிப்புகள் மத்தியில் தொலைந்து விட்டோம், இதனால் மிகவும் சோர்ந்துவிட்டோம், இந்த யோசனை வெற்றி பெறுமா என்ற சந்தேகம் வந்தது. அதன் பின் என் நண்பர் ஒருவர் அலுவலகத்தை விட்டு வெளியே சென்று யோசனையை தேடுங்கள்...” என்றார்.

குடும்பத்தை எதிர்த்து தனி மனிதர்களாக இதை துவங்கியதால் நாள் முழுவதும் அலுவலகத்திலே தங்கள் நேரத்தை செலவழித்தனர். ஒரு மாற்றத்திற்காக நண்பரின் வலியுறுத்தலால் 96 படத்துக்கு சென்றோம் என்கிறார் பல்லவி. நிதி இல்லாத நேரத்தில் படத்தில் காசை செலவு செய்ய வேண்டுமா என்று யோசித்தனர், ஆனால் அதுவே தங்களின் வாழ்வை திருப்பிப் போடும் என இவர்கள் எதிர் பார்க்கவில்லை.

“படத்திற்கு பிறகு ராம்-ஜானு பொம்மைகளை தயாரித்து, புகைப்படம் எடுத்து ஓர் போஸ்டரை வடிவமைத்தோம். படக் குழுவினர்களின் உழைப்பிற்காக ஒரு சமர்ப்பணம் போல் தான் இதை தயாரித்தோம்; அதற்கு எவ்விதமான பலன்களையும் நாங்கள் எதிர் பார்க்கவில்லை.”

தயார் செய்த போஸ்டர்களை படக் குழுவினர்களின் சமூக வலைதளத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த படத்தில் ராமின் மாணவியாக வரும் வர்ஷா தன் இன்ஸ்டா ஸ்டோரியில் அதை பகிர எதிர்பாராத வரவேற்பு கிடைத்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து திரிஷா தனது ட்விட்டர் பக்கத்திலும் அந்த போஸ்டர்களை பகிர்ந்திருந்தார். மேலும் தனக்காக ராம்-ஜானு பொம்மைகளை ஆர்டர் செய்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள் நிறுவனர்கள்.

அதன் பின் மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்க 200க்கும் மேலான ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளது. முழுமையாக கையில் செய்வது என்பதால் ஒரு பொம்மையை முடிக்க 3 நாட்கள் எடுக்கிறது. தற்பொழுது ஆர்டர்களை தயார் செய்வதில் பிசியாக இருக்கிறார்கள் இந்த குல்போன்டியங்கள்.

கூடிய விரைவில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனிப்பட்ட பொம்மைகளையும் தயாரிக்க உள்ளதாக கூறி முடிக்கிறார் பல்லவி.