சமூக அக்கறையை புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தும் சிந்துஜா பார்த்தசாரதி!

0

"ஒரு புகைப்படம் போதும், ஆயிரம் வார்த்தைகளை ஒரு சேர விளக்குவதற்கு"... அதே புகைப்படங்கள் மூலம், சமூகத்தில் ஒரு பெரும் மாற்றத்தையும் கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்து அதை நிரூபித்து கொண்டு இருக்கிறார் புகைப்படக் கலைஞர் சிந்துஜா பார்த்தசாரதி. பெண்கள் தங்களுடைய திறமையை நிரூபிக்க, பல்வேறு துறைகளை எடுத்துக்கொண்டாலும், சமூக அக்கறையோடு மனித உரிமை பிரச்சனைகளை புகைப்படங்கள் மூலம், கதையாக எடுத்துசொல்வதில் அதிக ஆரவத்தை ஏற்படுத்திக்கொண்டு அந்த பாதையில் பயணித்து வருகிறார் சிந்துஜா.

தமிழ் யுவர்ஸ்டோரிக்காக தன்னுடைய கதையை நம்மோடு பகிர்ந்துக்கொண்டார்.

சுற்றுலா மற்றும் பயணங்கள் மேல் ஆர்வம்

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக புகைப்படங்கள் மூலம் செய்திகள் மற்றும் தகவல்களை தரும் ஃபோட்டோ ஜர்னலிஸம் (Photojournalism) துறையில் சிந்துஜா இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கெல்லாம் முதல் அடியாக இருந்தது சுற்றுலா மற்றும் பயணங்களின் மீது இருந்த அசாதாரண ஆர்வம் தான் என்கிறார் சிந்துஜா. "என்னுடைய அப்பாவிற்கு, அடிக்கடி பணி இடமாற்றம் இருப்பதுண்டு. அதனால், நிறைய ஊர்களுக்கு பயணம் செய்து, பல இடங்களில் இருப்பதற்கு வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைத்தது. அப்பாவுக்கு இடமாற்றம் பற்றிய தகவலை வீட்டில் சொன்னவுடனே, முதல் ஆளாக என்னுடைய பெட்டிகளை எடுத்து வைத்துவிடுவேன்." என்று சிறுவயது ஞாபகங்களை நம்மோடு பகிர்ந்தவாறு பேசினார் சிந்துஜா.

பல்வேறு நகரங்களில் பள்ளி படிப்பை முடித்த சிந்துஜா, மும்பையில் பி.காம் பட்டத்தை முடித்த பின், முதுநிலை சைக்காலஜி மற்றும் கார்பரேட் டிரெயினிங்கில் எம்.பி.ஏ மேற்படிப்பையும் முடித்தார். சிறு வயதில் இருந்த பிராயனங்களின் மேல் இருந்த விருப்பம், தன்னுடைய வேலையின் மூலம் மீண்டும் சிந்துஜாவிற்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. "ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில், தலையாய பண்புகளை எடுத்து விளக்கும் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றதுமே, பல இடங்களுக்கு வேலை நிமித்தமாக செல்ல வேண்டியதாக இருந்தது. அப்போது, சிறு வயது பிரயாண குஷியும் சேர்ந்தே தொற்றிக்கொண்டது." என்று புன்னகைக்கிறார் சிந்துஜா.

சுற்றுளா புகைப்படக்கலைஞர் ஃபோட்டோஜர்னலிஸ்ட் ஆன கதை

தன்னுடைய கார்ப்பரேட் வேலைக்காக பயணிக்கும் போது, சிந்துஜா அவருடைய கேமராவை சிறந்த துணையாக தேர்ந்தெடுத்துக் கொள்வதுண்டு. "ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்திற்கும் ஒரு சிறப்பு இருக்கும். அதை கேமரா கண்கள் மூலம் பதிவு செய்துக்கொள்வதை தான் ஆரம்பத்தில் செய்தேன். அந்த இடத்தை பற்றின அழைகையும், சிறப்பையும் புகைப்படங்கள் கொண்டு விளக்க முயற்சிக்க ஆரம்பித்தேன். இதுவே என்னுடைய முதல் படி" என்று விளக்குகிறார் சிந்துஜா.

ஒவ்வொரு இடங்களிலிருந்து புகைப்படங்களை எடுத்து, ஏதேனும் ஒரு பத்திரிக்கை அல்லது இணயத்தளம் போன்ற இடங்களுக்கு அனுப்பி, தன்னுடைய திறமையை விரிவுபடுத்த துவங்கினார் சிந்துஜா. இந்த காலகட்டத்தில் தான், கூவாகத்தில் நடைப்பெறும் திருநங்கைகள் விழாவை புகைப்படங்கள் எடுக்க சென்றிருந்தார். "அங்கு வெளியுலகிற்கு சொல்வதற்கு நிறைய விஷயங்கள் கொட்டிக்கிடந்தன. சாதாரண மக்களுக்கு தெரியாத விஷயங்களை சொல்வதில் இருக்கும் சந்தோஷத்தை அப்போது தான் நான் உணர்ந்தேன்" என்று விளக்கும் சிந்துஜா, முதல் முறையாக 2010ம் ஆண்டில் செய்த செய்தி வகையான புகைப்படங்கள், கூவாகம் திருநங்கைகள் திருவிழாவை பற்றியதே. அந்த புகைப்பட தொகுப்பிலிருந்து மனித உரிமை, ஆண் பெண் சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பகுதிகளில் தன்னுடைய கவனத்தை செலுத்த ஆரம்பித்தார் சிந்துஜா.

திருமணம், மற்றும் நிகழ்ச்சிகளுக்கு புகைப்படங்கள் எடுக்கும் காலகட்டம் அதிகரித்து வரும் இந்த நிலையில், மனித உரிமை போன்ற தீவிரமான துறைகளில் கவனம் செலுத்துவது ஏன் என்பது பற்றிய தன்னுடைய தீர்க்கமான விளக்கத்தை தரும் சிந்துஜா, "திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு புகைப்படங்கள் எடுப்பது எளிதாக இருந்தாலும், ஒரு அடிப்படை மாற்றத்தை சமூகத்தில் கொண்டுவரும் வாய்ப்பு இந்த துறையில் தான் எனக்கு கிடைக்கிறது" என்று விளக்குவது மட்டுமல்லாமல், ஒரு சின்ன சம்பவத்தையும் நம்மிடம் பகிர்ந்துக்கொண்டார்.

"கூவாகத்திற்கு பிறகு, பல மாநிலங்களுக்கு சென்று புகைப்படங்கள் எகுக்க துவங்கினேன். அப்படி தான் ஒரு முறை கர்நாடக கிராமங்களில் இருக்கும் தேவதாசி வழக்கம் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று சில பேரை சந்தித்து பேசி, புகைப்படங்கள் எடுத்து ஒரு சிறப்பு கட்டுரையாக நாளிதழ் ஒன்றில் வெளியிட்டேன்." நாளிதழில் வெளியிட்ட உடனே, கர்நாடக மனித உரிமை ஆணையம், அந்த கிராமங்களுக்கு சென்று விசாரித்து, தேவதாசி முறையை முற்றிலுமாக தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. இது எனக்கு மறக்க முடியாத அனுபவத்தையும், அளவில்லா சந்தோஷத்தை தந்தது" என்கிறார் சிந்துஜா. "நான் சென்றிருந்தபோது சந்தித்த, அங்கிருந்த சிறுவன் பின்னர் என்னை தொடர்பு கொண்டு தனக்கு அரசு வேலை கிடைத்திருப்பதை பகிர்ந்துக்கொண்டான். சரியான விஷயங்களை எல்லோருக்கும் தெரியும் படி சொல்வதில் இருக்கும் விளைவு என்ன என்பதை அப்போது உணர என்னால் முடிந்தது." என்று சிலாகிக்கிறார் சிந்துஜா.

பெண்ணாக இருப்பதில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள்

பொதுவாக இது போன்ற துறையில் பெண்கள் இறங்கி வேலைசெய்வதை காண்பது சற்று கடினமே. அதனால், இந்த பணிக்கு ஒரு பெண்ணை எப்படி அமர்த்தலாம் என்ற எண்ணம் சாதாரணமாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொள்கிறார். "சில இடங்களில் சென்று புகைப்படங்கள் எடுக்க பெண்களுக்கு அனுமதி கிடையாது என்ற அறிவிப்பு என்னை பலமுறை தாக்கியது. சுரங்கங்களில் புகைப்படம் எடுக்க அனுமதி கிடைக்காமல் போனதற்கு இது தான் பிரதான காரணமாக இருந்தது. "நல்ல அனுபவங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல், சில சிக்கல்களையும் தாண்டி வருவதற்கு கற்றுக்கொள்ளவும் முடியும் என்று தன்னுடைய கருத்தை முன் வைக்கிறார் சிந்துஜா.

ஒரு புறம் சிக்கல்களும், கஷ்டங்களும் இருந்தாலும் கூட, பெண்ணாக இருப்பது, தானாக ஒரு நம்பிக்கையை அடுத்தவர்களுக்கு தரும். "தர்மபுரியில் இருக்கும் சமூக மற்றும் சாதி பிரச்சனைகளை பற்றி புகைப்படங்கள் மற்றும் செய்திகள் சேகரித்த போது, பெண்கள் மற்றும் முதியவர்களிடம் பேசுவதற்கு கட்டாயம் ஏற்பட்டது. பக்கத்தில் அவர்களோடு அமர்ந்து பொறுமையாக கேட்கும் போது ஒரு சின்ன பிணைப்பு ஏற்பட்டு அவர்கள் சௌகரியமாக உணர்வார்கள்". உண்மையான மனித உணர்வுகளையும் அதற்கான தீர்வுகளையும் தெரிந்துக்கொள்ளும் துறையாக இதை எடுத்து செயல்பட்டுவருகிறார் சிந்துஜா பார்த்தசாரதி. 

இப்போதும் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் சிந்துஜா, தன்னுடைய மற்ற நேரத்தையும், வாரஇறுதி மற்றும் விடுமுறைகளையும் தன்னுடைய புகைப்பட பத்திரிக்கையாள வாழ்க்கைக்காக கச்சிதமாக ஒதுக்கிவிடுகிறார். "ஒரு குறிப்பிட்ட இடத்தில் சென்று புகைப்படங்கள் எடுக்க ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் வரை ஆகும். ஆனால், அதற்கான சரியான விவரங்களை சேகரித்து கொள்ள 3 அல்லது 6 மாதங்கள் வரை கூட ஆகும். ஒரு தொடர் சிந்தனை இருப்பது இங்கு அவசியமாகிறது." என்பதையும் விளக்குகிறார் சிந்துஜா.

2013ம் ஆண்டில் ஆண் பெண் சமத்துவ கருத்தை திறம்பட வலியுறுத்தியமைக்கு ஐநா சபையின் லாட்லி மீடியா விருது, குழந்தைகளுக்காக தடுப்பூசி மற்றும் அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை பற்றி யுனிசெஃப் (UNICEF) உடன் செய்த தொகுப்பு, ஜார்கண்ட் மாநிலத்தில் பரவலாக இருந்து வரும் மந்திரக்கார வாழ்க்கையும் அதில் சிக்கிக்கொண்ட பொது மக்களுடைய வாழ்க்கை முறை, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இளம்பெண்களுக்கான மையம் ஸ்டாப் ஆசிட் அட்டாக் (Stop Acid Attacks) என்ற தன்னார்வ நிறுவனத்தோடு செய்த புகைப்பட தொகுப்பு போன்ற பல பெருமைகளும், சான்றுகளும் சிந்துஜாவின் எட்டாண்டு புகைப்பட வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தன்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் பெற்றோர் மற்றும் நண்பர்களுடைய பங்கு பெருமளவில் இருப்பதாக கூறுகிறார். "ஆரம்பத்தில் அம்மா அப்பா இருவரும் என்னுடைய இந்த பணியை ஆதரிக்கவில்லை. என்னுடைய முடிவும் அதிலிருக்கும் நன்மைகளை பற்றி விளக்கியதோடு மட்டுமல்லாமல், அதை செய்து காட்டியதால் நம்பிக்கை அவர்களுக்குள்ளும் வளர ஆரம்பித்துள்ளது." என்று விளக்கும் சிந்துஜா, நம்பிக்கையும், தெளிவான சிந்தனையும் இருப்பதோடு தைரியமும் இருந்தால், நினைத்ததை எளிதில் சாதித்து, உங்களுடைய வட்டத்தில் இருக்கும் நபர்களுடைய ஆதரவை பெறலாம். குறிக்கோளை எடுத்து சொல்லும் தைரியம் தற்போதைய காலகட்டத்தில் எல்லோருக்கும் அவசியமாகிறது என்றும் தெரிவிக்கிறார் சிந்துஜா.

"உலகில் எல்லா மூலைகளிலும் மனித உரிமை மீறல், சுற்றுப்பசூழல் பாதிப்புகள் ஏற்பட்ட வண்ணம் இருந்து வருகிறது. அவை எல்லாவற்றிலும் இருக்கும் அடிப்படை காரணத்தை அறிந்து ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வர வேண்டும். என்னுடைய எதிர்கால திட்டத்தின் படிகளும் இதை நோக்கியே தான் இருக்கின்றது." என்று தன்னுடைய கனவை விவரித்ததோடு, அதிலிருக்கும் ஆழத்தையும் உணரவைத்தார் என்றே சொல்லலாம்.

இவரது புகைப்படங்களை காண: Sindhuja