சென்னிமலை நெசவுதொழிலுக்கு புத்துயிர் கொடுக்கும் தந்தை-மகள்

ஆஸ்திரேலிய நண்பர்கள், அனுப்பிய ஒரு வல்லுநர் குழுவின் உதவியுடன் நெசவுத்தொழிலுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து வருகின்றனர்.

4

சென்னிமலையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மைலாடி எனும் கிராமம். இடைக்காலத்தில் நசிந்து போய் கொண்டிருந்த நெசவுத்தொழில், தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று வருவது இதே கிராமத்தில் தான். 7 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன உபகரணங்கள் கொண்டு, நெசவு தொழிலுக்கு புத்துயிர் ஊட்டும் பணியை தேவராஜனும் அவரது மகள் பாரதியும் செய்து வருகின்றனர்.

சென்னிமலை, நெசவுத்தொழிலுக்கு பெயர் பெற்ற இடம். இப்பகுதியைச் சுற்றி, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் முக்கிய வாழ்வாதார தொழிலாக இருந்தது நெசவுத்தொழில் தான். கடந்த 80 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து ஒருவர் சென்னிமலைக்கு வந்துள்ளார். அதுவரை விவசாயம் மட்டுமே செய்து வந்த சென்னிமலைவாசிகளின் கையில் தறியை கொடுத்து துணி நெய்வதற்கு கற்றும் கொடுத்துள்ளார் அந்த கண்ணூர்காரர். அன்றைக்கு ஒரு சிலர் கற்றுக் கொண்ட இத்தொழில், சென்னிமலையில் கிடைக்கபெற்ற பஞ்சு மற்றும் கோயம்பத்தூர் நூற்பாலைகள் ஆகியவற்றால், 50, 60 களில் சுமார் ஒரு லட்சம் பேர் செய்யும் தொழிலாக மாறியது.

தேவராஜன் மற்றும் அவரது மகள் ஸ்ரீ பாரதி மற்றும் குழுவினருடன் ...
தேவராஜன் மற்றும் அவரது மகள் ஸ்ரீ பாரதி மற்றும் குழுவினருடன் ...

அதே ஊரைச் சேர்ந்த தேவராஜனின் தந்தை யு.ஆர்.சின்னசாமி கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் ஈடுபட்டிருந்தார். 1956 இல் யு.ஆர்.சி கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியைத் துவங்கினார். இன்று அது கட்டுமான தொழிலில் மிகப்பெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. 

இத்தகைய சூழலில், காலமாற்றம் நெசவுத்தொழிலை படுபாதாளத்தை நோக்கி கொண்டு சென்றது. ஓட்டுக் கட்டிடங்களில், கூட்டுறவு நிறுவனங்கள் வழங்கிய தறிகளில் நெய்து கொண்டிருந்த நெசவாளர்கள், புதிய ரக துணிகளின் வருகையால் வேலைவாய்ப்பை இழந்து கொண்டிருந்தனர். இலட்சங்களில் இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும் சுருங்கி, சுருங்கி சில ஆயிரம் பேரே கவனிக்கும் தொழிலாக மாறியது. அவர்களும் போதிய வருமானம் இல்லாமல் வாழ்க்கை நடத்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்.

“ அரசு, கூட்டுறவு நிறுவனங்களை உருவாக்கி அவற்றிற்கு சலுகைகள் கொடுத்து ஊக்குவித்தாலும், இயந்திரமயமாக்கல் மற்றும் புதிய ரக துணிகள் உற்பத்தி செய்யாமை போன்றவற்றால் இத்தொழில் மெதுவாக நசிய துவங்கியது. குறிப்பாக, இங்கு நெசவு செய்யப்பட்ட பெட்ஷீட்டுகள் அளவுக்கு அதிகமான பாரமுடன் இருந்தன. ஆனால் சந்தையில் பாரம் குறைந்த பெட்ஷீட்டுகள் விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்த போது, இங்குள்ள, பெட்ஷீட்டுகள் சந்தையில் நிலைநிற்க முடியவில்லை,” 

என நெசவுதொழிலின் நசிவுக்கான காரணத்தை விளக்கினார் தேவராஜன்.

கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தாலும் தேவராஜனின் குடும்பத்தினருக்கு அப்பகுதி மக்கள் மீது மிகுந்த அக்கறையுண்டு. அவரது தந்தை அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்தில் 20 ஆண்டுகளாக, தலைவராக இருந்தவர். அவரது சகோதரரும் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர். அப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமான நெசவுத்தொழில், நசிந்து, அப்பகுதி மக்கள் வேலை இல்லாமல் திண்டாடுவதை கண்டனர். அதனைத் தொடர்ந்து, சரியான சந்தைச் சூழல் இல்லாததன் காரணம் என்ன என்பதையும், எத்தகைய நவீனங்களை புகுத்தி இத்தொழிலுக்கு புத்துயிர் அளிக்க முடியும் எனவும், தேவராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆய்வு செய்தனர்.

“எனது நண்பர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தனர். அவர்களைக் கொண்டு ஒரு வல்லுநர் குழு ஒன்றை வரவழைத்து ஆய்வு செய்தோம். அவர்கள் இப்பகுதி மக்களின் நெசவுத்தொழில் பழக்கத்திற்கு ஏற்றவகையில் சின்ன, சின்ன மாற்றங்களுடன் இத்தொழிலை புத்துயிர் அளிக்க முடியும் என்ற நம்பிக்கை தந்தனர்.” என கூறினார் தேவராஜன்.

ஆய்வின் முடிவில், 12.12.2012 அன்று  "பைவ் பி வென்ச்சர் இந்தியா பிரைவேட் லிமிடெட்" (Five P Venture India Pvt Ltd) என்ற பெயரில் நிறுவனம் ஒன்று துவங்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, டோபி லூம் (dobby loom) மற்றும் ஜெகுவார்ட் லூம் (jacquard loom) என இருவகை மெஷின்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்பட்டன. இவற்றுடன், 5 தொழிலாளர்களை கொண்டு இந்த நிறுவனம் செயல்படத் துவங்கியது.

“பழைய முறைகளை பயன்படுத்தி சென்னிமலை கைவினைஞர்களின் கைகளால் உருவாக்கப்படும் துணிகள் மற்றும் பொருட்களின் மீது இந்திய சூழலை விரும்பும் சர்வதேச வாடிக்கையாளர்களை ஈர்ப்பது என்ற  முக்கிய நோக்கத்துடன் இந்த கம்பெனியை துவங்கினோம்.” 

என்கிறார் தேவராஜனின் மகளும் இந்த கம்பெனியின் நிர்வாகிகளில் ஒருவருமான ஸ்ரீ பாரதி. பாரதி சிங்கப்பூரில் கல்வி பயின்று, இப்போது இந்நிறுவனத்தினை பொறுப்பெடுத்து கவனித்து வருகிறார்.

தந்தை தேவராஜன், மகள் ஸ்ரீ பாரதியுடன், பொன்னுசாமி மற்றும் சம்பத் காசி ராஜனும் இணைந்துள்ளனர். இவர்களில் 30 வருடங்களாக இத்துறையில் அனுபவமுள்ள பொன்னுசாமி உற்பத்திப் பிரிவை கவனிக்கிறார். 12 ஆண்டுகளுக்கு மேல் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வந்த சம்பத் காசிராஜன், வணிகம் மற்றும் உத்திகளை கவனித்து வருகிறார்.

தற்போது 54 தறிகளுடன், 22 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருவதாக கூறுகிறார் தேவராஜன். இங்கு உற்பத்தியாகும் ஆடைகளை, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

“நாங்கள் ஏற்றுமதி செய்த நாடுகளில் எங்கள் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கான சந்தையை உலகம் முழுவதும் விரிவுபடுத்த விரும்புகிறோம். அதனைக் கொண்டு எங்கள் பகுதி மக்களுக்கு இயன்ற முன்னேற்றத்தை வழங்குவோம்” என கூறுகிறார் பாரதி.

அதே வேளை, பாரதியின் தந்தை தேவராஜனின் கனவோ, அப்பகுதி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது பற்றி இருந்தது. “தற்போது 22 நெசவாளர்கள் இங்கு வேலை பார்த்து, 500 நெசவாளர்களுக்கு வேலை வழங்கும் நிறுவனமாக மாற்ற விரும்புகிறோம். அனைவருக்கும் குறைந்த பட்சம் மாதம் 10000 ரூபாய் சம்பளத்துடன், நிறுவனத்தின் பங்குதாரர் ஆக்க வேண்டும்” என்ற தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

இணையதள முகவரி: FivePVenture

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


தொடர்பு கட்டுரைகள்:

'நவ்துர்கா': நெல் உமி கொண்டு தயாரிக்கப்படும் சுத்தமான சமையல் அடுப்பு!

காந்தி முதல் மோடி வரை: கவனம் ஈர்க்கும் கதர்!