'டெக்30'- கழிவுகளை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ள இளம் குழுவினர்!

0

வீட்டில் நாம் அப்புறப்படுத்தும் கழிவுகளைப் பற்றியும் அவை எங்கே எடுத்து செல்லப்படுகிறது என்பது பற்றியும் நம்மில் எத்தனை பேர் சிந்தித்துப் பார்த்திருப்போம்?

தினம்தோறும் துர்நாற்றம் வீசும் குப்பை வண்டி நமது பகுதியில் இருந்து கழிவுகளை எடுத்துச்செல்வதை நாம் பார்க்கலாம். உடனே நாம் அருவருப்புடன் மூக்கை மூடிக்கொண்டு விரைவாக கடந்துசெல்வோம். அல்லது நாற்றத்தைத் தவிர்க்க மாற்றுப்பாதையில் செல்வோம்.

”தினமும் அந்தப் பகுதியில் அதிகளவு குப்பை காணப்படுவதால் என் நண்பர்கள் கல்லூரியை வந்தடைய மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்தனர்,” என்றார் ட்ராஷ்கான் (TrashCon) நிறுவனர் ஆர் எம் நிவேதா.

பெங்களூருவின் ஆர்.வி.பொறியியல் கல்லூரி பட்டதாரியான நிவேதா, கழிவுகளை பிரித்தெடுப்பதில் உள்ள சவாலுக்கு தீர்வு காண முற்பட்டார். ஆனால் தற்போது அனைவரும் செயல்பட்டு வருவதுபோன்று கழிவுகள் உற்பத்தியாகும் பகுதியில் இவர் கவனம் செலுத்தவில்லை.

நகராட்சி கழிவுகள் சேகரிக்கப்பட்ட பிறகு ஈரக்கழிவுகளையும் உலர் கழிவுகளையும் பிரித்தெடுக்கக்கூடிய இயந்திரம் ஒன்றை வடிவமைத்துள்ளார். 

”எத்தகைய குப்பையாக இருந்தாலும் அவற்றை இந்த இயந்திரம் துண்டுகளாக்கும்,” என்றார்.

ஏன் சேகரிக்கப்பட்ட பிறகு பிரித்தெடுக்கவேண்டும்?

”பல ஆண்டுகளாகவே கழிவுகளை வீட்டிலேயே பிரித்தெடுக்க நாம் அறிவுறுத்தப்படுகிறோம். ஆனால் இன்று வரை அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அடுத்த வாரமே நாங்கள் கழிவுகள் குவிக்கப்பட்டிருந்த அந்தப் பகுதியை சுத்தப்படுத்தினோம்,” என்றார் நிவேதா. கல்லூரியின் வார்டின் மூத்த பொறியாளரை சந்தித்து இந்த பிரச்சனையை எடுத்துரைத்தார். அவர் “கழிவுகள் பிரச்சனையை தீர்ப்பதில் மதிப்பு கூட்டும் விதத்தில் ஒரு தீர்வைக் கொண்டு வாருங்கள்,” என்றார்.

இந்த நிகழ்வே ஒரு பரவலான அணுகுமுறையை உருவாக்குவது குறித்து சிந்திக்க உந்துதலளித்துள்ளது. அவரது வழிகாட்டி சௌரப் ஜெயின் உதவியுடன் ’ஷ்ரெட்டர்’ மாதிரியை உருவாக்கினார்.

நிவேதா தனது கல்லூரி ஆய்வகத்தில் ஷ்ரெட்டரின் வெவ்வேறு முன்வடிவங்களை சோதனை செய்தார். பிரச்சனையை சரியாக கண்டறிந்த பின்பும் அவரால் சரியான இயந்திரத்தை உருவாக்க முடியவில்லை. அப்போதுதான் எலக்ட்ரிக்கல் பொறியாளரான சௌரப் உதவினார்.

இன்று நிவேதா பீன்யா தொழிற்பேட்டையில் ஆறு பேர் அடங்கிய குழுவுடன் உற்பத்தி நிறுவனத்தை அமைக்க திட்டமிட்டுள்ளார். 

"அவுட்சோர்ஸ் செய்யப்படும் உற்பத்தியாளர்களால் அனைத்தையும் துண்டாக்கக்கூடிய ஷ்ரெட்டரை உருவாக்கமுடியவில்லை. ஆறு இயந்திரங்களுக்கான ஆர்டர் கிடைத்ததும் நாங்கள் உற்பத்தியைத் துவங்குவோம்,” என்றார் நிவேதா.

இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது

அனைத்து கழிவுகளும் ஒன்றாக இருக்கும் ப்ளாஸ்டிக் பைகள், பேக் ப்ரேக்கிங் சிஸ்டமால் கட் செய்யப்பட்டு கன்வேயர் பெல்ட் மூலம் ஷ்ரெட்டருக்கு அனுப்பப்படும்.

"அனைத்து விதமான கழிவுகளையும் ஒரே அளவைக் கொண்ட கத்தியால் துண்டாக்கமுடியாது என்பதால் இந்த சிக்கலுக்குத் தீர்வுகாண மீண்டும் ஆய்வு செய்யத் துவங்கினோம்,” என்றார் நிவேதிதா. 

இயந்திரத்திற்குள்ளாகவே அமைக்கப்பட்ட ஏர் ப்ளோயர் வடிவமைக்க தீர்மானித்தார். இது ஈரப்பதம் குறைவாக இருக்கும் துகள்களை ஊதிவிட்டு ஈரக்கழிவுகளை வகைப்படுத்தும்.  TranshCon-ன் ஷ்ரெட்டர்கள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என இரு பகுதிகளாக பிரித்தெடுக்கிறது.

மக்கும் பொருட்கள் உரமாகவும் பயோகேஸாகவும் மாற்றப்படுகிறது. “உரங்கள் சமூகங்களாலும் நகராட்சியாலும் விற்கப்படுகிறது. நாங்கள் பயோகேஸை Shell-க்கு விற்பனை செய்கிறோம்,” என்றார்.

தற்போது பெங்களூருவில் உள்ள ஸ்ரீநகர் வார்டில் (எண் 156) இந்த இயந்திரங்களில் ஒன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நாள் ஒன்றிற்கு ஐந்து டன் நகராட்சி கழிவுகளை பதப்படுத்துகிறது.

நிதி மற்றும் வருவாய்

கழிவுகள் அதிகளவில் இருக்கும் பட்சத்தில் குடியிருப்புகள், கார்ப்பரேட், நகராட்சி, கழிவு மேலாண்மை நிறுவனங்கள் என எல்லோரும் இந்த ஷ்ரெட்டரை பயன்படுத்தலாம் என்கிறார் இந்த நிறுவனர்.

தற்சமயம் நான்கு வகை இயந்திரங்கள் உள்ளன. இவை தினமும் 500 கிலோ, இரண்டு டன், 5 டன், 10 டன் ஆகிய அளவுகளை பதப்படுத்தக்கூடியதாகும். 10 டன் கழிவுகளை பதப்படுத்தக்கூடிய இயந்திரத்தின் விலை 35 லட்ச ரூபாயாகும்.

நிவேதா தனது அம்மாவின் சேமிப்பைக் கொண்டும் ஐஐஎம் பெங்களூவில் உள்ள இன்குபேஷன் மையத்தின் நிதியைக் கொண்டும் இந்த தயாரிப்பை உருவாக்கியுள்ளார்.

வணிக மாதிரி

ஒவ்வொரு வாரமும் துண்டாக்கப்பட்ட ப்ளாஸ்டிக் இறுதியில் க்யூப்களாக மாற்றப்படும். ”ஆனால் அதற்கான விலை இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை,” என்றார் நிவேதா.

டைல்ஸ் மற்றும் ஷட்டர்ஸ் உற்பத்திக்கு இந்த ப்ளாஸ்டிக் பயன்படுத்தப்படும். ப்ளைவுட் கொண்டு தயாரிக்கப்படும் அனைத்து வகை ஃபர்னிச்சர்களுக்கும் இதை மாற்றாகப் படுத்தலாம். ஏனெனில் இவை லேசாகவும் நீர் புகாத வகையிலும் வளையாமலும் இருக்கும் என நிவேதா விவரித்தார்.

துறை

மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் (CPCB) அறிக்கையின்படி இந்தியாவின் நகராட்சி கழிவுகளில் 15 சதவீதத்திற்கும் குறைவான அளவு மட்டுமே பதப்படுத்தப்படுகிறது. கழிவுகள் இவ்வாறு சுழற்சிக்கு உட்படுத்துவன் மூலம் 2050-ம் ஆண்டில் பொருட்களின் சேமிப்பு (material savings) ஒரு வருடத்திற்கு 624 பில்லியன் டாலர் அளவு இருக்கும் என Ellen MacArthur Foundatoin அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனைக்கு பல்வேறு ஸ்டார்ட் அப்கள் தீர்வு காண முற்படுகிறது. பெங்களூருவைச் சேர்ந்த Sahas Zero Waste கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பகுதியில் செயல்படுகிறது. ஆனால் இந்நிறுவனம் கழிவுகள் உற்பத்தியாகும் இடத்தில் பிரித்தெடுத்து, சேகரித்து குறிப்பிட்ட மறுசுழற்சியாளர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்பு ப்ரீ-ப்ராசஸ் செய்கிறது. மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதன் மூலம் இந்த சுழற்சி மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.

பெங்களூருவில் இருக்கும் GPS Renewables நிறுவனமும் நகர்புற ஆர்கானிக் கழிவுகளை நிர்வகித்து சமையலறை மற்றும் இதர ஆர்கானிக் கழிவுகளை பயோகேஸாக மாற்றுகிறது. புனேவைச் சேர்ந்த Protoprint ப்ளாஸ்டிக் கழிவுகளை 3டி பிரிண்டிங்கிற்கான இழைகளாக மாற்றுகிறது. இந்நிறுவனம் குப்பை சேகரிப்பவர்களிடம் இருந்து ப்ளாஸ்டிக்கை பெறுகிறது.

நிவேதாவின் நிறுவனம் அதன் தொழில்நுட்பத்திற்காக இந்தியாவில் மூன்று காப்புரிமைகளுக்கும் சர்வதேச அளவில் ஒரு காப்புரிமைக்கும் விண்ணப்பித்துள்ளது. 2020- ஆண்டு 250 இயந்திரங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது

”ஸ்ரீநகர் வார்ட் செயல்பாடுகளைத் தவிர Adaani உடன் LoI கையொப்பமிட்டுள்ளோம்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : ஆயிஷா ராய் | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL