சொந்த நிறுவனம் தொடங்கி மாதம் லட்சங்களில் ஈட்டும், அமேசான் டெலிவரி ஊழியர்!

6

நாம் விரும்பும் பொருள் நம் வீட்டு வாசலில் வந்தடையவேண்டும் என்று எல்லாருமே எதிர்ப்பார்க்க தொடங்கியுள்ள காலம் இது. அதிவேக யுகத்தில் எந்த அலைச்சலுமின்றி வீட்டிற்கே பொருட்களை டெலிவரி செய்ய உதவும் இ-காமர்ஸ் வர்த்தகம் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

சாப்பாடு முதல், வீட்டு அத்தியாவசிய பொருட்கள் வரை எல்லாமே நமக்கு கிடைக்கிறது. பல ஸ்டார்ட்-அப்’களும் இதை பயன்படுத்தி பல புதிய சேவைகளை ஆன்லைன் மூலம் தொடங்கி வெற்றியும் கண்டு வருகின்றனர். அந்த வகையில், ஜெய்பூரை சேர்ந்த ரகுவீர் சிங் சவுத்ரி, டீ மற்றும் ஸ்னாக் பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்து லட்சங்களில் வருமான ஈட்ட தொடங்கியுள்ளார். 

ரகுவீர், ஓர் ஏழ்மையான பின்னணியை சேர்ந்தவர். நிதி பிரச்சனையால் மேற்படிப்பை தொடரமுடியாமல் பள்ளிப்படிப்போடு நிறுத்திவிட்டார். வருமானம் ஈட்ட அமேசான் நிறுவனத்தில் டெலிவரி பையனாக சில காலம் பணியில் சேர்ந்து மாதம் ரூபாய் 9 ஆயிரம் ஈட்டிவந்தார்.  அவரிடம் பைக் இல்லாததால், சைக்கிளில் சென்று வீடுவீடாக டெலிவரி செய்தார் ரகுவீர்.

தினமும் பல மைல் தூரம் சைக்கிளில் பயணம் செய்வதால் களைத்துப்போகும் நேரத்தில் தேநீர் கடைக்கு சென்று டீ அருந்தி தன்னை புத்துணர்வாக்கிக் கொள்வார் ரகுவீர். ஆனால் ஒரு நல்ல டீக்கடையை தேடி அலைவது அவருக்கு சிரமமாக இருந்துள்ளது. இந்த பிரச்சனையை மேலும் சிந்தித்த அவர், நல்ல டீ கிடைக்க அலையவேண்டிய சூழலை தனக்கு சாதகமாக்கி அதில் தொழில் தொடங்க திட்டமிட்டார்.

தனது மூன்று நண்பர்களோடு சேர்ந்து ஆலோசித்து, தொழில் தொடங்க ஆயத்தமானார். தனது தொடர்புகள் மூலம் அருகில் இருந்த வாடிக்கையாளர்களுக்கு டீ டெலிவரி செய்ய தொடங்கினார்கள். சுமார் 100 வாடிக்கையாளர்கள் கிடைத்து, அவர்களுக்கு இவரின் டீ மற்றும் ஸ்னாக்ஸ் பிடித்துப்போக மேலும் புதிய வாடிக்கையாளர்களும் சேர்ந்தனர். இதில் நல்ல லாபம் கண்டு ஒரு பைக் வாங்கிவிட்டார் ரகுவீர்.

ரகுவீருக்கு தற்போது ஜெய்பூரில் நான்கு டீ டெலிவரி மையங்கள் உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 500 முதல் 700 ஆர்டர்கள் வருகின்றது. மாதம் ஒரு லட்ச ரூபாய் ஈட்டி, நான்கு பைக்குகளை வாங்கி அதை டெலிவரிப் பணிகளுக்கு பயன்படுத்தத் தொடங்கியுள்ளார் இந்த இளைஞர். 

கட்டுரை: Think Change IndiaRelated Stories

Stories by YS TEAM TAMIL