அரசுப்பள்ளிகளை வண்ணமயமாக்கி சுவாரஸ்யமாக்கிய டீனா ஜெயின்!

0

இந்தியாவிலுள்ள தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் அரசுப் பள்ளிகள் குறைந்த தரத்தில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இருப்பினும் மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் கற்பதை ஊக்குவிக்கும் விதத்தில் முழுமையான வளர்ச்சியை வழங்க இயலாத சூழலே நிலவுகிறது.

பல அரசுப் பள்ளிகளின் கட்டிட அமைப்புச் சூழலும் மாணவர்கள் தொடர்ந்து உற்சாகமாக வகுப்பறைக்கு வருவதை ஊக்குவிக்கும் விதத்தில் அமைவதில்லை. பாடப்புத்தகம் அல்லாத கூடுதல் நடவடிக்கைகளே பொதுவாக மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒன்றிணைக்கும். அப்படிப்பட்ட நடவடிக்கைகளும் பல அரசுப் பள்ளிகளில் இருப்பதில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையே நிலவும் இப்படிப்பட்ட வேறுபாடுகளைக் கண்டு மனம் வருந்தினார் 22 வயதான டீனா ஜெயின். இவர் வாரனாசியைச் சேர்ந்தவர். இளநிலை பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு பயிலும் இவர் அரசுப் பள்ளிகள் குறித்து மக்கள் மனதில் இருக்கும் காட்சியை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

படைப்பாற்றல்

வாரனாசியில் டெல்லி பப்ளிக் ஸ்கூலில் படித்த நாட்களிலேயே அவருக்கு புதுமையான சிந்தனைகளுடன் கூடிய படைப்புத்திறன் இருந்தது. 

“என்னுடைய படைப்பாற்றல் திறனுக்கு பள்ளிதான் ஒரு வடிவம் அளித்தது. நடனப்பயிற்சி, ஆசிரியருடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் திறன் போன்றவை பள்ளியின் வாயிலாகவே எனக்குக் கிடைத்தது. இந்த மகிழ்ச்சியான சூழல்தான் சமூக நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என்கிற உந்துதலை ஏற்படுத்தியது. அதற்காக நான் வசித்த பகுதிக்கு அருகில் இருக்கும் ஒரு அரசுப் பள்ளியை பார்வையிட தீர்மானித்தேன். அங்குள்ள மாணவர்களுக்கு பயிலரங்குகள் ஏற்பாடு செய்ய திட்டமிட்டேன்.” 

ஆரம்பத்தில் குழந்தைகளுடன் கலந்துரையாடுவதை ரசித்தார். ஆனால் விரைவில் பள்ளியின் மந்தமான சூழல்தான் மாணவர்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தார். 

”படைப்புதிறனை ஊக்குவிக்கும் வகையிலான சூழல் எனக்குக் கிடைத்தது. ஆனால் இந்த மாணவர்கள் அப்படிப்பட்ட சூழலில் வளர்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போதுதான் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகரான சுவாரஸ்யமான ஸ்மார்ட் வகுப்புகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கவேண்டும் என்று நினைத்தேன்,”

என்றார் டீனா.

பள்ளியின் சுவர்களே ஆசிரியர்களாக மாறியது

மாணவர்களிடயே ஒரு நிலையான தாக்கத்தை ஏற்படுத்த காட்சி வழி கற்றலை அறிமுகப்படுத்தவேண்டும் என்பதே டீனாவின் திட்டம். இதை செயல்படுத்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் சில நண்பர்களின் உதவியுடன் பள்ளியின் சுவர்களில் ஓவியம் வரைந்தார். 

”ஆரோக்கியமான சூழலில்தான் மகிழ்ச்சி பிறக்கும். பள்ளி கட்டிடத்திற்கு வெள்ளையடித்து வகுப்பறைகளில் ஓவியங்கள் தீட்டத் துவங்கினோம். சுவரோவியம் துவங்கப்பட்டபோது கற்றலின் ஒரு புதிய வகை இணைக்கப்பட்டது. இதில் மாணவர்கள் தாங்களே சுவற்றில் எழுதியும் வரைந்தும் கற்றுக்கொள்ளலாம்,” என்றார் டீனா.

பள்ளியின் அதிகாரிகள் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினாலும் ஒரு சில கலந்துரையாடல்களுக்குப் பிறகு இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். வெள்ளையடிப்பதற்கான கட்டணத்தை ஏற்றுக்கொள்ள முன்வந்தனர். இதர செலவுகளுக்கான பொறுப்பை குழு ஏற்றுக்கொண்டது,” என்றார். 

ஒவ்வொரு நாளும் 10 தன்னார்வலர்கள் பணியாற்றி 20 நாட்களில் பள்ளி முழுமையாக புதுப்பிக்கப்பட்டிருந்தது. வெவ்வேறு வகுப்புகளின் பாடதிட்டங்களை தன்னார்வலர்கள் ஆய்வு செய்து அவர்களுக்கு தொடர்புடைய சுவரோவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரையப்பட்டது.

இந்த பயிற்சி முறை மாணவர்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து டீனா விவரிக்கையில் மாணவர்கள் நான்கு வரி நோட்புக்களில் எழுதுவது போன்றே இந்த ஓவியங்கள் வரையப்படுவதால் அவர்கள் அதில் பயிற்சி செய்யலாம். இதனால் அவர்களது மொழியும் தொடர்பு கொள்ளும் திறனும் மேம்படும் என்றார். உயிரெழுத்துக்களையும், ஒலிக்குறி சார்ந்த பாடங்கள் ஆகியவை ஓவியங்களாக தீட்டப்பட்டன. அத்துடன் கணிதப் பாடத்தை சிறப்பாக பயில கணித வாய்ப்பாடுகள், இரண்டு படங்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசங்களை கண்டறியும் பயிற்சி, குறுக்கெழுத்து போட்டி சார்ந்த பயிற்சிகள் என மாணவர்களின் முழுமையான ஐக்யூ வளர்ச்சியை இலக்காக்கொண்டு சுவரோவியங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

”மாணவர்கள் அன்றாடம் இந்த சுவர்களை கடந்து செல்கையில் இதிலுள்ள ஓவியங்கள் வாயிலாக கற்றுக்கொள்வதால் குறிப்பிட்ட கருத்துக்கள் அவர்களது மனதில் ஆழமாக பதிந்துவிடும். இதனால் அவர்கள் ஒட்டுமொத்த அறிவுத்திறன் மேம்படும். இதுவே என்னுடைய மிகப்பெரிய வெற்றியாக அமையும்,” 

என்று நம்பிக்கை தெரிவித்தார் டீனா.

நேரடி தலையீடு

நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுடன் நேரடியாக கலந்துரையாடி அவர்களது திறமைகளை கண்டறிந்து மேம்படுத்துவதே இக்குழுவினரின் அடுத்தகட்ட திட்டமாக இருந்தது. மரம் நடுதல், கலை மற்றும் கைவினை பயிற்சி, உடற்பயிற்சி, களிமண்ணைக் கொண்டு அறிவியல் தொடர்பான பொருட்களை செய்தல், நடன பயிலரங்குகள், ஃபோட்டோகிராபி, ஓவியப்போட்டி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களையும் பயிரலங்கின் ஒரு அங்கமாக இணைத்தனர்.

பெரும்பாலான மாணவர்களுக்கு அடிப்படை வாசிப்புத் திறன் இல்லாத காரணத்தால் வாசிப்பு மற்றும் எழுதும் திறனில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. பண்டிகைகளின் முக்கியத்துவம், உணவு மேஜை நாகரிகம் போன்றவை கற்றுக்கொடுக்கப்படுகிறது. இந்த இயக்கம் வளர்ச்சியடைகையில் ஆசிரியர்கள் ஆர்வமாகவும் தீவிரமாகவும் அனைவருடனும் ஒன்றிணைந்து கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர் என்றார் டீனா.

இந்த முயற்சியில் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டபோதும் இது ஒரு பயனுள்ள அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார். ”நகராட்சியிலிருந்து அனுமதி கோரியபோது சந்தித்த சவால்களை திறம்பட எதிர்கொண்டோம். தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் பணியில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. மாணவர்கள் மதிய உணவிற்குப் பிறகும் பள்ளியில் இருப்பதை உறுதி செய்வதற்காக பெற்றோர்களை சம்மதிக்க வைப்பதும் கடினமாக இருந்தது. இவ்வாறு பல சிக்கல்கள் நிலவியபோதும் ஒரு சிறந்த நோக்கத்தை முன்வைத்தே அனைத்து சவால்களும் சிறப்பாக எதிர்கொள்ளப்பட்டது.”

ஓராண்டில் பத்து பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டது

கோடைகால விடுப்பில் துவங்கப்பட்ட இந்த சிறிய முயற்சி விரைவில் ஒரு முழு நேர இயக்கமாகவே மாறியது. அபிகல்பனா என்கிற பெயரில் செயல்படத் துவங்கினர். வாரனாசியில் இருந்த 10 பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் 300 மாணவர் வீதம் அபிகல்பனா முயற்சி வாயிலாக பயனடைந்தனர்.

பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரிக்க கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் என 20 பேர் அடங்கிய தன்னார்வலர் குழு உதவியது. 

”அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் இவர்கள் மாற்றத்தை ஏற்படுத்தியதும் அங்குள்ள மாணவர்களின் வருகை நூறு சதவீதம் அதிகரித்தது. மாணவர்களை மதிய உணவிற்காக மட்டுமே பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்கள் அரோக்கியம் சார்ந்த பயிலரங்குகளில் மாணவர்கள் பங்கெடுப்பதற்காக பள்ளிக்கு அனுப்பத் துவங்கினர்,” 

என்று குழுவினர் குறிப்பிட்டனர். பல நிறுவனங்களும் தனிநபர்களும் நிதியுதவி செய்ததால் நிதி சார்ந்த பிரச்சனைகள் தீர்ந்தது. 

”மாணவர்கள் முகத்தில் சிரிப்பைக் காண முடிகிறது. அவர்களது அறிவுத்திறனை மேம்படுத்துகிறோம். இதுவே எங்களது மிகப்பெரிய வெற்றி. வருங்காலத்தில் இதே போல் பல பள்ளிகளை புதுப்பித்து அரசுப்பள்ளிகள் குறித்து மக்கள் மனதில் இருக்கும் ஒரே மாதிரியான கருத்துக்களை மாற்ற விரும்புகிறோம்.”

அபிகல்பனா போன்ற முயற்சிகள் காரணமாக இன்று அரசுப்பள்ளிகள் தொடர்பான கருத்து மாறி ஃப்ரெஷ்ஷான வண்ணமயமான கற்றல் சூழல் சாத்தியமாகியுள்ளது. மாணவர்களுக்கு சோர்வளிக்கும் விதத்திலான மந்தமான நிறத்தில் சீருடை மற்றும் வகுப்பறைகள், சோர்வான மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை குறைவு போன்ற பள்ளி அமைப்புகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : சானியா ரசா

Related Stories

Stories by YS TEAM TAMIL