அருகாமை பகுதிகளில் உள்ளவர்களை இணைக்கும் சேவை 'ஆம்னி'

0

இன்றைய அவசர யுகத்தில் அருகாமையில் உள்ளவர்களுடன் கலந்து பழக பெரும்பாலானோருக்கு நேரம் இல்லை என்பது தான் நிதர்சனம். சிறிய நகரமான கட்டாக்கில் பிறந்து வளர்ந்த ஜாக்சன் பெர்னாண்டசுக்கு இந்த சமூகத்தனிமை புதிய அனுபவமாக இருந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கலந்து பழகிய சூழலுக்கு பழகியவர் அவர்.

அருகாமை சந்திப்புகள் சமூக நோக்கில் மட்டும் அமைபவை அல்ல. உள்ளூர் நிகழ்வுகள், அருகே டாக்டர் அல்லது வழக்கறிஞர்கள் எங்கே இருக்கின்றனர், நம்பகமான பிளம்பர் யார் போன்ற பயனுள்ள உள்ளூர் தகவல்களையும் அவை வாரி வழங்குகின்றன.

ஜாக்சன் திருச்சி என்.ஐ.டியில் பொறியியல் படித்து விட்டு, ஜாம்ஷெட்பூர் எக்ஸ்.எல்.ஆர்.ஐயில் எம்பிஏ பயின்ற பிறகு பெங்களூருவில் குடி பெயர்ந்தவர். அங்கு சுற்றுப்புறம் என்பது பெரிதாக இருந்தாலும் சமூக சந்திப்புகள் என்பது குறைவாக இருப்பதை கவனித்தார். மெட்ரோக்களில் மக்கள் உலகலாவிய அளவில் தொடர்பு கொண்டவர்களாகvuம் உள்ளூரில் அந்நியர்களாகவும் இருக்கின்றனரே!

இந்த நிலை பற்றி தீவிரமாக யோசித்த ஜாக்சன், உள்ளூர் தகவல்களை சிறந்த முறையில் திரட்ட முடிந்தால் அவை அன்றாட வாழ்க்கைக்கான பயன் மிகு தீர்வுகளாகும் என யோசித்தார். இந்த நம்பிக்கையில் தான் அவர், உள்ளூர் சமூக சந்திப்பிற்கான பாலமாக ஆம்னி சேவையை உருவாக்கினார்.

”இதற்கான தீர்வுகளை எல்லாம் யோசித்துப்பார்த்த போது பெங்களூரு போலீசாரின் 'ஹலோர் நெய்பர்' திட்டம் எங்களை கவர்ந்தது. எனவே அருகாமை பகுதி என்பதை பரந்த அர்த்ததில் புரிந்து கொண்டு 'ஆம்னி' சேவையை உருவாக்கத் துவங்கினோம். இதில், குடியிருப்பவர் மற்றும் விருந்தினர்கள் தவிர, பொது அமைப்புகள், வர்த்தகங்கள் மற்றும் பயனுள்ள இடங்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்” என்று விளக்குகிறார் ஜாக்சன்.

தொழில்முனைவு

ஜாக்சன் அமெரிக்காவில் வியூக ஆலோசகராக பணியாற்றிக்கொண்டிருந்த போது அவருக்கு தொழில்முனைவு ஆர்வம் உண்டானது. அதே கனவுடன் இந்தியா திரும்பினார். அவர் முதலில் துவங்கிய 'கிராப்ஆன்' (Grabon ) நிறுவனம் அன்மையில் ஸ்னேப்டீலால் கையகப்படுத்தப்பட்டது. வெகோ.காம் உருவாக்கத்திலும் அவர் பங்கேற்றார்.

”உள்ளூர் பரப்பில் தொடர்ந்து இருந்த ஆர்வம் பரந்த நோக்கத்துடன் ஆம்னியை துவக்க வைத்தது. இந்த சேவைக்கு குலோபல் மொலைல் இண்டெர்நெட் மாநாட்டில் சிறந்த புதுமை சேவைக்கான விருது கிடைத்தது. பிரகாசமான ஸ்டார்ட் அப்களுக்கான ஃபேஸ்புக் திட்டத்திலும் இடம் கிடைத்தது. எல்லாவற்றுக்கும் மேல் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாநாடான டெக்ஸ்பார்க்சில் முன்னணி 30 நிறுவனங்களில் இடம்பெற்றோம்” என்கிறார் ஜாக்சன்.

அருகாமையில் தொடர்பு

அருகாமையின் அடிப்படையில் தொடர்பு கொள்ளக்கூடிய சேவையான ஆம்னி பயனாளிகள் தங்கள் அருகாமையில் உள்ள பொது அமைப்புகள் மற்றும் வர்த்தகங்களை தொடர்பு கொள்ள உதவுகிறது. ஒளிபரப்பு, அப்டேட், பரிந்துரை, அரட்டை, தகவல் பலகை, எச்சரிக்கை உள்ளிட்ட வசதிகள் இந்த சேவையில் உள்ளன.

மக்கள் ஆம்னியை உள்ளூர் செய்திகளை பகிர, குற்ற நிகழ்வுகள் பற்றி எச்சரிக்கை, காணாமல் போனவற்றை தேட, பகுதி நேர வேலை பெற, அருகாமையில் பொருட்களை வாங்க, விற்க, சமூக பிரச்சனைகள் அடிப்படையில் குழுக்களை உண்டாக்க பயன்படுத்தலாம். உள்ளூர் சேவைகள் தொடர்பாக பரிந்துரைகளையும் கேட்டு பெறலாம்.

” இந்த சேவையில் நீங்கள் அருகாமை நண்பர்களை கண்டறியலாம்,அவர்களை இதில் இணைக்கலாம்,அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்,பயனுள்ள தகவல்களை பகிரலாம்.குறிப்பிட்ட பூகோள எல்லைக்குள் தகவல்களை பகிர்வதால் தகவல்கள் பொருத்தமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது” என்று மேலும் விளக்குகிறார் ஜாக்சன்.

வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகள் இந்த சேவையை தகவல் வெளியீட்டிற்கு பயன்படுத்தலாம்.இதன் மூலன் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுக்கு புதிய தகவல்களை வெளியிடலாம். இதன் மூலம் உள்ளூர் வர்த்தகங்கள் புதிய சலுகை அல்லது விற்பனையை அறிவிக்கலாம்.பெரும்பாலான பயனாளிகள் கடைக்கு அருகாமையில் இருப்பார்கள் என்பதால் இது பயனுள்ளதாக இருக்கும்.

வர்த்தகம் அல்லது பிரிலான்சர்கள் ஆம்னி சேவையை பயன்படுத்த விரும்பினால் அவர்கள் தங்களைப்பற்றிய தகவல் பக்கத்தை உருவாக்கி கொண்டு முக்கிய விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் குறிப்பிட்ட இருப்பிடம் சார்ந்த அடையாளத்தை பெறுவார்கள். அவர்கள் தகவல் குறிப்பிட்ட அருகாமையில் தான் வெளியாகும்.தகவல்களை எந்த வடிவிலும் வெளியிடலாம்.அருகே உள்ள பயனாளிகளுக்கு அவை தானாக தோன்றும்.உள்ளூர் நிறுவனங்கள் இதை தள்ளுபடி அறிவிப்பு போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்.

”பெரும்பாலான ஆம்னி வர்த்தக பயனாளிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் புதிய வாடிக்கையாளர்களை பரிந்துரை செய்ய இதை பயன்படுத்திக் கொள்கின்றனர். இப்போதைக்கு இவர்கள் இந்திரா நகர், கோரமங்களா, ஜேபி நகர் மற்றும் ஒயிட்பீல்டை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்” என்கிறார் ஜாக்சன்.

வர்த்தகம், பிரிலான்சர்கள் ஆகியோருக்கான தகவல் வெளியீடு வசதி இலவசமானது. அவர்கள் தங்கள் தகவல்களை வெளியிட ஆம்னி குழுவை தொடர்பு கொண்டு உதவி பெறலாம். இதை மார்கெட்டிங் சாதனமாகவும் பயன்படுத்தலாம்.

”மேலும் பல அம்சங்கள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை இணைத்து அருகிறோம். எந்த வகையான உள்ளூர் வர்த்தகத்திற்கும் ஏற்ற தீர்வாக விளங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்கிறார் ஜாக்சன்.

வளர்ச்சி

ஆம்னி சேவை அறிமுகமான சில வாரங்களில் எல்லாம் 1000 பயனாளிகள் மற்றும் 1200 வர்த்தகர்களை ஈர்த்தது. தற்போது இதன் குழுவில் 10 பேர் உள்ளனர்.

குறிப்பிட்ட பகுதிக்கான தகவல் தொடர்பு மேடைகள் இருந்தாலும் கூட ஆம்னி அவற்றை துடிப்புள்ளதாக ஆக்குகிறது. அருகாமை பகுதிக்கான தகவல் தொடர்பு மேடை எனும் வகையில் நாளிதழ்கள், தகவல் பலகைகள், பேனர்கள், வாட்ஸ்ப் குழுக்கள், ஒலிபெருக்கிகள் போன்றவற்றை முந்தி செயல்பட முற்படுகிறது.

"இந்தியாவின் முன்னணி 9-10 நகரங்களில் துடிப்பான அருகாமை பகுதிகளை உருவாக்குவதில் ஆம்னி முக்கிய அங்கம் வகிக்க விரும்புகிறோம். இணைக்கப்பட்ட, கூட்டு முயற்சி கொண்ட, பாதுகாப்பு மிக்க அருகாமை பகுதிகளை உருவாக்க உதவும் வகையில் இதற்கான தகவல் தொடர்பை எளிதாக்கும் சேவையை உருவாக்குவதற்காக பயனாளிகள் மற்றும் பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படுகிறோம்” என்கிறார் ஜாக்சன்.

இணையதள முகவரி: Omni

ஆக்கம்: அபராஜிதா சவுத்ரி | தமிழில்: சைபர்சிம்மன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற புதுமையான தொழில்முனைவு தொடர்பு கட்டுரைகள்:

அருகாமை மளிகைக் கடைகளை ஆன்லைனில் அறிமுகப்படுத்தும் 'ஆர்டர் ராப்பிட்'

இது உங்கள் பேட்டைக்கான சமூக வலைப்பின்னல் சேவை!