50% தள்ளுபடியில் நூல்கள்: 'சென்னை புத்தக சங்கமம்' கண்காட்சி 

0

புத்தக பிரியர்களை ஈர்க்கும் வகையில் சென்னையில் நாளை முதல் 24 ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சென்னை புத்தக சங்கமம் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் அனைத்து புத்தகங்களும் 50 சதவீத தள்ளுபடியில் கிடைக்கின்றன. சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2013 ம் ஆண்டு முதல் நேஷனல் புக் டிரஸ்ட் அமைப்புடன் இணைந்து பெரியார் சுயமரியாதை பிரச்சார இயக்கம் சென்னை புத்தக சங்கமம் எனும் பெயரில் புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது. உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த கண்காட்சி இந்த ஆண்டு மூன்று நாள் கண்காட்சியாக நடைபெறுகிறது.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நாளை ( 22 ம் தேதி) காலை 10 மணிக்கு இந்த கண்காட்சி துவங்குகிறது. இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். மற்ற இரு நாட்களில் காலை 11 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். கண்காட்சியை தென்னிந்தியாவிற்கான ரஷ்யத் தூதர் செர்ஜி கோட்டவ் துவக்கி வைக்கிறார்.

ஹிக்கின்பாதம்ஸ், குமுதம், புதுப்புனல், சிதரா நிலையம், கண்ணதாசன பதிப்பகம், சந்தியா பதிப்பகம், காவியா பதிப்பகம், ஏகம் பதிப்பகம், காந்தாளகம் பதிப்பகம், காலச்சுவட்டு பதிப்பகம், சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் உள்ளிட்ட முன்னணி பதிப்பகங்களின் நூல்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.

இக்கண்காட்சியில் இலக்கியம், அறிவியல், பகுத்தறிவு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து துறை நூல்களும் 50 சதவீத கழிவு விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 ம் தேதி நிறைவு விழா அன்று புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருபவர்களுக்கு புத்தகர் விருது வழங்கப்பட இருப்பதாகவும் கண்காட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

புத்தக கண்காட்சியை முன்னிட்டு தினமும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறுவர்களுக்காக ஓவியம், கலைப் பொருட்கள் உருவாக்குதல், கதை சொல்லுதல் மற்றும் அடிப்படை அறிவியல் கற்றுக் கொள்ளல் முதலிய பிரிவுகளில் குழந்தைகளுக்கான பயிற்சிகளும், போட்டிகளும் நடைபெறுகின்றன. இதில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுகளும் அளிக்கப்படும். ஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

மேலும் கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வின் ஓர் அங்கமாக உணவுத் திருவிழாவும் நடைபெறுகிறது.

புத்தக கண்காட்சியில் பார்வையாளர்கள் கட்டணமின்றி இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புத்தக சங்கமம் கண்காட்சி பற்றி மேலும் விவரங்கள் அறிய: www.chennaiputhagasangamam.com

தொடர்புக்கு: 044-26618161, 26618162, 9840132684

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

கார்த்திக் புகழேந்தி என்ற கதைசொல்லியின் கதை!

'கதை சொல்லி புத்தகம் எழுதினேன்' பிளாகர்-எழுத்தாளர் கங்கா பரணியின் பயணம்!

'பெண்களை மதிக்கும் சமூகமே உயர்ந்த நிலையை அடையும்'- எழுத்தாளர் அனு சுப்ரமணியன்