அதிகாலை எழுந்தவுடன் இந்த 7 பிரபல இந்திய தொழில்முனைவோர் செய்வது என்ன?

1

நம்மில் சிலர் அதிகாலை பறவைகளாகவும், சிலர் இராத்திரி ஆந்தைகளாகவும், ஒரு சிலர் இவை இரண்டிற்கும் நடுவில் இருந்து வாழ்ந்து வருகின்றோம். ஆனால் பொதுவாக நம் தினத்தை எப்படி தொடங்குகிறோமோ அதன் அடிப்படையிலே அந்த நாள் அமையும்  என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. 

பிரபல தொழில்முனைவோர்கள் ஜாக் மா, மார்க் ஜுக்கர்பெர்க், ரிச்சர்ட் ப்ரான்சன் மற்றும் ரத்தன் டாடா ஆகியோர் அனைவரும் அதிகாலை பறவைகள். இன்றுள்ள பல வெற்றிகரமான தொழில்முனைவோரும் அதிகாலை எழுந்து நாளை தொடங்கும் பழக்கத்தையே பின்பற்றுகிறார்கள். அவர்கள் எழுந்தவுடன் செய்யும் முதல் வேலை என்ன? தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!

1. ஷசான்க் என்டி- ப்ராக்டோ இணை நிறுவனர்-சிஇஒ: காலை 6 அல்லது 7 மணிக்கு இவரது தினம் தொடங்குகிறது. அதிகாலை 4 மணிக்கு எழ இவருக்கு விருப்பமாம். 

எழுந்தவுடன் செய்யும் முதல் வேலை: இ-மெயில்களை பார்த்துவிட்டு பதிலளிப்பது, அன்றைய தினத்தை ப்ளான் செய்வது. அடுத்து ஜிம், ஓட்டம், ஸ்குவாஷ் விளையாட்டு அல்லது நீச்சல். 

அலுவலகம் செல்லும் நேரம்: 9 முதல் 10 மணிக்குள் அலுவலகத்தில் இருப்பார். 

ஷசான்க் நண்பர்களுடன்
ஷசான்க் நண்பர்களுடன்
”எனக்கு ஜிம் செல்வது என்பது மருந்து உட்கொள்வது போல். ஒரு மணி நேரமாவது காலை ஜிம்மிற்கு சென்றே ஆகவேண்டும். குறைந்தது 5-10 கிலோ மீட்டர் நடையை நான் ட்ரெட்மில்லில் தினமும் செய்வது வழக்கம். அதேபோல் நீச்சல் அல்லது ஸ்குவாஷ் விளையாட்டில் ஒரு கேம்மை தினமும் விளையாடுவேன். எல்லாவற்றையும் ஒன்றாக செய்வது அவ்வளவு சுலபமில்லைதான்...” என்கிறார் ஷசான்க்.

2. ராதிகா அகர்வால்- இணை நிறுவனர்-சிஇஒ, ஷாப்க்ளூஸ்: காலை 6.15 மணிக்கு நாளை தொடங்குவார். 

எழுந்தவுடன் செய்யும் முதல் வேலை: 20 நிமிடங்களுக்கு படிப்பார் மற்றும் வேலை. கொஞ்சம் உடற்பயிற்சி, பின் நீண்ட நடைப்பயிற்சி.  

அலுவலகம் செல்லும் நேரம்: 9.15 மணிக்குள் அலுவலகத்தில் இருப்பார்.

"எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். எனக்கு இரண்டு உலகம் உள்ளது. காலை 6.40 முதல் 7.26 வரை அவர்களுக்காக நான் செலவிடும் நேரம். அதன் பின்னரே எனது முதல் டீ கோப்பையை பருகுவேன். பின் எனக்கான நேரத்தை ஒதுக்கி, ஒரு நீண்டதூர நடைப்பயிற்சி.”

3. நவீன் திவாரி- இணை நிறுவனர்-சிஇஒ, இன்மொபி: இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான நவீன், தனது மகளை பள்ளியில் 6.50 மணிக்கு அழைத்துக்கொண்டு விடுகிறார். 

நவீன் திவாரி
நவீன் திவாரி
5 கிலோமீட்டர் தூரம் ஓடும் பழக்கம் உள்ளவர் இல்லையேல் ஜிம்முக்கு சென்றுவிடுவார். பின் டீ குடித்துவிட்டு, மகன் அவின் உடன் கிரிக்கெட் விளையாட்டு. அதற்கு பின் காலை சிற்றுண்டிக்கு தினமும் ஓட்ஸ், பழங்கள் மற்றும் காழ்ந்த பழங்கள உட்கொள்வதை பல வருடப் பழக்கமாக கொண்டுள்ளார்.

4. ரிதேஷ் அகர்வால்- நிறுவனர்-சிஇஒ, ஓயோ ரூம்ஸ்: காலை 7 மணிக்கு நாள் தொடங்கும். 

எழுந்தவுடன் செய்யும் முதல் வேலை: முதல் வேலையாக இ-மெயில்களை படிப்பார், பின் கொஞ்சம் வேலை. நீண்ட நடைப்பயிற்சி மற்றும் ஓட்டம். 

அலுவலகம் செல்லும் நேரம்: 10 மணி 

 ”எனது நாளை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தொடங்க விருப்பப்படுவேன். அப்போதே என்னால் என் முழு நாளை திட்டமிட முடிகிறது, மேலும் சரியான நேரத்தில் எல்லா வேலைகளையும் முடிக்கவும் முடிகிறது. நான் எனக்கான தனிப்பட்டநேரத்தையும் ஒதுக்க ஆரம்பித்துள்ளேன். ஓடும் போதும், நீண்ட தூர நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது மன அமைதி கிடைக்கின்றது. அது எனக்கு ஊக்கத்தை கொடுத்து புத்துணர்வை ஏற்படுத்துகிறது,” என்கிறார். 

5. முகேஷ் பன்சல்- இணை நிறுவனர், க்யூர்ஃபிட்: முகேஷ் பன்சல் மிந்த்ராவின் நிறுவனரும் கூட. அவர் உடலை ஆரோகியமாக வைத்துக்கொள்வதில் ஆர்வமிக்கவர். அதனால் அவர் தன் நாள் பொழுதை அதிகாலையில் தொடங்குகிறார். 

முகேஷ் பன்சல்
முகேஷ் பன்சல்
“நான் வாரத்தில் ஐந்து முதல் ஆறு முறை உடற்பயிற்சி மேற்கொள்வேன். பாரம்பரிய ஜிம்களை நான் விரும்புவதில்லை. உடலின் முழு ஆரோகியத்திற்காக நான் பயிற்சி எடுப்பதையே விரும்புகிறேன். அதனால் பலவித உடற்பயிற்சிகளை ஒன்றிணைத்து பயிற்சி செய்வேன். ஓட்டம், யோகா, நடை, மேலும் சில உடற்பயிற்சிகள்...” 

6. அனு ஆச்சார்யா- நிறுவனர்-சிஇஒ, மேப்மைஜெனோம்: அனுவின் ஒரு நாள் முடிவடைவதே நடு இரவு 2 மணியாகும். அதனால் காலை 7 அல்லது 8 மணிக்கே இவரது நாள் தொடங்குகிறது. 

எழுந்தவுடன் செய்யும் முதல் வேலை: 20 நிமிடங்கள் படிப்பு மற்றும் சின்ன வேலைகள். பின் ஓட்டம், சைக்கிளிங் அல்லது நீச்சல். 

அலுவலகம் செல்லும் நேரம்: 10.30 முதல் 11 மணி அளவில் செல்லுவார். 

”எனது நாளை அதிகாலையில் தொடங்குவது சற்று கடினம், ஏனென்றால் நான் இரவு தாமதமாக தூங்குவேன். ஆனால் எழுந்ததும் ஓட்டம், சைக்கிளிங் அல்லது நீச்சல் பயிற்சியை மேற்கொள்வேன். எனக்கு இவை மன அமைதியையும், ஒருவித புத்துணர்ச்சியையும் தருகிறது,” என்கிறார். 
அனு ஆச்சார்யா
அனு ஆச்சார்யா

7. கவின் பார்தி மிட்டல்- நிறுவனர்-சிஇஒ, ஹைக் மெசெஞ்சர்: இவர் தனது நாளை சற்று வித்தியாசமாக தொடங்குகிறார். ஒரு கோப்பை நீரை அருந்திவிட்டு, தியானம் செய்கிறார். மனதை புத்துணர்வாக்கவும், நடுநிலைக்கு கொண்டுவரவும் இதை செய்கிறாராம். 

”நான் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீரை அருந்துவேன். பின் 15 முதல் 30 நிமிடங்கள் தியானம். அதை முடித்து குளிப்பேன். காலை சிற்றுண்டிக்கு ஒரு ஆப்பிள், ஒரு வாழைப்பழம், புரதச்சத்து பெற 4-5 முட்டைகள் உண்பேன்...” என்கிறார். 

ஆங்கில கட்டுரையாளர்: சிந்து கஷ்யப்