ரயில் டிக்கெட்டுக்கு நாங்க கேரண்டி!

3

பேருந்து மற்றும் காரை ஒப்பிடும்பொழுது, ரயில் பயணத்திற்கு ஆகும் செலவு குறைவுதான். அதனால் தான் இந்தியாவின் லட்சகணக்கான குடும்பங்கள் ரயிலை நம்பியே இருக்கின்றன. ஆனால் ரயிலில் எல்லோருக்கும் சீட்டு கிடைப்பதில்லை. முன்பதிவு செய்தாலும் கூட பெரும் போராட்டத்திற்கு பிறகே இடம் கிடைக்கிறது. "டிக்கெட் ஜுகாத்" Ticket jugaad என்ற ஆண்ட்ராய்டு செயலி இந்த நிலையை மாற்றியிருக்கிறது.

எப்படி இது சாத்தியம்?

திருச்சியிலிருந்து சென்னை செல்ல உங்களுக்கு டிக்கெட் வேண்டும் என வைத்துக்கொள்வோம். ஐ.ஆர்.சி.டி.சியில் தேடி பார்க்கிறீர்கள் கிடைக்கவில்லை. திருச்சியிலிருந்து சென்னைக்கு இடையில் பத்து ரயில் நிறுத்தங்கள் இருக்கிறதென்றால், முன்பதிவு சீட்டுக்களை ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் இவ்வளவு, என ஒதுக்கியிருப்பார்கள். எனவே ஒரு நிறுத்தத்தில் நமக்கு சீட்டு கிடைக்கவில்லை என்றால், வேறொரு நிறுத்தத்தில் கிடைக்கும்.

வேறு நிறுத்தத்தில் சீட்டு இருக்கிறதா என்பதை தேடித்தரும் வேலையை தான் இந்த ‘டிக்கெட் ஜுகாத்’ செயலி செய்கிறது. ரயிலில் தான் செல்வேன் என்பதை குறிக்கோளாக வைத்திருப்பவர்களுக்கான கச்சிதமான செயலி இது.

யார் இவர்கள்?

சுபம் பல்த்வா மற்றும் ருணால் ஜஜு ஆகிய இருவரும் தான் இந்த செயலியை உருவாக்கி இருக்கிறார்கள். இருவரும் அத்தை பையன்கள். சுபம் என்.ஐ.டி ஜாம்ஷட்பூரில் பயின்றவர். ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கத்தில் தீவிர ஆர்வமுடையவர்.

ருணால் தற்பொழுது ஐஐடி கரக்பூரில் படித்துக் கொண்டிருக்கிறார். தன் கல்லூரி வேலைவாய்ப்பு மையத்தின் மூலம் பல்வேறு வேலைதுவக்க நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். தன் கல்லூரியிலும், புனேவிலும் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னணி

ஒவ்வொரு ரயில் வழித்தடத்திற்கும் பிரத்யேகமாக முன்பதிவு சீட்டுக்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்ற விபரத்தை சுபம் கேள்விபட்டார். எனவே இதை பயன்படுத்தி ஒரு ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கினால் என்ன என்று அவருக்குத் தோன்றியது. உடனடியாக செயலில் இறங்கினார். இதற்கென பிரத்யேகமாக ஒரு அல்காரிதம் உருவாக்கினார். ருணாலுடன் பேசிய போது, இன்னும் சில ஐடியாக்கள் கிடைத்தது. மேலும் மெருகூட்டினார்.

ஆரம்பத்தில் சில பிரச்சினைகள் இருந்தது. நீண்ட வழித்தடம் கொண்ட ரயில் பயணத்தில், ஒவ்வொரு ரயில் தடத்திலும் எத்தனை டிக்கெட்டுகள் இருக்கிறது என்று தேட நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது. எனவே தேடலை துரிதப்படுத்த மெனக்கெட்டிருக்கிறார்கள். இரண்டாவது, எல்லோரும் எளிதில் பயன்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். ஏனெனில் இது லட்சகணக்கான இந்தியர்களை சென்று சேர இது உதவும் என்பதே.

இந்திய ரயில்வேயை பொருத்தவரை டிக்கெட் கிடைப்பதென்பது, சவாலான ஒன்று. எனவே இதை சுலபப்படுத்த பிரத்யேகமாக ஒரு அல்காரிதத்தை உருவாக்கினோம். ஐஆர்சிடிசியில் டிக்கெட் குறித்து தேடினால், டிக்கெட் இருப்பை மட்டுமே காட்டும். மற்ற வழித்தடங்களிலும் டிக்கெட் இருக்கிறதா என்பதை தேட எங்கள் செயலி உதவும்.

பல்வேறு கட்ட சோதனைக்குப் பிறகு, முழுமையான செயலியை ஜனவரி 2016 -ல் வெளியிட்டார்கள். இந்த செயலிக்கு, ஐஐடி கரக்பூரில் நடந்த ‘எம்ப்ரெசரியோ’ என்ற பிசினஸ் மாடல் போட்டியில் ஒன்றரை லட்ச ரூபாய் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

எப்படி செயல்படுகிறது

எங்கிருந்து எங்கு செல்ல போகிறோம் என்ற விபரத்தை இந்த செயலியில் கொடுத்தால் போதும். அந்த வழித்தடத்திற்கு இடைப்பட்ட எல்லா ஸ்டேசனிலும் உள்ள டிக்கெட்டுகள் விபரத்தை காட்டும். துவங்கும் இடத்திற்கு முன்பு மற்றும் சென்று சேரும் இடத்திற்கு அடுத்து உள்ள ஊர்களில் உள்ள டிக்கெட் விபரங்களையும் காட்டும் விதமாக வடிவமைத்திருப்பது சிறப்பு.

எனவே டிக்கெட் கிடைப்பதற்கு ஏற்றார்போல நமது பயணத்தை வடிவமைத்துக்கொள்ளலாம். இந்த செயலியை பயன்படுத்த Cleartrip பயன்படுத்துபவராக இருந்தாலே போதும்.

எதிர்கால திட்டம்

விளம்பரம் காட்டி வருவாய் ஈட்டாமல், கமிஷன் அடிப்படையில் வருவாய் ஈட்டுகிறார்கள் என்பது நல்ல வருவாய் திட்டம். தற்பொழுது ஆண்ட்ராய்டு செயலியில் மட்டுமே இருப்பதால், சீக்கிரமே இணையதளத்தில் இயங்கத்திட்டமிட்டிருக்கிறார்கள். இணையதள உருவாக்கம் மற்றும் வடிவமைப்பிற்காக சிலரை தங்கள் குழுவில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த சில மாதங்களில் ஐ.ஓ.எஸ் செயலியையும் உருவாக்க இருக்கிறார்கள்.

எனவே இதற்கெல்லாம் மிகப்பெரிய முதலீடு தேவை. சில மாதங்களில் தங்களுக்கான நிதி கிடைக்கும் என நம்புகிறார்கள். எதிர்காலத்தில் ஆர்டிஃபீசியல் இண்டலிஜன்ஸ் மற்றும் பிக்-டேடா போன்றவற்றையும் இந்த செயலியில் புகுத்த இருக்கிறார்கள் என்பது சிறப்பு.

சிறப்பம்சம்

இந்த செயலி எல்லோரும் பயன்படுத்துவது போல எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு வழிகளில் தேடி டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்கிறது. ஒரு ஊருக்கு எந்தெந்த வழித்தடத்திலெல்லாம் செல்லலாம், எவற்றிலெல்லாம் டிக்கெட் இருக்கிறது என இது தெள்ளத்தெளிவாக காட்டிவிடும். இந்த செயலியில் ‘லிஸ்ட்’ மற்றும் ‘ரூட்’ என இரு பகுதிகள் இதற்காகவென்றே வைக்கப்பட்டிருக்கிறது.

மெருகூட்டல்

இப்போது இருக்கும் டிசைன் பத்தாது என்கிறார்கள். பயனர்கள் தங்கள் வழித்தடத்தை மேப் வடிவில் பார்க்க வகை செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த செயலி தற்பொழுது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது. அடுத்ததாக இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளில் கிடைப்பதற்கும் வகை செய்யப்போகிறார்கள். இதனால் பல லட்சகணக்கானோரை எளிதில் அடைய முடியும் என நம்புகிறார்கள்.

யுவர்ஸ்டோரி ஆய்வு

இந்த சந்தைக்கு இது முற்றிலும் புதிய விதமான செயலி ஆகும். கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காமல், ஃப்ளைட்டிலும் பேருந்திலும் செல்பவர்களுக்கு இந்த செயலி ஒரு அருமையான வாய்ப்பு என்பதால் மிகப்பெரிய சந்தை வாய்ப்பை கொண்டிருக்கிறது. இது போன்ற பலரும் இந்தத் துறைக்குள் நுழையும் பொழுது போட்டி அதிகரிக்கும். அது இந்தத் துறையை வேறு ஒரு கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும்.

இந்த செயலியை தரவிறக்க :  Ticket jugaad

ஆங்கிலத்தில் : HARSHITH MALLYA | தமிழில் : Swara Vaithee

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


தொடர்பு கட்டுரைகள்:

பஸ் பயண டிக்கெட் புக்கிங்கை எளிதாக்கும் 'டிக்கெட்கூஸ்.காம்'

சென்னை எக்ஸ்பிரஸில் 'இருவரின் புரிந்துணர்வு'- ஓர் ஒட்டுக் கேட்ட ஒப்பந்தம்!