இரு மகள்களின் தாயான 51 வயது பாடி பில்டர் நிஷ்ரீன் அளிக்கும் உடல் ஆரோக்கிய வழிகளை கேளுங்கள்!

3

கடந்த வாரம் என்னுடைய Zumba வகுப்பை தவறவிட்டேன். நேற்று மதிய உணவிற்கு வெண்ணெயுடன் தயாரிக்கப்பட்ட பராத்தாவை சாப்பிட்டேன். இவற்றை நினைத்து குற்ற உணர்வுடன் நிஷ்ரீன் பரீக் அவர்களுடனான ஒரு உரையாடலை நினைவுகூர்ந்தவாறே தூக்கத்திலிருந்து கண்விழித்தேன். ஐம்பதுகளில் இருக்கும் ஒரு நபர், தானியங்கள் சேர்க்காத உணவுமுறையை பின்பற்றிக்கொண்டே தினமும் நான்கு முதல் ஆறு மணிநேரம் உடற்பயிற்சி செய்வதை பார்த்திருக்கிறீர்களா? என்னுடைய குற்ற உணர்வை ஒதுக்கிவிட்டு 51 வயதான நிஷ்ரீனின் ஆரோக்கியத்திற்கான ரகசியத்தை அறிவதில் கவனம் செலுத்த தீர்மானித்தேன்.

பல வருடங்களாக அவர் பின்பற்றி வந்த ஒழுக்கமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி முறையுமே ஆண்களின் பகுதியாகவே பார்க்கப்படும் பாடிபில்டிங் பிரிவில் சிறப்பிக்கக் காரணம். கராத்தேவில் கருப்பு பெல்ட் பெற்ற நிஷ்ரீன் பயிற்சியாளராக இருக்கிறார். தனது க்ளையண்டுகளுக்கு சரியான உணவு முறை, பொருத்தமான ஏரோபிக்ஸ், பைலேட்ஸ், யோகா, தற்காப்புக் கலை மற்றும் பலுதூக்குதல் போன்றவற்றை பரிந்துரைத்து பயிற்சியளிக்கிறார்.

நிஷ்ரீன் 15 வயதில் கராத்தே பயிற்சி பெறத்துவங்கினார். ஏழு வருடங்களுக்குப் பிறகு தேசிய விளையாட்டுகளில் பதக்கம் வென்றார். எனினும் திருமணத்திற்குப் பிறகும் தாய்மையடைந்த பிறகும் தற்காப்புக் கலைகளிலிருந்து தள்ளியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் உடற்பயிற்சி மீதான அதீத ஆர்வம் மட்டும் தொடர்ந்தது. எனவே மற்ற உடற்பயிற்சி வகைகள் மற்றும் யோகாவில் திறன்களை வளர்த்துக்கொண்டார். கடந்த ஆண்டு Gladrags Mrs. India மற்றும் மிஸ் ஃபிட்னெஸ் இந்தியா பாடிபில்டிங் போட்டியில் அவரது குழந்தையின் வயதினையொத்த போட்டியாளர்களுக்கு எதிராக கலந்துகொண்டு பங்கேற்பாளர்கள் மற்றும் நடுவர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பரிச்சயமில்லாத மாடலிங் உலகில் நுழைந்தார்

அதிகளவு தண்ணீர் உட்கொள்வதும் கோகம் (kokam) ஊறவைத்த தண்ணீரை குடிப்பதும் தனது உடலமைப்பில் அல்கலைனை தக்கவைத்துக்கொள்ள உதவுவதாக தெரிவித்தார் நிஷ்ரீன். அவர் தானியங்களை சாப்பிடுவதில்லை. அரிசி மற்றும் கோதுமைக்கான ஆரோக்கியமான மாற்றாக பார்க்கப்படும் கம்பு, சோளம் ஆகியவற்றையும் இவர் சாப்பிடுவதில்லை. பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், அவருக்கு பிடித்த ப்ராண்டான GNC-யிலிருந்து புரதத்திற்கான இணைப்பொருட்கள் ஆகியவற்றையே அவர் சாப்பிடுகிறார். இவை அவரது தசைத்திறள்களை உருவாக்க உதவியது.

நிஷ்ரீன் கூறுகையில்,

கடந்த வருடம் எனக்கு 50 வயதானபோது ஏதேனும் வித்தியாசமாக செய்யவேண்டும் என்று விரும்பி ஃபிட்னஸ் மாடலிங் உலகில் முதல் முறையாக நுழைந்தேன். நான் மேடையேறவேண்டும். என் உடல் மதிப்பிடப்படும். ஃபிட்னஸ் மாடலிங்கில் மூன்று பிரிவு உள்ளது. அத்லெடிக் மாடல், பிகினி மாடல் அல்லது பாடிபில்டர். தசைகள் வலுவாக இருந்ததால் அத்லெடிக் பிரிவில் இணைந்தேன்.

நிஷ்ரீன் இரண்டு மணி நேர பலுதூக்குதலில் ஈடுபடுவதுடன் வகுப்பு நேரத்தில் தனது மாணவர்களுடன் இணைந்து யோகாவிலும் ஈடுபட்டார். அவர் கூறுகையில், “நான் சிறந்த பயிற்சியாளராகவும், சிறந்த மகளாகவும், சிறந்த அம்மாவாகவும், சிறந்த மனைவியாகவும் இருந்துள்ளேன். இப்போது நான் நானாகவே எனக்காக வாழ விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் என்னை சிறப்பாக தயார்படுத்திக்கொண்டு நடக்கவிருக்கும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறேன். நான் ஏற்கெனவே இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளதால் அடுத்த ஆண்டு கோவாவில் ஆசிய அளவில் நடக்கவிருக்கும் சர்வதேச பாடிபில்டிங் போட்டியில் பங்கேற்பதுதான் என்னுடைய தற்போதைய நோக்கம்.”

உளவியல் பிரிவில் பட்டம்பெற்ற நிஷ்ரீனுக்கு 25 மற்றும் 23 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தனது குழந்தைகளின் இளம்வயது முதலே படிப்பைக் காட்டிலும் உடலை சுறுசுறுப்புடனும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்தினார். இவரது கணவர் ஒரு வைர வியாபாரி. கராத்தே ஆர்வலர். எனவே இவரது ஒட்டுமொத்த குடும்பமும் சில சமயம் ஒன்றிணைந்து உற்சாகமாக சிரசாசனம் செய்கின்றனர்.

உங்களை மாற்றிக்கொண்டால் உலகையே மாற்றலாம்

நிஷ்ரீன் கூறுகையில், “நீங்கள் உடல்நலத்துடன் இல்லையெனில் மகிழ்ச்சியான வாழ்க்கையை இழந்துவிடுவீர்கள். அனைவருக்கும் நேரம் இருக்கிறது. மிகவும் திறமைசாலிகள் தங்களது நேரத்தை முறையாக நிர்வகித்து அவசியமான வேலைக்கு நேரம் ஒதுக்குவார்கள். தினமும் காலை கண்விழிப்பது, காபி அருந்துவது, பணிக்கு விரைந்து செல்லுவது, வரிசையாக மீட்டிங்கில் கலந்துகொள்வது, அதிக கலோரி கொண்ட ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்வது, பணி முடிந்து நண்பர்களுடன் சுற்றித்திரிந்து மது அருந்துவது என உடல் உழைப்பு இல்லாத ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையால் பலரது நாள் நிறைந்திருக்கிறது. இது எப்படி வாழ்க்கையாகும்? ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக ஏன் செலவிடக்கூடாது?

இன்று மக்கள் தனக்கு நீரிழிவு நோய் இருப்பதையும் உயர் ரத்த அழுத்தம் இருப்பதையும் பெருமையாக சொல்லிக்கொள்கின்றனர். வணிக பேரரசுகள் மேலும் விரிவடைந்து சிறப்பிக்க உதவி நமது ஆரோக்கியத்தை இழப்பது முறையல்ல.

அவர் கூறுகையில்,

பெற்றோர்கள் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய எண்ணெயில் பொறித்தெடுத்த சமோசாக்களை தங்களது குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்கின்றனர். நாம் அவர்களுக்கு எப்படிப்பட்ட மரபை விட்டுச் செல்கிறோம் என்று சிந்தித்துப் பாருங்கள்.

உடற்பயிற்சி சார்ந்த ஆரோக்கியமான பாதையில் நீங்கள் பயணிக்க நிஷ்ரீன் வழங்கும் சில குறிப்புகள்:

• ஒரு கால்பந்து க்ளப், ஒரு யோகா மையம் அல்லது குழுவாக மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி நடவடிக்கையில் சேரலாம்

• உட்கார்ந்தே இருக்கும் பழக்கத்திற்கு பதிலாக நடைபயிற்சியைத் துவங்கலாம்

• சுறுசுறுப்பை அதிகரித்துக்கொள்ளலாம். லிஃப்ட் பயன்படுத்துவதற்கு பதிலாக மாடிப்படி ஏறலாம். இது போன்ற சின்னச் சின்ன செயல்கள் உங்களது ஆற்றலை அதிகரித்து சோம்பலை குறைக்கும்.

• இரண்டு மாதங்களாக நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தால் ஜாகிங் அல்லது புஷ் அப்களை முயற்சிக்கலாம். பல ஆண்டுகள் தொடர்ந்து பார்க்கில் நடைபயிற்சி மேற்கொள்ளவேண்டாம். உங்களது உடலுக்கு அந்த நடைபயிற்சி பழகிவிடுவதால் அந்த பயிற்சி உங்களுக்கு உதவாது.

• ஜிம் போன்ற பயிற்சிகளுக்கு செலவிட முடியுமானால் அதில சேர்ந்துகொள்ளலாம். அது உங்களது வளர்சிதையில் மாற்றத்தை ஏற்படுத்தி வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

• ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு பசியெடுத்தால் வடா பாவ் சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு வாழைப்பழத்தை சாப்பிடலாம்

• ஆரோக்கியமற்ற ஜங்க் உணவு வகை சாப்பிடவேண்டும் என்று தோன்றினால் அந்த உணவு மீதான கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு அந்த குறிப்பிட்ட உணவு வகை மைதா, எண்ணெய், செயற்கை பொருட்களானாது என்பதை தொடர்ந்து நினைத்துக் கொள்ளலாம்.

• உங்களது வயிறு உள்ளங்கை அளவே இருக்கும் மிகவும் சிறிய உறுப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே அதற்கு அதிகப்படியான உணவு தேவைப்படாது.

தல்வால்கர்ஸ் க்ளாசிக் நேஷனல் பாடிபில்டிங் சேம்பியன்ஷிப்பிற்கு தயாராகி வருகிறார். அவர் விடைபெறுகையில், 

“குறைந்தபட்சம் ஒருவராவது தன்னை சிறப்பாக கவனித்துக்கொள்வதற்கு நான் ஊக்கமளித்தது தெரிந்தால் மகிழ்ச்சியடைவேன்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : ஷரிகா நாயர்