தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் முதலீடு: அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

0

தமிழகத்தில், பிரதமரின் 'சாகர் மாலா' திட்டத்தின்கீழ் மத்திய அரசு, அடுத்த 3 ஆண்டுகளில் பல்வேறு சாலை, துறைமுகம் போன்ற கட்டமைப்பு திட்டங்களில் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

சென்னையை அடுத்த எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் ரூ.1493 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 5 புதிய திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

அதானி குழுமத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு பெட்டக முனையம், செட்டி நாடு நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள பல்சரக்கு முனையம், ரயில் போக்குவரத்து இணைப்பு வசதி, ரேடியோ அலைகள் மூலம் உள் நுழைவு அனுமதி வழங்கும் வசதி, காகிதம் இல்லா அலுவலகம் ஆகியவற்றையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், 

"தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி வழியாக சென்னைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க புதிய நிறுவனம் ஒன்றை அமைக்க முன்வரவேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.

இத்திட்டத்தில் மத்திய அரசு 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய தயாராக உள்ளது என்று கூறிய அவர், துறைமுகம் சார்ந்த வளர்ச்சி பணிகளின் கீழ், இந்தியா முழுவதும் 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட இருப்பதாகவும், அவற்றில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.

15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை இயக்கத்திலிருந்து அகற்றி, மத்திய மாநில அரசுகளின் மானியத்துடன் புதிய வாகனங்களை வழங்க ஏதுவாக, திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதன்மூலம் 9 லட்சம் ரூபாய் அளவிற்கு பழைய வாகன உரிமையாளர்கள் சலுகை பெற்று குறைந்த செலவில் புதிய வாகனங்களை வாங்கலாம் என்றும், இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவது பெருமளவு தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மின்சார வாகனங்கள் பெருமளவிற்கு ஊக்குவிக்கப்படும் என்றும், பயோ எத்தனால் கலந்த எரிபொருளால் இயக்கப்படும் வாகனங்களால் தொழில்துறையும், விவசாய துறையும் பெரிதும் பயன்பெறும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

இஸ்ரோ சார்பில் உருவாக்கப்பட்டுள்ள லித்தியம், அயன் மின்கலத்திற்கான தொழில்நுட்பத்தை பெற்று மின்சார வாகனங்கள் இயக்கப்படும் என்றார். திரவ இயற்கை எரிவாயு மிகச்சிறந்த பயனை வழங்கும் என்றும், அதுவும் ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழகத்தில், தற்போது மத்திய அரசின் சார்பில், 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சாலை பணிகள் நடந்து வருவதாகவும், தமிழகத்தில் 12 நீர்வழி போக்குவரத்து வழிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகவும், கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக நிதி அமைச்சர் டி. ஜெயக்குமார், மத்திய அரசின் மக்கள் நலப்பணிகளுக்கு தமிழகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றார். தமிழகத்திற்கு மத்திய அரசு 17 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்று நிதியை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் நிதின்கட்கரி, அடுத்த 10 நாட்களுக்குள் இந்த தொகை வழங்கப்பட்டு விடும் என்ற உத்திரவாதம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரி, 

28 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் குளச்சல் துறைமுகம், அமைக்கப்படும்; என்று திட்டவட்டமாக தெரிவித்தார். சேது சமுத்திர திட்டம் பற்றி கேட்டதற்கு, ராமர் பாலம் பாதிக்கப்படாத வகையில், அத்திட்டம் பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள் 15 லட்சம் ரூபாய் மானியத்துடனும், ஒரு கோடி ரூபாய் அளவிற்கு முத்ரா கடனும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.