வீடற்று நாடோடியாக நடந்த நாட்களை கடந்து, 20 சலூன்களின் ஓனர் ஆகிய ஸ்கூல் டிராப் அவுட்!

0

“கடின உழைப்புடன் திறமையை வளர்த்தெடுத்தீர்களாயின், வெற்றி வீட்டு வாசலை வந்தடையும்” என்ற வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்குவோர் பலர். அவர்களுள் ஒருவர், சிவராமா பண்டாரி, பாலிவுட் உலகில் மோஸ்ட் வான்டட் ஹேர் ஸ்டைலிஸ்ட். பிளஸ் மும்பை சிட்டியின் முக்கிய 20 இடங்களில் ராயலான சலூனை வைத்துள்ள சிவராமா, ஒரு காலத்தில் சலூன் கடையில் மாதம் 30 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்துள்ளார். உழைப்பால் இவ்வுயரத்தை அடைந்தாலும், எதுவும் எளிதில் கிடைப்பதில்லையே!

பெரும்பாலான குழந்தைகள் அவர்களுடைய அப்பாக்களை சூப்பர் ஹீரோவாக பார்க்க நினைக்கும் வயதில், சிவராமா அவருடைய தந்தையை இழந்தார். ஆம், அவருக்கு நான்கு வயது இருக்கையில் அவருடைய தந்தை இறந்துள்ளார். அதன் பின், கர்நாடகாவின் உடுப்பி கிராமத்தில் இருந்து பிழைப்பு தேடி மும்பை பட்டணத்துக்கு செல்ல கிராமத்தார்கள் சேர்ந்து 365ரூபாய் சேகரித்து உதவியுள்ளனர். 

1959ம் ஆண்டுகளில் பெரும்தொகை அது. ஆனால், சில ஆண்டுகளிலே மீண்டும் கிராமத்துக்கே சிவராமாவை கூட்டிக் கொண்டு திரும்பியுள்ளார் அவருடைய தாயார். ஆனால், கணவரது வீட்டுக்கும் செல்ல முடியா நிலை. பிறந்தவீட்டுக்கு செல்வது என்றால், பெற்றோர்கள் அல்லாது வீடு உடன்பிறப்புகளின் வீடுகளாகிவிட்டது.

பட உதவி: mangalore today
பட உதவி: mangalore today
“அக்காலத்தில் நாடோடிகளாக ஒரு சொந்தக்காரர் வீட்டிலிருந்து மற்றொரு சொந்தக்காரர் வீட்டுக்கு அலைந்து கொண்டிருந்தோம். எங்க அப்பா இறந்தபின்னும் கூட, எங்க அம்மா வலுமையான பெண்ணாகவே இருந்தார்கள். யாருக்கும் சுமையாக இருக்கவில்லை. 

முகம் தெரியாதவர்களிடம் இருந்து உதவி கிட்டியது. அப்போ, எனக்கு 5 வயது. அம்மாவின் நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாத வயது என்றாலும், அவங்களோட வலியை என்னால் உணர முடிந்தது, எனும் சிவராமாவின் குடும்பம், சூழ்நிலை காரணமாக தற்காலிக கொட்டகைக்குள் குடியேறியுள்ளனர். அது தான் அவர்களுடைய வீடாகியது. ஆனால், அவ்வீட்டில் மின்சாரமுமில்லை கழிப்பறையுமில்லை. ஐந்தாவது படித்து கொண்டிருந்த சிவராமா, பள்ளி செல்லவும் வசதியில்லாமல் வீட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

பட உதவி: mangalore today 
பட உதவி: mangalore today 
“சைக்கிள் பஞ்சர் பார்க்கும் கடையில் வேலை செய்தேன். வீக்கெண்ட்களில் சந்தைக்கு சென்று காய்கறிகள் விற்பேன். ஆனால், நான் செய்ய நினைத்தது இதுவல்ல. சூழ்நிலையால் இந்த வேலையெல்லாம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டேன். தினந்தோறும் போராட்டமாக இருந்தது. ஆனா, அந்த வயதிலே பிரச்னைகளை புன்னகையுடன் எதிர்கொள்ள கற்றுக்கொண்டேன். ஏனெனில், பிரச்னை எங்கள் வாழ்க்கையில் சகஜமான ஒன்றாக இருந்தது,” 

எனும் சிவராமா பிரச்னைகளுக்கான தீர்வை கண்டறிய மும்பையை நோக்கி சென்றுள்ளார்.

1979ம் ஆண்டு மும்பையின் பாண்டுப் எனும் பகுதியில் உள்ள சலூன் ஒன்றில், மாதம் 30ரூபாய் சம்பளத்துக்கு பணியில் சேர்ந்துள்ளார். அப்போது அவருக்கு 15 வயது. 

அடுத்த 5 வருடங்கள் கழித்து, 1984ம் ஆண்டு சிவராமாவின் தொழில் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்துள்ளது கத்தாருக்கு வேலைக்கு சென்றது என்று பெட்டர் இந்தியாவுக்கு கூறிய அவர் மேலும் கூறுகையில், 

“உலகின் வெவ்வேறு முக்கில் இருந்து சலூனுக்கு வரும் மக்களின் முடித்தன்மை ஒன்றுக்கு ஒன்று பயங்கரமாக வேறுப்பட்டு இருக்கும். நீண்ட எஸ் வடிவ முடி, நன்கு சுருண்ட சுருட்டை முடி, ஸ்ட்ரைட் ஆன முடி என அனைத்துவித கூந்தல்களையும் எப்படி கையாளவேண்டும் என்பதை அங்கு தான் கற்று கொண்டேன். ”

சிவராமா கால்பந்து காதலர்களின், விருப்பங்களை மண்டையில் பிரதிபலிக்கும் கைதேர்ந்த ஹேர் ஸ்டைலிஸ்டாக தன்னை மாற்றியுள்ளார். 

பின், கத்தாரிலிருந்து இந்தியா திரும்பிய பிறகு சிவராமா சொந்தமாக சலூன் திறப்பதையே நோக்கமாக கொண்டிருந்துள்ளார். அச்சமயத்தில், மூடும் நிலையில் இருந்த சலூனை, கையில் இருந்த சேமிப்பை கொண்டு விலைக்கு வாங்கியுள்ளார். காசு பற்றாக்குறையின் காரணமாக, செகண்ட் ஹேண்ட் பர்னிச்சர்களை வாங்கி, 1988ம் ஆண்டு தானேவில் முதல் சலூனை அமைத்துள்ளார். அக்காலத்தில் சிவராமாவின் பணி நேரம் அதிகாலை டூ நள்ளிரவு வரை நீடித்துள்ளது. அந்த உழைப்பு கொடுத்த உயர்வாய் 1933ம் ஆண்டு முல்லுண்டு பகுதியில் மற்றொரு சலூனை திறந்திருக்கிறார். 

ஆயினும், பாலிவுட்டின் டாப் இயக்குனர்கள், நடிகர்கள் சிவாவின் கஸ்டமராகியதும், பெரும் நிறுவனமாக சிவராமாவின் சலூன் மாறியதெல்லாம் லோகண்ட்வாலாவில் சலூனை திறந்த பிறகே.

“முல்லுண்டுவில் சலூன் நடத்திக் கொண்டிருந்த போது, நண்பர் ஒருவர் இந்த ஊரில் தொழில் நடத்தினாலாம் உன் திறமை வெளிச்சத்துக்கு வராது என்று, லோகண்ட்வாலாக்கு கூட்டிப்போய் அந்த இடங்களை காண்பித்தார். லோகண்ட்வாலா சலூனை தொடங்கியது புதியப் பாதைக்கான தொடக்கமாய் அமைந்தது. பாலிவுட் இயக்குனர் மதுர் பண்டார்கர், அப்பாஸ் மஸ்தான், விஷால் பரத்வாஜ், டேவிட் தவான் என பல செலிபிரிட்டிகளும் சலூனுக்கு வந்து சென்றனர்,” 

என்று ஸ்டார் டஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

பட உதவி: NewsKarnataka.
பட உதவி: NewsKarnataka.

3 சகாப்தங்கள்... 20 சலூன்கள்... 300 பணியாட்கள்

முதல் மூன்று சலூன்களை தொடங்கும் வரையே முட்டி மோதியுள்ளார். அதற்கு பின் முழுவதும் ஏறுமுகமே. “Shiva Hairdressers Private Ltd ”என்ற பிராண்டாக வளர்ந்து நிற்கும் சிவராமா மும்பையின் முக்கியமான இடங்களில் 20 கிளைகளைத் தொடங்கியுள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால், அத்தனை சலூன்களும் சிவராமா எனும் ஒன்மேன் ஆர்மியின் கீழ் செயல்படுகின்றன. ஆம், இருபது சலூகளின் ஒன் அண்ட் ஒன்லி ஓனர் சிவராமா.

“ப்ரான்சைஸ் முறை மூலமா அல்லது முதலீட்டாளர்களை கொண்டோ என்னால், இன்னும் பல கிளைகளை முன்பே திறந்திருக்க முடியும். ஆனால், எனக்கு சுயமாக சலூன்களை திறப்பதில் தான் விருப்பம். இதுவரை 20 கிளைகளை, எந்த பங்குதாரரோ, முதலீட்டாளர்கள் உதவியின்றி மும்பையில் நிறுவியுள்ளேன். 

எப்படி ஒரே நேரத்தில் 20 கிளைகளையும் கவனித்து கொள்கிறீர்கள், கஷ்டமாக இல்லையா? என்று எப்போதும் கேட்பர். அவர்களுக்கு நான் கூறும் ஒரே பதில் 'இல்லை'என்பதே. 

பாலிவுட் செலிப்ரிட்டீஸ்கள் உடன் சிவா பட உதவி:Prokerala
பாலிவுட் செலிப்ரிட்டீஸ்கள் உடன் சிவா பட உதவி:Prokerala

வேலை என்பது எனக்கு தெய்வத்தினை வழிபடுவது போன்றது. அதனால், எச்சிரமும் இருப்பதாக தோன்றவில்லை, ”என்று எக்னாமிக் டைம்சுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ள சிவராமா, பேஷன் மற்றும் ஸ்டைல் உலகில் ராஜாவாக திகழும் மும்பை சிட்டியில், தான் மேலும் நிலைத்து நிற்பதற்காக ஆண்டுத்தோறும் பாரீன் டிரிப் அடித்து லேட்டஸ்ட் டிரெண்ட்களை கையோடு கற்றுத்தேர்ந்து திரும்புகிறார். அவற்றை தன் சலூனில் பணிபுரிபவர்களுக்கும் கற்றுக் கொடுத்து, அவருடைய போட்டியாளராக மாற்றுகிறார். 

'சிவாவின் சலூன் மற்றும் அகாடமி' என்ற பெயரில் இலவச பயிற்சியும் வழங்கி வருகிறார். 2010ம் ஆண்டு தொடங்கப்பட்ட அவருயை அகாடமியில் 4000பேர் பயிற்சி பெற்று ஹேர் ஸ்டைலிஸ்ட்களாக வலம் வருகின்றனர்.

சிறுபான்மை சமுதாயத்தினரின் திறன்மேம்பாட்டுக்காக மத்திய அரசு கொண்டு வந்த 'மௌலானா ஆசாத் தேசிய அகாடமி' (மானஸ்) திட்டத்தின் கீழ், சிவராமா பல நூறு பேருக்கு பயிற்சி வழங்கி, அதற்காக விருதும் பெற்றுள்ள அவர், 

இப்போது அவருடைய பயோகிராபியை புத்தகமாக்குவதில் படு பிஸி. வறுமையின் ஆழத்திலிருந்து எழுந்து உச்சம் அடைந்துள்ள இந்த தாழ்மையான சிறுவனின் கதை, இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் துரத்திச் செல்லவதற்கான ஊக்குவிப்பானாக அமையும்...

தகவல் உதவி : thebetterindia and stardust 

Related Stories

Stories by jaishree