கொடுத்த லஞ்ச பணத்தை திரும்பப் பெற 1100 என்ற எண்ணில் புகார் செய்யலாம்: ஆந்திர அரசு அசத்தல் திட்டம்!

0

அரசு வேலைக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கடும் எரிச்சலில் இருப்போருக்கு நல்ல செய்தி. ஆந்திர மாநிலம் அறிவித்துள்ள 1100 என்ற எண்ணை டயல் செய்து அதில் லஞ்சம் பற்றிய தகவலை புகாராக பதிவு செய்தால், லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரே நேரடியாக வீட்டுக்கு வந்து, வாங்கிய பணத்தை திருப்பி தந்துவிடுவார். இந்த அற்புதமான திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிமுகப்படுத்தியுள்ளார். 

சமீபத்தில் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில், அதிக லஞ்சம் புரளும் மாநிலங்களில் முதலிடத்தில் கர்நாடகாவும், இரண்டாம் இடத்தில் ஆந்திரா மாநிலமும் இருந்தது. இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு லஞ்சத்தை ஒழிக்க தீவிரமாக திட்டம் வகுக்க தீர்மானித்தது. அதன் முதல் கட்டமாக புகார் எண் 1100 அறிமுகப்படுத்தி அதை மக்களிடம் அறிவித்தது. 

பாதிக்கப்பட்டவர்கள், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் பற்றி இந்த எண்ணில் புகார் செய்யலாம். புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில், லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் தன் தவறை உணர்ந்து பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு நேரடியாக சென்று அந்த லஞ்ச பணத்தை திருப்பித் தருவதே இந்த திட்டத்தின் சிறப்பம்சம். அதாவது, லஞ்சப்புகாருக்கு உள்ளான ஊழியர், கடும் நடவடிக்கையில் இருந்து தப்ப, தான் வாங்கிய லஞ்சப்பணத்தை உரியவரிடம் திருப்பி அளிக்கவேண்டும் என்பதே இத்திட்டம் ஆகும். 

ஆந்திரா மாநிலத்தின் இந்த அறிவிப்பு அம்மாநில மக்களிடையே மட்டுமின்றி இந்தியா முழுதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், 

”திட்டம் அறிவிக்கப்பட்ட கடந்த சில நாட்களில் 12-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் லஞ்ச பணத்தை வாங்கியவர்களிடமே திருப்பிக் கொடுத்துள்ளனர். முறையான விசாரணைக்கு பின்னரே இதில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். 

500, 1000 ரூபாய் பணத்தை லஞ்சமாக வாங்கி திருப்பி கொடுத்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் புகார் தரும் அனைவருக்கும் பணம் திரும்ப கிடைத்து விடும் என்றும் அரசு தரப்பில் எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை. 1100 என்ற திட்டத்தில் இதுவரை லஞ்சம் தொடர்பாக 3000 புகார்கள் குவிந்துள்ளன. அது குறித்து ஆந்திர அரசு விசாரணை நடத்தி வருகிறது.

இதே போன்ற திட்டத்தை ஒவ்வொரு மாநிலமும் அமல்படுத்தினால், தைரியமாக லஞ்சம் கேட்டு வேலைகளை முடிக்கும் அதிகாரிகளும், இடைத்தரகர்களும் வசமாக மாட்டிக்கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.