70% இந்தியர்கள் அசைவ பிரியர்கள்: இந்தியா ஒரு 'சைவ நாடு' என்பதை பொய்யாக்கிய கணக்கெடுப்பு! 

3

இந்தியா ஒரு சைவ நாடு! இதுவே பல ஆண்டுகளாக பலரால் நம்பப்பட்டு வந்த கருத்து. மதம் மற்றும் சாதி கொள்கைகளின் அடிப்படைகளினால், இந்தியாவில் சைவம் உட்கொள்வோர் அதிகமுள்ளதாக பலரும் நினைத்தனர். ஆனால் அதற்கு மாறாக, உண்மையில் இந்தியா ஒரு அசைவ நாடாகவே உள்ளது தெரிய வந்துள்ளது. 

பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தால் (Office of Registrar General & Census Commissioner), நாடு முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்த உண்மை வெளியாகியுள்ளது. 2014இல் இந்திய பதிவாளர் ஜெனரல் வெளியிட்ட, மாதிரி பதிவுமுறை அமைப்பின் (Sample Registration System) கணக்கெடுப்பின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் 71 சதவீதம் பேர், அசைவம் உண்ணுபவர்களாக இருக்கின்றனர். 

ஆனால், தி ஹஃபிங்டன் போஸ்ட் இணையதளத்தின் அறிக்கைப்படி, 2004இல் இருந்த 75 சதவீதத்தில் இருந்து தற்போது 71 சதவீதமாக, இந்திய அசைவ மக்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இறைச்சி, கோழி மற்றும் மீன் வகைகளை விரும்பி சாப்பிடும் அசைவ மக்களாய், 98.8% ஆண்களையும், 98.6%  பெண்களையும் கொண்டு, தெலுங்கானா மாநிலம் முதலிடம் வகிக்கிறது என்று இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்காளம் (98.55%), ஆந்திர பிரதேசம் (98.25%), ஒடிஷா (97.35%) மற்றும் கேரளா (97%) ஆகியவை அதிக அசைவ மக்கள் வசிக்கும் பிற மாநிலங்கள் ஆகும்.

2014 இல் வெளியிடப்பட்ட தேசிய வீட்டு நுகர்வு மாதிரி ஆய்வின்படி (National sample survey on Household consumption), தெலுங்கானா மாநிலத்தையும் சேர்த்து பார்த்தால், ஒரு மாதத்திற்கு ஒரு தனிநபர் உட்கொள்ளும் கோழிக்கறி அளவில், 21 பெரிய மாநிலங்களில் ஆந்திரா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. மேலும், ஆட்டுக்கறி சாப்பிடுவதில், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு அடுத்ததாக, ஆந்திரா இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த இரு தெலுங்கு மாநிலங்களும், மிகப்பெரிய முட்டை மற்றும் கறி தயாரிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முட்டை தயாரிப்பில், 1309.58 கோடி முட்டைகளைக் கொண்டு ஆந்திரா பிரதேசம் முதலிடமும், 1006 கோடி முட்டைகளைக் கொண்டு தெலுங்கானா இரண்டாம் இடத்திலும் உள்ளது. கறி தயாரிப்பில், 5.27 மெட்ரிக் டன்களைக் கொண்டு, ஆந்திரா நான்காவது இடத்திலும், 4.46 மெட்ரிக் டன்களைக் கொண்டு, தெலுங்கானா ஆறாவது இடத்திலும் உள்ளது.

நம் நாட்டின் எருமை இறைச்சி ஏற்றுமதியில் ஆந்திராதான் முதலிடம். அத்துடன், இறால் மீன்கள் ஏற்றுமதியிலும் ஆந்திரா நன்கு பேர்போன மாநிலம். 

நாடளவில், 26.8 சதவீதம் ஆண்கள் மற்றும் 23.4 சதவீதம் பெண்கள் என மிகக்குறைந்த அசைவம் உண்ணும் மக்களைக் கொண்ட பெருமை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேரும். அதேப்போல் தென்னிந்திய மாநிலங்களில்,   மிகக்குறைந்த அசைவ மக்களை கர்நாடகா மாநிலம் கொண்டுள்ளதாய், கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

இதை டெக்கான் க்ரானிக்கல் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

மாநிலங்கள்                                 ஆண்கள்                                  பெண்கள்

1. ராஜஸ்தான்                                             73.2%                                                    76.6%

2. ஹரியானா                                               68.5%                                                     70%

3. பஞ்சாப்                                                      65.5%                                                    23.4%

மேல் குறிப்பிட்டப்படி, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகியவை, நம் நாட்டில் அதிகளவில் சைவ மக்களைக் கொண்ட மூன்று மாநிலங்களாகும். 

கட்டுரை: Think Change India