35 ஆயிரம் கோடிக்கு அதிபதி, அனில் அம்பானியை விட பணக்கார இந்தியர் யார் என தெரியுமா உங்களுக்கு?

9

பங்குசந்தை ப்ரோக்கர் ஹக்கிஷன் தமானி என்பவரை பலரும் அறியாமல் இருந்துள்ளனர். ஆனால் அவர் 2000-ம் வருடம் நிறுவிய D-Mart எனும் ரீடெயில் சூப்பர்மார்க்கெட் இன்று சுமார் 40000 கோடி ரூபாய் மதிப்புடையது என்றால் நம்புவீர்களா? இவர் அனில் அம்பானி மற்றும் ராஹுல் பஜாஜை காட்டிலும் பணக்காரர் என்பதையும் நாம் அறியவேண்டும். அவரின் கதை இதோ...

பங்குசந்தையில் நுழைய எண்ணமில்லாமல் இருந்தவர் தமானி. பால் பியரிங்க்ஸ் துறையில் சாதரண வர்த்தரகராக வாழ்க்கையை தொடங்கிய இவர், தந்தையின் இறப்பு காரணமாக அதை மூடிவிட்டு சகோதரருடன் ஸ்டாக் ப்ரோகிங் நிறுவனத்தில் சேரும் நிலை ஏற்பட்டது. தமானிக்கு பங்கு சந்தை குறித்த எந்த ஐடியாவும் இல்லை. ஆனால் அதில் சேர்ந்ததும் அத்துறைப் பற்றி தீவிரமாக தெரிந்து கொண்டு, சந்திரகாந்த் சம்பத் என்ற பிரபல முதலீட்டாளரை தன் முன்மாதிரியாக கொண்டு பங்குசந்தை வர்த்தகத்தில் அறிவை பெருகிக் கொண்டார் தமானி.  

பல தோல்விகளை சவால்களை சந்தித்தாலும், மனம் தளராமல், தனக்கான ஒரு தனி ஸ்டராடஜியை வகுத்து பணிபுரியத் தொடங்கினார். அவர் எப்போழுதும் நீண்ட நாள் பலன்கள் மீது நம்பிக்கை உடையவர். அது அவருக்கு சாதகமாக அமைந்து, ஒரு சில ஆண்டுகளில், மும்பை தலால் தெருவில் ஒரு மிகப்பெரிய நபராக உருவெடுத்தார். தன் தொழிலில், எந்தவிதமான ஈகோ மற்றும் பிரச்சனைகளை வரவிடாமல் பார்த்துக்கொண்டார். 90-களில் மாபெரும் செல்வத்தை ஈன்று ஒரு உயரிய இடத்தை அடைந்தார் தமானி. 

மிஸ்டர்.வைட் என்று அழைக்கப்பட்ட தமானி எப்போதும் வெண்ணிற உடையில் வலம் வருவார். பிரபல ஸ்டாக் மார்க்கெட் கிங் ஹர்ஷத் மெஹ்தாவின் நேரடி எதிரியாகவும் தமானி இருந்தார். இருவருக்கிடையே ஆன போட்டியில் வெற்றிப்பெற்று பங்குசந்தை முதலீட்டாளர்களில் தலைச்சிறந்தவராக இறுதியில் உருவெடுத்தார் ஹகிஷன் தமானி. 

டைம்ஸ் ஆப் இந்தியா செய்திகளின்படி, 61 வயதான இவர், அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்-ல் 82.36 சதவீத பங்குகளை கொண்டுள்ளார் என்றும் இவரின் சொத்து மதிப்பு ரூ.32,934 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதைத்தவிர விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ், டிவி18, சோமானி செராமிக்ஸ், ஜெய் ஸ்ரீ டீ, சாம்டெல், சுந்தரம் பாஸ்டனர்ஸ், ஜிஇ கேப்பிடல் மற்றும் 3M இந்தியா போன்ற பல நிறுவனங்களில் இவர் பங்குகள் வகிக்கிறார். 

D-Mart சூப்பர்மார்க்கெட் கிளைகள் அனைத்தும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட் (ASL) கீழ் செயல்பட்டு மஹாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, சட்டிஸ்கர் மற்றும் என்சிஆர் உட்பட 117 இடங்களில் செயல்பட்டு வருகிறது. 

தமானி தற்போது 5.4 பில்லியன் டாலர் (ரூ.35,775 கோடி) சொத்துக்கு அதிபதி என்று ஃபோர்ப்ஸ் அண்மையில் வெளியிட்ட பட்டியலில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இவர், உலக அளவில் உள்ள முதல் 15 இந்திய பில்லினியர்களில் ஒருவர் என்று கூறியுள்ளது. 

‘இந்திய வாரன் பஃப்பெட் 'Indian Warren Buffet', என்று அழைக்கப்படும் தமானியின் சொத்துக்களில், மும்பை அலிபாகில் உள்ள 156 அறைகள் அடங்கிய பிரபல ராடிசன் ப்ளூ ரிசார்ட் அடங்கும் என்று ஃபோர்ப்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இத்தனை உயரிய இடத்தில் இருந்தும், தமானி மீடியாக்களின் வெளிச்சத்தில் அதிகம் வராத ஒரு  எளிமையான மனிதராகவே உள்ளார். அவரின் வெற்றிக்கு இதுவே காரணம் என்றும் கூட சொல்லலாம். 

கட்டுரை: Think Change India