90 நாளில் 1 லட்சம் போர்வைகள்: ‘கோ ஃபார் சேஞ்ச்’ அமைப்பின் வித்தியாசமான குளிர்கால நன்கொடை தேடல்!

0

கடும் குளிர் காலத்தில் வீடு வாசல் இல்லாதோர் படும் அவஸ்தையை சொல்லி மாள முடியாது. அவர்களின் நலனுக்காகவே போர்வைகளை தானமாக வழங்கி வருகிறது அகமதாபாத்தைச் சேர்ந்த 'கோ ஃபார் சேஞ்ச்' அமைப்பு. நல்ல மனம் கொண்டோரிடம் போர்வைகளையும், ஜமுக்காளங்களையும் நன்கொடையாகப் பெற்று அதை இல்லாதோருக்குக் கொடுத்து வருகிறது இந்த அமைப்பு. போர்வை தானம் செய்வோம் (Pledge-a-Blanket) என்ற பெயரில் 90 நாள் நன்கொடை பெறும் இயக்கத்தையும் இந்த அமைப்பு நடத்தி வருகிறது. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட போர்வைகளை நன்கொடையாக பெறுவதை இலக்காக வைத்துள்ளது.

எல்லோருக்கும் குளிர்காலத்தில் அதிலிருந்து தப்பும் வசதி கிடைத்து விடுவதில்லை. அது இல்லாமலேயே கடும் குளிரில் நடுங்குவோர் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த போர்வை தானம்.

கோடைகாலத்தை விட குளிர்காலம் 20 மடங்கு அதீதமாக, அபாயகரமானதாக இருக்கும் என்பது 2015-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த லான்சட் என்ற இதழ் நடத்திய ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2001 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கடும் குளிரிக்கு 10,933 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரத் தகவல் தெரிவிப்பதாக இந்தியாஸ்பெண்ட் கட்டுரை தெரிவிக்கிறது. அதாவது சராசரியாக ஆண்டுக்கு 781 இந்தியர்கள் கடும் குளிரிக்கு மரணமடைகிறார்கள்.

இதை கருத்தில் கொண்டுதான் குளிர் மரணத்தைத் தடுக்கும் வகையில் இந்த இயக்கத்தை நடத்தி வருகின்றனர் மனிதாபிமான சமூகப் பணியாளர்களான ஆசிஷ் மற்றும் சங்கருபா டேம்ளே ஆகியோர்.

இந்த இயக்கத்தில் தனி நபர்கள், அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம். தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் குறித்து இந்த அமைப்பிடம் தெரிவிக்கலாம். சமூகமாற்றத்துக்கான ஒருங்கிணைந்த இயக்கமாக இது நடத்தப்படுகிறது.

சமுதாயத்தில் அர்த்தப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தி அதன் மூலம் நல்ல முடிவுகளை ஏற்படுத்துவதே Go-for-Change இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். சமுதாயத்தில் பெரிய அளவில் ஒட்டுமொத்த மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இது செயல்படுகிறது. ஆன்லைன் மூலமாக இது இயங்குவது இன்னும் பணியை எளிதாக்குகிறது.

இதத்திற்கு உறுதி

இந்த போர்வை தானம் குறித்து ஆசிஷ் கூறுகையில், 

"போர்வை என்பது பல பயன்பாட்டுக்கு பயன்படுகிறது. குடும்பத்தில் அனைவரும் அதைப் பயன்படுத்த முடியும். வீட்டிலும், வெளியிலும் அதைப் பயன்படுத்த முடியும். குழந்தைகள் பள்ளிக்கும் கூட எடுத்துச் செல்ல முடியும். ஆரம்பத்தில் இதை ஒவ்வொருவரிடமும் பெற்று வந்தோம். பின்னர் பல நிறுவனங்கள் எங்களுக்கு உதவியாக வந்தன." 

2017-ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இதை தொடங்கினோம். 1 லட்சம் போர்வைகளைப் பெறுவது எங்களது இலக்கு. இந்த இயக்கமானது 2018-ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி வரை நடைபெறும். ஒரே வாரத்தில் 489 பேர் மூலமாக 588 போர்வைகள் எங்களுக்குக் கிடைத்தன. இதுவரை 1000 போர்வைகள் வரைசேகரித்துள்ளோம்," என்கிறார்.

இந்த Go-for-Change அமைப்பின் இணையதளத்தில் போர்வைகளைத் தானமாக தர விரும்புவோருக்காக கோரிக்கை விடுக்கப்பட்டு, அதுதொடர்பான வழிமுறைகளும் விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நன்கொடையாளரும் தாங்கள் தானம் தர விரும்பும் மாநிலத்தை தேர்வு செய்து அதில் போய் வழங்கலாம். தானமாக பெறப்படும் போர்வைகள் அனைத்தும் பானிப்பட் நகரில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

வட இந்தியாவில் உள்ள 11 தன்னார்வ நிறுவனங்கள் இந்தப் பணிக்காக தேர்வு செய்யப்பட்டு அவர்களுடன் இணைந்து இந்த நன்கொடை இயக்கமானது செயல்படுத்தப்படுகிறது. இந்த போர்வைகளை பிற பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கு ப்ளூடார்ட் கூரியர் நிறுவனம் உதவிக்கு கை கோர்த்துள்ளது.

“போர்வை பார்சல் கிடைத்ததும் உடனடியாக அதை டெலிவரி செய்ய ப்ளூ டார்ட் உதவுகிறது. தானமாக பெறுவோரின் புகைப்படம், வீடியோக்கள் சேகரிக்கப்பட்டு அவை ஆவணப்படுத்தப்படுகின்றன,” என்று கூறுகிறார் ஆசிஷ்.

மாற்றத்தை நோக்கி செல்வோம்

Go-for-Change அமைப்பானது 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் நிறுவப்பட்டது. இது சாரிட்டிக்கான ஆன்லைன் தளமாகும். மேலும், இது அனைத்து வகையான சமூக மாற்றத்துக்கான செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் வகையிலான அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது.

நிகழ்ச்சிகள், வெளியீடுகள் உள்ளிட்டவற்றையும் இது மேற்கொள்கிறது. இதன் பயன்பாடானது முற்றிலும் இலவசமானது. கண்காட்சிகள் மூலம் வைக்கப்படும் பொருட்களின் விற்பனை மூலம் மட்டுமே வருவாய் ஈட்டப்படுகிறது. ஆன்லைன் ஸ்டோர் மூலமாக பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த தளத்திற்கு வருவோர் பல்வேறு தலைப்புகளில் விவாதங்களையும் மேற்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்புகளும் நடத்தப்படுகின்றன. பல்வேறு வகையான ஸ்காலர்ஷிப்புகள் குறித்த விவரத்தையும் இதில் பார்க்க முடியும். இந்தியாவின் மிகப் பெரிய கல்வி ஸ்காலர்ஷிப் குறித்த பிரமாண்ட டேட்டா பேஸாக இது விளங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தங்களைச் சுற்றிலும் உள்ள என்ஜிஓக்கள் குறித்த வி்வரமுபம் இந்த தளத்தில் இருப்பதைக் காணலாம்.

“பொருளாதார அளவில் நல்ல நிலையில் இருப்போர் மட்டுமல்லாமல், நலிவடைந்தோரும் கூட தங்களால் முடியும்போது நன்கொடைகளை அளிக்க முடியும். இது முழுமையான மனிதாபிமான, மனித நேய பணியாக முன்னெடுத்து செய்யப்படுகிறது,” என்கிறார் ஆசிஷ்.

போர்வை நன்கொடை அளிக்க: Pledge a Blanket

ஆங்கில கட்டுரையாளர்: ஷின்ஜினி செளத்ரி