அவுட் சோர்ஸிங்கில் அற்புதம் செய்யும் 'கிளவுட் ஃபேக்டரி'

0

ஏழைகளின் வங்கி என அழைக்கப்படும் முகமது யூனுஸின் "கிராமீன் வங்கி" ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியதை யாராலும் மறுக்க முடியாது. சமூக பங்களிப்பு மூலம் பரஸ்பரம் கடன் வழங்கி ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்கியதில் கிராமீன் வங்கி ஒரு முன் மாதிரி. கிராமீன் வங்கியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு உருவானதே "கிளவுட் ஃபேக்டரி"(CloudFactory). வெளியாட்களிடம் பணியை ஒப்படைத்து முடிக்கும் (அவுட் சோர்ஸிங்) பிஸினஸை கிளவுட் ஃபேக்டரி முன்னெடுத்தது.

நேபாளத்திலிருந்து இயங்கும் இந்த நிறுவனம், உலகெங்கும் உள்ள மனித வளம் பயன்படுத்தப்படாமல் இருப்பதை கண்டறிந்து, அதை சரியாக அடையாளம் கண்டு அங்கீகரித்துக் கொண்டது கிளவுட் ஃபேக்டரி. தகவல் பதிவேற்றம் (டேடா என்ட்ரி), பிராஸஸிங் (ஒழுங்குப்படுத்துதல்), கலெக்‌ஷன் (ஒருங்கிணைத்தல்), கேடகரைஷேஷன் (தரம் பிரித்தல்) போன்ற அனைத்து பணிகளையும் சிறப்பாக ஏற்று நடத்தியது கிளவுட் ஃபேக்டரி. கிளவுட் ஃபேக்டரி மூலம் எண்ணற்றோர் கணினி அறிவு பெற்றதுடன் கணிசமான ஊதியத்துடன் நல்ல பணியிலும் அமர்ந்தனர்.

குறைந்த செலவில், நிறைவான தரத்துடன் சேவையை வழங்கி வருகிறது கிளவுட் ஃபேக்டரி. ஆன்லைன் வேலை என்பதால், இதில் நேரம் தவறுதலுக்கோ அல்லது மற்ற தொழிலைப் போல் உற்பத்தி பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றுவதால் ஏற்படும் பொருட் செலவோ இல்லை.

அதேவேளையில் தரத்தில் எப்போதுமே கிளவுட் ஃபேக்டரி சமரசம் செய்து கொள்ளவில்லை. தொழிலாளர்களை அவ்வப்போது ஓரிடத்தில் ஒருங்கிணைத்து அவர்களது திறன்களை அங்கீகரிக்கவும், ஆய்வுக்கு உட்படுத்தவும் கிளவுட் ஃபேக்டரி தவறவில்லை.

குழுவாக சேர்ந்து பணியாற்றும்போது ஒருவர் சரியாக பணி செய்யாவிட்டாலும் அது மொத்த குழுவையும் பாதிக்கும் என்பதை அறிந்திருந்த கிளவுட் ஃபேக்டரி அனைவரையும் சமமாக ஊக்குவிக்க தவறவில்லை. 

கிளவுட் ஃபேக்டரியின் விற்பனை பிரிவு துணைத் தலைவர் டாம் புச்காரிச் கூறும்போது, "கிளவுட் ஃபேக்டரி நிறுவனம் சிறப்பாக சேவை செய்கிறது என எல்லைகள் கடந்து பேசப்பட்டால் மட்டும் போதாது, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சமூகத்தினர் மீது நான் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறேன் என்பதே உண்மை", என்கிறார்.

எனது நிறுவனம் வழங்கும் அதே சேவையை வழங்கும் பல நிறுவனங்களுடன் போட்டிபோடும் போது எனது ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றி தரமான முடிவுகளை தர வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருக்கும். இதை கருத்தில் கொண்டே கிளவுட் ஃபேக்டரி 'கேரக்டர் ரேடிங்' என்ற பணியாற்றல் அளவுகோலை உருவாக்கியது. இதன் மூலம் தனிநபர்கள் தங்களது ஆற்றலை மேம்படுத்துவதுடன் நிறுவனத்துக்கும் தேவையான பங்களிப்பை அளிக்க முடிகிறது" என விவரித்தார்.

தங்கள் நிறுவனத்தில் பிண்ணிப் பிணைந்திருக்கும் சமூக கட்டமைப்பைப் பார்த்து தற்போது சில நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளன எனக் கூறும் டாம் ஆனால், அதிகளவில் முதலீடுகளை ஏற்பதில் நாங்கள் அவசரம் காட்டுவதில்லை. ஏனெனில் அதிக முதலீடு சமூக பங்களிப்பை ஓரங்கட்டிவிடக்கூடாது என்பதே எங்கள் கவனம் என்றார் டாம்.

மேலும் அவர் கூறுகையில், "கிளவுட் ஃபேக்டரியில் சுமார் 150 பணியாட்கள் இருக்கின்றனர். 7 நாட்களில் 1,18,000 ஆயிரம் பணிகளை முடிக்கும் திறன் கொண்டவர்களாக இவர்கள் இருக்கின்றனர். எங்கள் போட்டி நிறுவனங்கள் எங்களைப் பார்த்து மிரட்சியில் உள்ளன" என்றார்.

"இப்போது கிளவுட் ஃபேக்டரியில் பணியாற்றும் அனைவரும் இங்கேயே தேங்கிவிடப்போவதில்லை. எதிர்காலத்தில் அவர்கள் மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ, பத்திரிகையாளர்களாகவோ உருவாகலாம். அதற்கான சுதந்திரத்தையும், இடத்தையும் கிளவுட் ஃபேக்டரி வழங்குகிறது" என்று இறுதியாக அவர் தெரிவித்தார்.

இணையதள முகவரி: Cloud Factory