வீட்டு வசதி பிரச்சனைகள்; சுபம் நிறுவனத்தின் புதிய பாதை

0

மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுவதும், வேறு இடங்களில் குடிபெயர்வதும் இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளில் நகர்புற வளர்சிக்கான முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. வீட்டு வசதி மேம்பாட்டு நிதி நிறுவனமான "சுபம்" (Shubham) இன் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான (சி.ஓ.ஓ) அஜய் ஓக், இந்தியா முழுவதிலும் இருந்து மேம்பட்ட வாழ்க்கையைத்தேடி மக்கள் நகரங்களுக்கு குடிபெயர்வதால் நகரங்களின் வளத்தின் மீது பெரும் நெருக்கடி ஏற்படுவதாக சொல்கிறார். "தேவையான அளவு நிதி இல்லாமல் நகர்புற அமைப்புகள் தங்கள் பகுதிகளில் குறைந்தபட்ச வசதிகளை அளிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன மற்றும் பெரும்பாலான நகரங்களில் குறைந்த செலவிலான அல்லது வாங்ககூடிய விலையிலான வீட்டு வசதி புறக்கணிக்கப்படுகிறது என்கிறார். அதோடு பெரும்பாலான குடிபெயரும் தொழிலாளர்கள், முறைசாரா துறையில் பணியாற்றுவதால் அவர்களுக்கு கடன் கிடைப்பது பெரும் சவாலாகி நல்ல மற்றும் பாதுகாப்பான வீடு பெறும் வாய்ப்பை மேலும் குறைத்துவிடுகிறது ”என்கிறார் அஜய்.

இப்போது தான் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான நிதி (சி-சிரீஸ்) பெற்றுள்ள நிலையில் சுபம், சமீபத்தில் வர்த்தக வெற்றியுடன் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வர்த்தக மாதிரியை உருவாக்க நிறுவனங்களுக்கு சவால் விடும் சர்வதேச திட்டமான பிஸ்னஸ் கால் டூ ஆக்‌ஷன் (பிசிடிஏ) -ல் இணைந்திருக்கிறது. புதிய தொடர்பு மற்றும் கற்றலுக்காக சுபமின் உலகலாவிய தொடர்புகளை விரிவுபடுத்துவதுடன் இந்த கூட்டு முறைசாரா வருமானம் கொண்ட பிரிவினருக்கான வீட்டு வசதி பற்றிய முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.

கேள்வி: இந்தியாவில் முறைசாரா வருமானப்பிரிவில் வாழும் மக்களின் வீட்டுத்தேவை தொடர்பான பொதுவான பிரச்சனைகள் என்ன?

பதில்: குடிபெயர்தல் பிரச்சனை, முறைசாரா வருமானத்தால் உண்டாவதல்ல; வருமானத்திற்கான ஆதாரம் இல்லாததால் ஏற்படுவது. கடன் காலத்திற்கான பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் குடும்பங்கள் முதலீடு செய்வதில்லை. அவர்களுக்கு முறையான கடன் வசதி, அதிலும் குறிப்பாக வீட்டு வசதிக்காக கடன் அரிதாக தான் கிடைக்கிறது. நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களே வருமான வரி கணக்கு தாக்கல் செய்கின்றனர். மேலும் 55 சதவீத மக்களுக்கு தங்கள் வருமானத்தை நிரூபிக்க கூடிய முறையான ஆவணங்கள் இல்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த குடும்பங்கள் முறையான கடன் வசதி பெற முடியாமல் போகிறது. இத்தகைய குடும்பங்கள் அதிக வட்டிக்கு, குறைவான காலத்திற்கு கடன் வாங்குகின்றனர். இது அவர்களின் வாங்கும் சக்தியை குறைத்து, முறையில்லாத, அதிகாரபூர்வமில்லாத பாதுகாப்பில்லாத வீட்டு வசதியை பெற வைக்கிறது.

கேள்வி: தில்கடன் வழங்குவதை தீர்மானிப்பதில் முக்கிய அம்சம் முறைசாரா தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை கதையை பகிர்ந்து கொள்ள வைப்பது என சுபம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் முக்கிய அம்சங்கள் என்ன?

பதில்: குடும்பங்களுடனான எங்கள் உரையாடல், இரண்டு முக்கிய அம்சங்களை கண்டறிவதற்காக செய்யப்படுகிறது- ஒன்று அவர்கள் வாங்க உத்தேசித்திருக்கும் வீடு அவர்களுக்கு பொருத்தமானது தானா? மற்றொன்று அவர்களிடம் அதற்கான சக்தி இருக்கிறதா? என தெரிந்து கொள்வது. குடியிருக்கும் இடத்தில் இருந்து பணியிடத்திற்கான தொலைவு, வருவாய் ஈட்டும் ஆற்றல் மீதான தாக்கம், பள்ளி மற்றும் மருத்துவ வசதிகளுக்கான அருகாமை ஆகிய அம்சங்கள் தொடர்பான உரையாடல் அவர்கள் நடைமுறை அம்சங்கள் பற்றி யோசிக்க வைக்கின்றன. நிதி ஆதாரம், மாதந்திர சேமிப்பு, ஒரு முறை செலவிற்கான சாத்தியம், மாதத்தவணைகளின் நீண்டகால தன்மை ஆகியவை தொடர்பான கலந்துறையாடல், வாங்கும் சக்தி தொடர்பான சரியான அணுகுமுறையாக அமைந்து இந்த நேரத்தில் இத்தகைய பொறுப்பு ஏற்றதா என சரியாக முடிவு எடுக்க உதவுகிறது.

கேள்வி: வாடிக்கையாளரால் கடனை கட்ட முடியவில்லை என்றால் நீங்கள் பின்பற்றும் நடைமுறை என்ன?

பதில்: எந்த கடன் வழங்கும் நிறுவனமும் எதிர்கொள்ளகூடியது போலவே கடன் பெற்ற பிறகு தங்கள் வருவாய் பாதிக்கப்பட்டதால் மாத்ததவணை கட்ட முடியாமல் அவதிப்படும் சில வாடிக்கையாளர்கள் உண்டு. எங்களுடனான உறவு நீண்டகால நோக்கிலானது என்பதால், கடன் பெற்றவருடன் இணைந்து அவர் தனது வருவாயை அதிகமாக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவர் என்று பார்க்கிறோம். அல்லது வீட்டை உரிய முறையில் பைசல் செய்வதற்கான வாய்ப்பை அவருடன் இணைந்து பரிசீலிக்கிறோம். பெரும்பாலான கடன்களில் வாடிக்கையாளர் வீட்டின் மதிப்பில் பாதித்தொகையை செலுத்தியிருப்பார்கள், எஞ்சிய தொகையை சுபம் வழங்கியிருக்கும். இது போன்ற நெருக்கடியான சூழலில் அந்த தொகையை சொத்திலிருந்து வெளியே எடுத்து தங்கள் வர்த்தகத்தை சீராக்கி கொள்ளலாம்.

கேள்வி: நீங்கள் செயல்படுத்திக்கொண்டிருக்கும் திட்டங்கள் என்ன? அவற்றின் முக்கிய சவால்கள் என்ன?

பதில்: தற்போதைய நிலையில் இந்தியாவுக்குள் எங்கள் வீச்சை விரிவாக்க திட்டமிட்டுள்ளோம். 2018 ஆண்டு வாக்கில் 50,000 குடும்பங்கள் பாதுகாப்பான, மேம்பட்ட வீட்டை கொண்டிருக்க விரும்புகிறோம். சுபம், பிகார், சத்தீஸ்கர், தில்லி, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. எங்களுடைய சேவைகள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எங்களுடைய செயல்பாட்டு முறை கடந்த நான்கு ஆண்டுகளாக நன்கு பரிசோதிக்கப்பட்டுள்ளது. இப்போது முக்கிய நோக்கம், நிறுவனத்தை அமைப்பு நோக்கில் வலுப்படுத்தி, செயல்திறனை மேம்படுத்தி மேலும் பல குடும்பங்களுக்கு இந்த முறையான பலனை பெற்றுத்தர விரும்புகிறோம்.

வீட்டுவசதி பிரச்சனை மற்றும் அதை சுபம் எதிர்கொள்ளும் விதம் பற்றி மேலும் அறிய : http://www.shubham.co/