தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த கோவையில் 'ஹெட்ஸ்டார்ட்' கிளை துவக்கம்!

0

தென்னிந்தியாவின் முக்கிய தொழில் நகரமாக அறியப்படும் கோவையில் உள்ள இளம் தொழில்முனைவோருக்கு வழிகாட்டும் வகையில் ஸ்டார்ட் அப் சூழலை ஊக்குவிக்கும் தன்னார்வ அமைப்பான 'ஹெட்ஸ்டார்ட்' Headstart தனது கிளையை கோவையில் துவக்குகிறது. கோவையில் உள்ள புகழ்பெற்ற இன்குபேட்டர் மையமான பி.எஸ்.ஜி ஸ்டெப்பில் அமையும் இந்த கிளையின் துவக்கம் விழா நாளை (மார்ச் 5 ம் தேதி) நடைபெறுகிறது.

கோவை மாநகரம் தொழில் வளர்ச்சி மற்றும் உற்பத்தி துறைக்கான மையமாக விளங்கி வருகிறது. தொழில்முனைவு வேர்களை ஆழமாகக் கொண்ட இந்நகரம் இப்போது ஸ்டார்ட் அப் துறையிலும் துடிப்பான செயல்பாட்டை கண்டு வருகிறது. ஐ.டி, சுகாதாரம், விவாசயம் மற்றும் ஐ.ஒ.டி ஆகிய துறைகளில் பிரகாசமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன.

கோவையில் நிலவும் தொழில்முனைவுச் சூழல் காரணமாக இந்தியாவின் அடுத்த ஸ்டார்ட் அப் வளர்ச்சி மையமாக இதனை ஹெட்ஸ்டார்ட் அமைப்பு கருதுகிறது. இதனையடுத்து கோவையில் தனது கிளையை (சாப்டர்) துவக்க திட்டமிட்டுள்ளது. கோவையில் உள்ள புகழ்பெற்ற பிஎஸ்ஜி கல்வி நிறுவனத்தால் இந்திய அரசுடன் இணைந்து நடத்தப்படும் இன்குபேட்டர் மையமான பிஎஸ்ஜி ஸ்டெப்பில் அமையும் இந்த கிளையின் துவக்க விழா நாளை நடைபெறுகிறது.

பிஎஸ்ஜி ஸ்டெப் இந்தியாவின் முன்னோடி இன்குபேட்டர் மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஸ்டார்ட் அப் என்பது பரவலாக பிரபலமாகாத காலத்திலேயே 1998 ல் இது துவங்கப்பட்டது. "கோவையில் அமையும் ஹெட்ஸ்டார்ட் கிளை இங்குள்ள ஸ்டார்ட் அப் சூழலுக்கும், தேசிய ஸ்டார்ட் அப் சூழலுக்கும் இடையே பாலமாக விளங்கும்" என பிஎஸ்ஜி ஸ்டெப் தலைவர் சுரேஷ் குமார் உற்சாகமாகக் கூறுகிறார்.

கோவை ஹெட்ஸ்டார்ட் கிளையை அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் எபின் எப்ரம் இளவந்திங்கள் வழி நடத்த உள்ளனர். துவக்க விழாவின் ஒரு பகுதியாக 'ஸ்டார்ட் அப் சாட்டர்டே' நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் உள்ள 13 நகரங்களில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கோவை கிளை துவக்கத்தின் முன்னோட்டமாக 'ஸ்டார்ட் அப் பயணம்' எனும் புதுமையான நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் போது 40 பங்கேற்பாளர்கள் நகரில் உள்ள 7 ஸ்டார்ட் அப் மற்றும் தொழில்முனைவோரை சந்திக்க பஸ்சில் அழைத்துச் செல்லப்பட்டனர். இதன் அடுத்த கட்டமாக நகரில் உள்ள தொழில்முனைவு ஆர்வலர்களை இந்தியா முழுவதும் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அழைத்துச்செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள தொழில்முனைவோர் மற்றும் ஆர்வலர்கள் ஹெட்ஸ்டார்ட் கிளை துவக்கத்தால் உற்சாகம் அடைந்துள்ளனர். கோவன் லாப்ஸ் (Kovan Labs) நிறுவனர் கோகுல் ராஜ் தாமோதரன், இது போன்ற நிகழ்ச்சிகள் ஸ்டார்ட் அப் துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்களை மேலும் ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ஹெட்ஸ்டார்ட் கோவை கிளை துவக்க விழாவின் ஒரு அங்கமாக பிஎஸ்ஜி ஸ்டெப்சில் ஸ்டார்ட் அப் சாட்டர்டே நிகழ்ச்சி நாளை (ஏபரல் 5 ம் தேதி ) மாலை 3.00 மணி முதல் 5.30 வரை நடைபெறுகிறது.

'இந்தியாபிளாசா' மற்றும் 'பேப்மார்ட்' நிறுவனரும், இந்தியாவில் இ-காமர்ஸ் முன்னோடியுமான வைத்தீஸ்வரன் கோதண்டராமன் சிறப்புறை ஆற்றுகிறார். இதனைத்தொடர்ந்து 'ஐகிளினிக்' (icliniq) நிறுவனர் துருவ் மற்றும் வைத்தீஸ்வரன் இடையிலான கலந்துறையாடல் நடைபெறுகிறது. பின்னர் கோவையில் ஸ்டார்ட் அப் துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் எனும் தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. துருவ் மற்றும் கோய்டர் (Coitor) இணை நிறுவனர் மஹேந்திரா மற்றும் ஹெல்பர்.இன் (Helpr.in) விக்னேஷ் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சி தொடர்பான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள: Arvind.S@headstart.in ebin.s@headstart.in

இணையதள முகவரி: Headstart

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

'ஸ்டார்ட்-அப் கான்கிளேவ்' கோவையின் ஸ்டார்ட்-அப் திருவிழா!