சிந்தனையால் ஒன்றுபட்டு இந்தியா பாகிஸ்தான் தொழில்முனைவர்கள் கூட்டாக உருவாக்கிய மஸ்காரா.காம்

0

பல்லாண்டு காலமாக வேரூன்றியிருக்கும் இன, மொழி வேறுபாடுகளை களைய, ஸ்டார்ட் அப் உலகம் வழி வகுத்துள்ளது என்றால் அது மிகையல்ல. இரு நாடுகளுக்கிடையே உள்ள மோதல் மற்றும் வெறுப்பு போக்கு, இந்தியாவின் பிரசன்ஜீத் தேப் குப்தா ராய் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த முஹம்மத் அலி அக்மல் ஆகிய இருவரையும் கூட்டாக தொழில் தொடங்க முட்டுகட்டையாக அமையவில்லை. மார்ச் 2015 ஆம் ஆண்டில் துபாயில் "மஸ்காரா.காம்" (Maskara.com) என்ற நிறுவனத்தை இருவரும் சேர்ந்து நிறுவியுள்ளனர்.

நமது பட்ஜெட்க்கு ஏற்றோர் போல் அருகாமையிலுள்ள அழகு நிலையங்கள், அவர்கள் வழங்கும் சலுகைகள் மற்றும் ஆன்லைனில் தேவையான சேவை மற்றும் நேரத்தை பதிவு செய்யும் வசதி ஆகியவற்றை மஸ்காரா வழங்குகிறது. மேலும் ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தக் கூடிய வசதியையும் இது ஏற்படுத்திக் கொடுக்கிறது.

துபாயில் உணவகங்கள் நடத்திக் கொண்டிருந்த இருவருக்குமே அறிந்த ஒரு நண்பர் மூலமாக தான் இவர்கள் அறிமுகமானார்கள். இவரின் உணவகத்திற்கு ஆன்லைனில் புக் செய்யக் கூடிய வசதியை அலி ஏற்படுத்திக் கொடுத்தார் , பிரசன்ஜீத் மேலும் துரிதமாக சில செயல்பாடுகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.

பிரச்ன்ஜீத் தேப் குப்தா ராய், இணை நிறுவனர், மஸ்காரா.காம்
பிரச்ன்ஜீத் தேப் குப்தா ராய், இணை நிறுவனர், மஸ்காரா.காம்

"அலியின் திறமை என்னை வியக்க வைத்தது, தனி ஒருவராக சிக்கலான தயாரிப்பை இலகுவாக அவர் கையாண்ட விதம் என்னை கவர்ந்தது. இதன் பிறகு நாங்கள் இருவருமே இணைப்பில் இருந்தோம். மஸ்காரா தோற்றுவிக்கும் எண்ணம் வந்த பொழுது, அதை முதலில் அலியிடம் தான் பகிர்ந்து கொண்டேன்," என்கிறார் பிரசன்ஜீத்.

தொழில் முனை ஆர்வம்

புனேவில் உள்ள சிம்பயாசிஸ் பல்கலைகழகத்தில் பயின்ற பிரசன்ஜீதிற்க்கு தொழில் முனை ஆர்வம் என்றுமே இருந்தது. தன்னுடைய இரண்டாம் ஆண்டிலேயே சென்சாடேக் என்ற நிறுவனத்தை தோற்றுவித்தார். சிறு முதலீட்டில் நடக்கும் உணவகங்கள் மற்றும் மளிகை கடைகளுக்கு விற்பனை சார்ந்த பயன்பாட்டு தொழில்நுட்பத்தை தேவைகேற்றார் போல் வடிவமைத்து கொடுத்தது.

கிராமப்புற பயணங்களை மேற்கொள்ளும் ஆர்வம் அவரின் அடுத்த தொழில் முயற்சிக்கு வித்திட்டது. இந்தியன் கூட்டுக் குடும்பம் (Indian Joint Family) என்ற நிறுவனத்தின் மூலமாக மேற்கு வங்காளத்தில் உள்ள கிராமப்புற கைவினை குழுக்களுடன் பணியாற்ற ஆரம்பித்தார். NIFT மதுரம் NID டிசைன் நிபுணர்கள் மற்றும் உள்ளூர் கைவினை தயாரிப்பாளர்களையும் ஒருங்கிணைத்து அவருடைய சொந்த உற்பத்தி சாலையில் தோலிலாலான பேஷன் பாகங்களை உருவாக்கினார். இது டெல்லி, மும்பை , புனே ஆகிய நகரங்களில் உள்ள உயர் ரக கடைகளில் விற்பனை செய்யப்பட்டன.

வெற்றிகரமான தொழில் முனைவுக்கு பின், பல தொழில் முனை நிறுவனங்களிலும் பிரசன்ஜீத் பணி புரிந்துள்ளார். வணிக வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். சொமடோ நிறுவனத்தின் சர்வதேச அணியில் முக்கிய அங்கம் வகுத்தவர். அந்நிறுவனத்தை ஐக்கிய அரபு சந்தையில் 2012 ஆம் ஆண்டு தொடங்கினார், பழைய துபாய் மற்றும் வடக்கு எமிரடேச்சில் வர்த்தக மேலாளர் பொறுப்பை வகித்தார்.

அந்நிறுவனத்தில் பணி புரிந்த பொழுது தான் மஸ்காரா தோற்றுவிக்க எண்ணம் எழுந்தது. வெளியில் சாப்பிடும் முயற்சியை இலகுவாக ஆக்க முடியுமெனின் சிறந்த அழகு நிலையங்கள் பற்றி அறிந்து கொள்ளவும் வழி வகுக்க முடியும் என்று எண்ணினார். அழகு மற்றும் ஆரோக்கிய வர்த்தகத்தை பொறுத்த வரை எது சிறந்தது, எங்கே சலுகைகள் மற்றும் சிறப்பு வல்லுனர்கள் உள்ளனர் என்று ஆதார பூர்வ தகவலை அறிந்து கொள்வது சிரமம் தான்.

மேலும் ஐக்கிய அரபு நாடுகளில் எண்பத்தியெட்டு சதவிகிதம் அளவுக்கும் அதிகமானவர்கள் இணைய சேவையை பயன்படுத்தி வந்தாலும், அழகு மற்றும் ஆரோக்ய வர்த்தகங்கள் பெரும்பாலும் ஆன்லைன் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொண்டார். தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமான அழகு நிலைய வாடிக்கையாளர்கள் மற்றவர்களின் வழிகாட்டுதல் பேரிலேயே அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பா ஆகியவற்றை தேர்ந்தெடுக்கின்றனர்.

லாஹோரை சேர்ந்த அலி கடந்த இருபத்தியைந்து வருடங்களாக துபாயில் வாழ்கிறார். தன்னுடைய மஸ்காரா தோற்றுவிக்கும் எண்ணத்தை அலியுடன் பகிர்ந்து கொள்கிறார். ஸ்டாப்போர்ட்ஷயர் (Staffordshire) பல்கலைகழகத்தில் கணினி பாடத்தில் இளநிலை (Hons) பெற்ற அலி, ஒரு தலை சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்.

முஹம்மத் அலி அக்மல், இணை நிறுவனர், மஸ்காரா.காம்
முஹம்மத் அலி அக்மல், இணை நிறுவனர், மஸ்காரா.காம்

சில மாதங்களில் செயல் வடிவம் கொடுத்து இந்த முயற்சியை பற்றி துபாயில் உள்ள அழகு நிலைய உரிமையாளர்களிடம் பகிர்ந்த பொழுது, அதற்கு வரவேற்பு இருப்பதை உணர்ந்தனர்.

தொடக்கம்

மே மாதம் முதல் நாள் மஸ்காரா இணைய செயல்பாட்டை நிறுவினர். ஆதார பூர்வ தரவு சேகரிப்பு மஸ்காரா தளத்தை குறுகிய காலத்தில், இந்த வர்த்தகத்திற்கான முன்னோடி தளமாக மாற்றியது. ஐம்பதாயிரதிர்க்கும் அதிகமான வாடிக்கையாளர்களும், ஒரு நாளில் ஐநூறுக்கும் மேற்பட்ட நேர விண்ணப்பங்களையும் இந்த தளம் பெற்றுள்ளது என்கிறார் பிரசன்ஜீத்.

சலுகைகள் மிக முக்கிய அங்கம் வகிக்கும் வர்த்தகம் என்பதால், அதற்கென பிரத்யேகமாக ஒரு பகுதியை அவர்களின் தளத்தில் உருவாக்கியுள்ளார்கள். நிலையங்கள் அவர்களின் சலுகை விவரத்தை எந்த கட்டணமுமின்றி இங்கே அறிவித்து கொள்ளலாம். "இதன் மூலமாக அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பா வர்த்தகத்தின் மிக பெரிய சலுகைகள் ஒன்றினைப்பாளர்களாக மஸ்காரா உருபெறும்" என்கிறார் பிரசன்ஜீத்.

நிதி திரட்டல்

தங்களின் முதல் கட்ட தயாரிப்பை கொண்டு துபாயை சேர்ந்த ஏஞ்சல் முதலீட்டாளர்கலிடமிருந்து ஐந்து லட்சம் டாலர்கள் நிதி திரட்டியுள்ளனர். இந்த நிதி தொழில்நுட்ப வல்லுநர்களை சேர்க்கவும், இந்தியா மற்றும் பிற ஐக்கிய அரபு பகுதிகளில் தொழிலை விஸ்தரிக்கவும் பயன்படுத்தப்படும்.

தற்பொழுது சந்தாதாரர்களாக அவர்களின் தொழிலை தளத்தில் பட்டியலிட்டுக் கொள்ளமுடியும். சமீபத்தில் தான் துபாயில் தங்களுடைய வணிகத்தை மேற்கொண்டனர், அங்கு தற்பொழுது மஸ்காரா நிறுவனத்திற்கு முப்பதிற்கும் மேற்பட்ட நிலையங்கள் வாடிக்கையாளர்கள் ஆகியுள்ளனர். மேலும் வளர்ச்சியை நோக்கி செல்லும் விதமாக பல திட்டங்களையும் அறிமுகப்படுத்த உள்ளனர்.

தற்பொழுது புனேவிலும் கால் பதித்துள்ள மஸ்காரா, துபாய் மற்றும் புனே அலுவலங்கள் சேர்த்து இருபத்தியைந்து நபர்கள் கொண்ட குழுவாக செயல்படுகிறது. ஐக்கிய அரபு நாட்டில் துபாய், அபு தாபி மற்றும் ஷார்ஜா; இந்தியாவில் புனே, மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் கொல்கத்தா என 2015 மற்றும் 2016 ஆண்டிற்கான விரிவாக்க திட்டம் அமைத்துள்ளனர்.

சந்தித்த சவால்கள்

தோற்றுவித்த புதிதில், நிறுவனத்தில் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களை சேர்த்துக் கொள்வதில் சிரமம் இருந்தது. பிறகு சொமடோவில் பிரசன்ஜீதுடன் பணிபுரிந்த அபூர்வ் சோப்ரா இவர்களுடன் இணைந்து, மஸ்காராவின் வளர்ச்சிக்கு பொறுப்பேற்றார்.

தங்களின் சேவையை புனேவில் தொடங்குவது அடுத்த சவாலாக அமைந்தது என்கின்றனர். அழகு நிலையங்கள் தங்களின் சேவையை மஸ்காரா தளத்தில் பட்டியலிட விருப்பம் காட்டவில்லை.

"ஆன்லைன் நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்ற மிகுந்த தயக்கம் காட்டினர், அவர்களை சம்மதிக்க வைத்து எங்கள் தளத்தில் அவர்களின் சேவையை பட்டியிலிட பெரும்பாடு பட்டோம்" என்கிறார் பிரசன்ஜீத்.

இந்தியாவில் கால் பதித்தது பற்றி

உலகிலேயே இந்தியா மிகப் பெரிய நுகர்வோர் சந்தை. 4.8 பில்லியன் டாலர் மேல் சந்தை மதிப்புடைய அழகு மற்றும் ஆரோக்ய வர்த்தகம், ஒரு நாளில் மட்டும் 2.5 மில்லியன் நுகர்வோர் கொண்டது. உயரும் வருமானமும், தங்கள் தோற்றத்தின் மேல் அக்கறை கொள்ளும் போக்கும், இதற்கான சந்தை வாய்ப்பை மேலும் அதிகரிப்பதாகவே அமையும்.

வாய்ப்புகள் இருந்தாலும், இந்தியாவில் வருமானம் ஈட்டுவதற்கு அதிக காலம் ஆகலாம். மூன்று மாதத்தில் துபாயில் சாதிக்க முடிந்ததை, இந்தியாவில் சாதிக்க ஆறு மாத காலம் கூட ஆகலாம், ஏனெனில் இங்குள்ள போட்டியும் அதே சமயம் உரிமையாளர்களின் போக்கும் அத்தகையது.

"இந்தியாவில் பெரும்பாலும் சிறு மற்றும் பெரு அழகு நிறுவனங்கள் ஆன்லைன் வசதியுடன் செயல்படுபவை, வீட்டிலேயே சேவையை மேற்கொள்ளும் வசதியையும் இவர்கள் அளிக்கின்றனர். எங்களின் நோக்கம் வாடிக்கையாளர்கள் அவர்கள் தேவைக்கேற்ப மற்றும் மற்றவர்களின் பரிந்துரையின் படி நிறுவனங்களை தேர்ந்தெடுக்க உதவுவதே. பட்ஜெட், வல்லுனர்கள், பிறரின் பரிந்துரை என ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் வாடிக்கையாளர்களின் முடிவை தீர்மானிக்கின்றன" என்கிறார் பிரசன்ஜீத்.

வளர்ச்சிப் பாதை

அண்ட்ராய்டு மற்றும் iOS கான செயலியை விரைவில் வெளியிட உள்ளது. GPS மூலமாக அருகாமையிலுள்ள ஸ்பா மற்றும் அழகு நிலையங்களை அறிந்து கொள்ளலாம். வர்த்தக நிலையங்களும் தங்களின் வாடிக்கையாளர்களை பற்றியும், அவர்களின் பட்டியலை முறை படுத்திக் கொள்ளவும் உதவும் வகையில் மேம்பாட்டு தளத்தை வெளியுட்டுள்ளனர்.

வாடிக்கையாளர்களை மேலும் சிறப்பாக சென்றடைய க்லௌட் பயன்பாடு செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் நிறுவனகள் தங்களின் சலுகைகள், ஆன்லைனில் விண்ணப்பங்கள் மற்றும் ஆன்லைனில் கட்டணத்தையும் நிர்வகிக்க முடியும்.

அடுத்த ஒன்றரை மாதத்திற்குள் தனது அண்ட்ராய்டு செயலி மூலமாக ஐம்பது சதவிகிதம் செயல்பாடு உயர்வு இருக்கும் என்கின்றனர். தற்பொழுது நாற்பது சதவிகிதம் வாடிக்கையாளர்கள் இவர்களின் சேவையை மீண்டும் மீண்டும் உபயோகிப்பவர்களாகவும், மாதா மாதம் பதினைந்து விழுக்காடு வளர்ச்சி காண்பதாகவும் கூறுகின்றனர்.

"தொடங்கி மூன்று மாதங்களே ஆவதால், நாங்கள் ஆரம்ப வருவாய் நிலையில் தான் உள்ளோம். சமீபத்தில் தான் பத்தாயிரம் டாலர் வருவாய் ஈட்டினோம், இதை மாதா மதம் 30 விழுக்காடு உயர்த்தும் இலக்கை நோக்கி செல்கிறோம். எல்லாம் நல்லபடியாக அமைந்தால், டிசம்பர் 2016 உள்ளாக ஒரு லட்ச டாலர் மாதந்திர வருமானத்தை ஈட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்கிறார் பிரசன்ஜீத்.