கடினமான காலகட்டத்தில் பெண்கள் அணுகவேண்டிய 8 அமைப்புகள்!

0

ஒரு மணி நேரமோ, ஒரு நாளோ அல்லது ஒரு ஆண்டோ இந்தக் காலகட்டத்துக்குள் பாலியல் ரீதியாக அல்லது வன்முறையாலோ பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளிவிவரங்கள் பயமுறுத்துவதாகவே உள்ளன. கீழ்வரும் அமைப்புகள் ஆபத்துகள் நிறைந்த இந்தச் சமூகச்சூழலை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன. பெண்களின் பாதுகாப்புக்காக பொது இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுவதுடன் நிற்காமல் சட்ட கொள்கைகளிலும் மாற்றத்தைக்கொண்டுவர முயல்கின்றன. இவற்றின் குறிக்கோள்கள் பெரும்பாலும் கீழ்வருவனவாக இருக்கும்.

1. பாதுகாப்பற்ற அல்லது வன்முறை நிறைந்த சூழலிலிருந்து பெண்களையோ அல்லது குழந்தைகளையோ காப்பாற்றி, தற்காலிகமான அல்லது நிரந்தரமான இடத்தில் தங்க வசதி செய்வது.

2. கடினமான சூழலை அனுபவிக்கும் பெண்களுக்கு பண உதவியோ அல்லது புதிய தொழில்கல்வியைக் கற்பித்து அதன் மூலம் வருமானம் பெற்று தன்னிச்சையாகச் செயல்பட உதவுவது.

3. பாலியல் ரீதியான அல்லது வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனது உரிமைகளை எடுத்துக்கூறி தனக்கு தீங்கிழைத்தவர்களை எதிர்த்து போராட சட்ட ஆலோசனை வழங்கி நீதியை நிலை நிறுத்தச் செய்வது.

4. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு உள்ளானவர்களின் உளவியல் ரீதியான சிக்கல்களைப் போக்க தக்க மருத்துவரிடம் ஆலோசனை பெறச் செய்வது.

5. மோசமான சூழலில் சிக்கித்தவிக்கும் பெண் இதுபோன்ற பல நூறு அமைப்புகளில் சரியான ஒன்றை தேர்ந்தெடுப்பது கடினம். ஆகவே, அவர்களுக்கு உதவும் விதமாக சிறப்பாகச் செயல்படும் சில அமைப்புகளை இங்கே வரிசைபடுத்தியுள்ளோம்.

ஆஸாத் அறக்கட்டளை

ஆஸாத் அறக்கட்டளையின் முக்கியக் குறிக்கோள் நிதித் தேவைகளுக்காக துன்புறுத்தும் கணவனை அண்டி வாழும் பெண்களைக் காப்பது. புது டெல்லியைச் சேர்ந்த இந்த அறக்கட்டளை பெண்களுக்கு தொழில்கல்வி பயிற்சிகள் அளித்து, நிதியியல் ரீதியாக சுதந்திரமாக செயல்பட உதவுகின்றது.

ஆறு மாதங்கள் வரை நீடிக்கும் இந்த பயிற்சியில் தற்காப்பு, பெண்களின் உரிமைகள், பாலியல் மற்றும் இனப்பெருக்க உரிமைகள், திறன்மிக்க தகவல்தொடர்பு, ஆயத்தப்படுத்துதல் மற்றும் வேலைவாய்புக்காக வாகனம் ஓட்டும் பயிற்சி போன்றவை அளிக்கப்படுகின்றது. இந்த அமைப்பின் சகோதர நிறுவனமான சகா கன்ஸல்டிங் விங்ஸ் பெண் வாகன ஓட்டிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்றது. இதன்மூலம் பெண் பயணிகள் பத்திரமாகச் செல்ல உதவுகின்றது. கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை தற்போது ஜெய்பூர், இந்தோர் மற்றும் கொல்கத்தா போன்ற இடங்களில் செயல்படுகின்றது.

தொடர்புக்கு

தொலைபேசி: +91 11 4060 1878 இமெயில்: azadfoundation@gmail.com

இணையதளம்ஃபேஸ்புக்

பாரதிய க்ரமீன் மஹிலா சங்கம்

பி.ஜி.எம்.எஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய அளவிலான கிராமப்புற இந்தியப் பெண்களுக்கான அமைப்பு, 1955-ம் ஆண்டு அரசியல் மற்றும் குறிப்பிட்ட பற்று சாராத அமைப்பாக பதினான்கு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் தொடங்கப்பட்டது. யுனெஸ்கோ, டபிள்யூ.எச்.ஓ., மற்றும் ஐ.எல்.ஓ. போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்கும் ‘அசோசியேட்டட் கண்ட்ரி வுமன் ஆஃப் த வேர்ல்ட்’ (ஏ.சி.டபிள்யூ.டபிள்யூ) இணைந்து பணியாற்றத் தொடங்கியது.

பி.ஜி.எம்.எஸ் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் மற்றும் மேம்பாட்டுக்காக பாடுபடுகின்றது. இந்த அமைப்பு மஹிலா மண்டல்களை அமைத்து பெண்களின் மேம்பாடு மற்றும் கல்விக்கு உதவ சுய உதவிக் குழுக்களை நிறுவுகின்றது.

கணவர்களாலும், அவரது குடும்பத்தினராலும் மோசமாக நடத்தப்படும், பெற்றோர் அல்லது உறவினர் இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு தற்காலிக தங்குமிடங்களைத் தருகின்றது. அவர்களுக்கு தொழில்கல்வியுடன், வேலைவாய்ப்பையும் வழங்கி தன்னிச்சையாக இயங்க உதவுகின்றது. ஆதறவற்ற முதுமையடைந்த பெண்களும் தங்கும் வசதிக்காக பி.ஜி.எம்.எஸ்-ஐ அணுகலாம். உணவு, மருத்துவ வசதி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் வழங்கப்படுகின்றது.

ஐ.சி.ஆர்.டபிள்யூ.

வாஷிங்டன் டி.சி.-ஐ தலைமையாகக் கொண்டு செயல்படும் பெண்களுக்கான சர்வதேச ஆய்வு மையத்தின் கிளைகள் புதுடெல்லி மற்றும் மும்பையில் செயல்படுகின்றன. பெண்களுக்கு தமது வாழ்வை முன்னேற்ற வாய்ப்பளிக்கப்பட்டால், முழு சமூகமுமே முன்னேறலாம் என இந்த அமைப்பு நம்புகின்றது. பணியாற்றும் பெண் வீட்டிலிருந்தால், வருமானத்தின் மீதும் மற்றும் அது செலவிடப்படும் விதம் குறித்தும் அவளால் முடிவெடுக்க முடியும். இதனால் பிள்ளைகள் முழுமையாக கல்வி பயிலவும், வேளை தவறாமல் உணவு அருந்தவும், ஆரோக்யமாக இருக்க முடியும்.

ஆனால், நிதர்சனம் என்னவென்றால் பெண்கள் வன்முறைக்கு உள்ளாவதும், குழந்தைப்பருவத்திலேயே திருமணம் செய்துவைக்கப்படுவதும், முறையாக கல்வி பயில வாய்ப்புகள் இன்றியும் தவிக்கின்றனர். இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி, நிதியியல் வாயிலாகவும், சமூகத்திலும் திறம்பட செயல்பட முடியாமல் தடுக்கும், காரணிகளை அறிந்து அதற்கேற்ப சட்ட கொள்கைகளை பெண்களின் மேம்பாட்டுக்காக மாற்ற முயல்கின்றது. அதற்காக, இந்த அமைப்பு பெண்களிடம் நேரசித் தொடர்பில் உள்ளது.

தொடர்புக்கு: புதுடெல்லி அலுவலகம்: 011 4664 3333

இமெயில்: info.india@icrw.org. ஹெல்ப்லைன்லா.காம் (Helplinelaw.com)

கடந்த 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இணையதளம் மூலம் சட்ட ஆலோசனைகள் வழங்குகின்றது. இந்திய சந்தைக்காக தொடங்கிய இது 2004-ம் ஆண்டு சர்வதேச அளவிலும் செயலாற்றத் தொடங்கியது. தற்போது இருநூற்றுப் பதினேழு நாடுகளில் இயங்கிவரும் இது சிறப்பான சட்ட வல்லுனர்களைக்கொண்டு உலகின் எந்த மூலையில் வசிப்பவருக்கும் சரியான சட்ட ஆலோசனைகளை வழங்குகின்றது.

இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் எளிய மொழியில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதமாக கொடுக்கப்பட்டுள்ளது. வரதட்சணை கொடுமையாலோ அல்லது விவாகரத்து வேண்டியோ போன் அல்லது மெயில் மூலம் தொடர்புகொள்ளும் பெண்களுக்கு ஏற்புடைய தகவல்களை தாமதமின்றி தருகின்றது.

http://www.helplinelaw.com/family-law

http://www.helplinelaw.com/family-law/DVLI/domestic-violence-in-india.html

ஒன் ஸ்டாப் நெருக்கடி மையம் அல்லது நிர்பயா மையம்

இந்தியாவில் பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ உதவி பெறும் முன்னால் காவல் நிலையங்களுக்கும், நீதிமன்றத்துக்கும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அலைக்கழிக்கப்படுகின்றார்கள். கடந்த 2012-ம் ஆண்டு ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிர்பயா உயிரிழந்தபோது, ஜஸ்டிஸ் வெர்மா கமிட்டியால் இதுபோன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக மருத்துவம், சட்டம் மற்றும் உளவியல் ரீதியான தேவைகளை வழங்குவதற்காக இது அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் மகளிர் மற்றும் குழந்தை நல அமைச்சகம் 660 ஒன் ஸ்டாப் மையங்களை திறப்பதாகக் கூறியிருந்தது. ஆனால், பட்ஜெட் தட்டுப்பாட்டால் இந்த மையங்களின் எண்ணிக்கை முப்பத்து ஆறாக குறைந்துபோனது. சட்டிஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் நகரில் முதல் மையம் தொடங்கப்பட்டது. இந்த மையம் இருபத்து நான்கு மணிநேர அவசர தொடர்பு வசதியுடன் இயங்குகின்றது. இது ஏற்கனவே செயல்படும் 108 போன்ற ஆம்புலன்ஸ் அமைப்புடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுகின்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி உத்தராகாண்ட், மேகாலயா மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் இந்த மையங்கள் இவ்வாண்டு முதல் செயல்படத் தொடங்கும் எனவும் ஏற்கனவே நாகாலாந்து மற்றும் அசாம் பகுதிகளில் செயலாற்றத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

லாயர்ஸ் கலெக்டிவ்

மூத்த வழக்கறிஞர்களான ஆனந்த் க்ரோவர் மற்றும் இந்திரா ஜெய்சிங் ஆகியோர் இணைந்து கடந்த 1981-ம் ஆண்டு தொடங்கிய இந்த அரசு சாரா அமைப்பு, நாட்டின் சிறப்பான வழக்கறிஞர்கள், சட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வளர்கள் அடங்கியது. இது சமூகத்தின் பின் தங்கிய, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக, அமைப்பு சாரா பகுதி பணியாட்கள் மற்றும் பல ஒதுக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் தொடங்கப்பட்டது. இதில் உள்ள வழக்கறிஞர்கள் தொழில்முறையாக மட்டுமல்லாது மற்றும் பொது நலன் வழக்குகளிலும் பணியாற்றுவர். தொழில்முறையாக பணியாற்றுபவரும் இந்த அமைப்பின் நெறிமுறை தவறாது பொது நலனுக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றுவதில்லை. ஆகவே, பாலியல் பலாத்காரம் செய்தவருக்காகவோ, தொழிலாளிகளின் உரிமைச் சட்டத்தை மதிக்கத் தவறியவருக்காகவோ வழக்காடுவதில்லை. ஆனந்த் க்ரோவர் ஓரினச் சேர்க்கையை குற்றமாகக் கருதும் 377-வது பிரிவை நீக்குவதற்கு ஆதரவாக நாஸ் அமைப்புக்கு ஆதரவாக வழக்காடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லாயர்ஸ் கலெக்டிவின் பெண் உரிமைகள் பிரிவு

தொலைபேசி: 91-11-24374830 இமெயில்: wri.delhi@lawyerscollective.org

அங்கலா (முற்றம்)

பெங்களூரில் செயல்பட்டுவரும் விமோசனா அமைப்பின் பெண்களுக்கு அவசர உதவி வழங்கும் அமைப்பாக அங்கலா இயங்கி வருகின்றது. கடந்த 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இது திருமணம் மற்றும் வெளியில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகளுக்கு எதிராக போராட தார்மீக, சமூக மற்றும் சட்டத்தின் மூலம் ஆதரவளிக்கின்றது.

ஒவ்வொரு பிரச்சனைக்கும் நேரடியாக தலையிட்டு ஆலோசனைகளை வழங்கிவருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது, தாயார் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் நிலையில் இல்லையென்றால் ஆதறவற்றோர் இல்லத்தில் குழந்தைகளைச் சேர்ப்பது, கணவரால் தாக்கப்பட்ட பெண்கள் மீண்டும் கணவருடன் வாழ முயலும்போது பிரச்சனைகளைத் தவிர்க்க தொடர்ந்து அவர்களது வீட்டுக்குச் சென்று கவனிப்பது, மருத்துவ உதவிகள் வழங்குவது, தற்காலிகமாக தங்குவதற்கான இடம் தருவது போன்ற பணிகளை செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நானூறு பெண்களுக்கு இந்த அமைப்பு உதவியது.

அவசர உதவிக்கு தொலைபேசி: +91-80-25492781 / 25494266

இமெயில்: angala1@vsnl.net

அஸரா

தனிமையால் விரக்தியடைந்து தற்கொலைக்கு முயல்வோருக்கு ஆதரவு அளிக்கின்றது அஸரா. இதன் அவசர உதவி எண்ணில் பேசும் தன்னார்வளர்கள் தற்கொலை எண்ணத்தை மாற்றும் விதமாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இதனால், உங்களைப் பற்றி விமர்சனம் செய்வார்களோ என்கிற அச்சம் வேண்டாம்.

எங்களைத் தொடர்புகொள்ளும் விரக்தியுற்றவர்களுக்கு கனிவும், அன்பும் கூடிய அனுதாபமான நட்பை வழங்குவோம் என்கின்றனர்.

24 மணிநேர தொடர்புக்கு: 022-27546669 அலுவலகம் (10am to 7pm): 022-27546667

இமெயில்: aasrahelpline@yahoo.com

ஹேரிபாட்டர் படத்தில் டம்புல்டோர் கதாபாத்திரம் கூறுவதைப் போல, ‘உதவி என கேட்டால் அது நிச்சயம் கிடைக்கும்’. மலைபோலத் தோன்றும் பிரச்சனையும் சரியான ஆலோசனையும், உதவியும் கிடைக்கப்பெற்றால் துளியாய் சிதறிப்போகும். ஒரேயொரு தொலைபேசி அழைப்பு அல்லது இமெயில் அனைத்து துன்பத்தையும் மாற்றும் வல்லமைகொண்டது.

(உங்களுக்கு தெரிந்த, இதுபோன்ற உதவிகள் அளிக்கும் அமைப்புகளைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கலாம்.)

ஆக்கம்: ஷரிக்கா நாயர் | தமிழில்: மூகாம்பிகை தேவி