உயிரை விட்டும் இரண்டு உயிர்களை காத்த 14 மாதக் குழந்தை!

0

14 மாதக் குழந்தை சோம்னாத் ஷா, இரண்டு உயிர்களைக் காப்பாற்றி நாட்டின் இளம் உறுப்பு கொடையாளர் என்ற பெயரை வாங்கியுள்ளது. மூளைச்சாவு ஏற்பட்ட அக்குழந்தையின் சிறுநீரகம் மற்றும் இதயம் தேவைப்பட்ட இரண்டு நோயாளிகளுக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளது. 

பிஹார் சிஸ்வான் மாவட்டத்தைச் சேர்ந்த சோம்னாதின் குடும்பத்தினர் அண்மையில் சூரத்திற்கு குடியேறினர். செப்டம்பர் 2-ம் தேதி தன் அக்கா குசுமுடன் விளையாடிக் கொண்டிருந்தான் சோம்னாத். அப்போது தவறி மாடிப்படியில் இருந்து கீழே விழுந்து மயக்கமானான்.

சோம்னாத் (வலது), ஆராத்யா (இடது)
சோம்னாத் (வலது), ஆராத்யா (இடது)

அருகாமை மருத்துவரிடம் காட்டிவிட்டு, நியூ சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்போது சூரத்தை சேர்ந்த ‘டொனோட் லைப்’ என்ற அமைப்பு, சோம்னாத்தின் பெற்றோர்களை சமாதானப்படுத்தி அவனது உறுப்புகளை தானம் செய்ய கேட்டுக் கொண்டனர். இது பற்றி டொனோட் லைப் தலைவர் நிலேஷ் மண்டெல்வாலா பேசுகையில்,

”டாக்டர்கள் குழந்தைக்கு மண்டையில் பல இடங்களில் முறிவு ஏற்பட்டு, மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக கூறினார்கள். சோம்னாத்தின் குடும்பத்துடன் பேச அனுமதி கேட்டோம். உறுப்பு தானம் பற்றி அவர்களிடம் பேசினாலும் எங்கள் உறுப்பினர்கள் அவர்கள் இழப்பிற்கு ஆறுதல் கவுன்சிலிங்கும் செய்தனர். ஞாயிறு இரவு சோம்னாத் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 4-ம் தேதி அவர்கள் உறுப்பு தானத்துக்கு ஒப்புக்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை செய்தோம்,” என்றார். 

உறுப்பு தேவைப்படுவோர் பட்டியலை பார்த்தபின், 15 வயது சிறுவனுக்கு, சோம்னாத்தின் சிறுநீரகம் பொறுத்தப்பட்டது. அச்சிறுவன் 10 வருடங்களாக டயாலிசிஸ் செய்து வருகின்றான். அதே போல் சோம்னாத்தின் இருதயம், மும்பையைச் சேர்ந்த ஆராத்யா முலே என்பருக்கு அளிக்கப்பட்டது. இவர் இதயத்துக்காக காத்திருப்புப் பட்டியலில் 2016-ம் ஆண்டு முதல் இருக்கிறார். 

அதே தினம், 45 வயது பெண்மணி கர்ஜத், கீழே மயங்கி விழுந்து மூளைச்சாவு ஏற்பட்டதை அடுத்து அவரது இதயம், கிட்னி மற்றும் லிவர் நான்கு வெவ்வேறு நோயாளிகளுக்கு பொறுப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இரண்டு இதய மாற்று அறுவைச்சிகிச்சையும் 90 நிமிடங்கள் நடைப்பெற்றது. Dr.அன்வே மூலே, ஃபோர்டிஸ் மருத்துவமனையின் தலைமை இதய நிபுணர் இது பற்றி கூறுகையில்,

“கொடையாளியின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்தனை தூரம் இந்த இதயத்தை கொண்டு வந்திருக்கமுடியாது. அவர்கள் செய்த இந்த உதவி மற்றொருவரின் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி காப்பாற்றியுள்ளது. தற்போது அவர் திடமாக உள்ளார்,” என்றார். 

கட்டுரை: Think Change India