பெரிய சாதனங்களுக்கான ப்ரைவேட் லேபிளை அறிமுகப்படுத்துகிறது  ஃப்ளிப்கார்ட் 

0

இ-காமர்ஸ் சந்தையில் முன்னணியில் இருக்கும் ஃப்ளிப்கார்ட் கடந்த மாத பண்டிகைக்கால சிறப்பு விற்பனைக்குப் பிறகு MarQ என்கிற பெரிய சாதனங்களுக்கான தனது ப்ராண்டை அறிமுகப்படுத்தியது. இந்தப் பிரிவில் அறிமுகப்படுத்த இருக்கும் முதல் தயாரிப்பு மைக்ரோவேவ் ஓவன். இவர்களது தயாரிப்பின் குறிப்புகளுடன் ஒத்திருக்கும் மற்ற ப்ராண்டுகளின் விலையைக் காட்டிலும் 10-20 சதவீதம் குறைவானதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறது ஃப்ளிப்கார்ட்.

ஃப்ளிப்கார்டின் அடுத்த தயாரிப்பாக டிவியை அறிமுகப்படுத்த உள்ளதாக ஃப்ளிப்கார்டின் துணைத்தலைவர் மற்றும் ப்ரைவேட் லேபிள்ஸ் தலைவர் ஆதர்ஷ் மேனன் யுவர் ஸ்டோரியிடம் பகிர்ந்துகொண்டார். அதன் பிறகு வாஷிங் மெஷின், ஏர் கண்டிஷனர், ஸ்பீக்கர்கள் போன்ற பொருட்கள் அறிமுகமாகும் என்றார். ஃப்ளிப்கார்டில் பெரிய சாதனங்களை வாங்குவோரில் 70 சதவீத மதிப்புமிக்க வாடிக்கையாளர் பிரிவை இலக்காகக்கொண்டுள்ளது MarQ. ரீடெயிலில் GMV-ல் அதிகம் பங்களிப்பது பெரிய சாதனங்களே ஆகும்.

இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டது

இந்த ப்ராண்ட் கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு மலிவான விலையில் வழங்கப்படும் என்று தெரிவித்த ஃப்ளிப்கார்ட் இதை ‘Better Possible Today.’ என்று டேக் செய்கிறது.

MarQ-ன் தயாரிப்புகள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டாலும் இந்திய வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகள் கருத்தில் கொள்ளப்படுவதாக உறுதியளித்தார் ஆதர்ஷ். உதாரணத்திற்கு இந்தியாவிற்கு pre-cook menus-உடன் 25 லிட்டர் மாடல் மற்றும் 30 லிட்டர் மாடல்களின் தேவை உள்ளது என்றார்.

”இந்தத் தேவைகளை தயாரிப்பின் வடிவமைப்பு பூர்த்திசெய்யும். ஏனெனில் சீனாவிலுள்ள உற்பத்தி தொழிற்சாலையில் இந்திய உணவில் கவனம் செலுத்தும் டயட்டீஷியன் மற்றும் ஊட்டச்சத்து பொறியாளர்கள் உள்ளனர். அடிப்படை வடிவமைப்பிலேயே இதை புகுத்திவிடுவதால் இறுதி தயாரிப்பு சந்தையின் தேவைக்கு ஏற்றவாறு உள்ளது.”

மேலும் ஆன்லைன் தளமாக இருப்பதால் வாடிக்கையாளர் விருப்பம் குறித்த தரவுகளைக் கொண்டு MarQ சிறப்பான விலையில் பொருட்களை வழங்குகிறது.

ஆதர்ஷ் விவரிக்கையில், “துறையில் மிகச்சிறந்த தொழிற்சாலைகளுடன் பணிபுரிகிறோம். Midea உலகத்தின் மிகப்பெரிய மைக்ரோவேவ் ஓவன் உற்பத்தியாளர்கள். அவர்களிடம் வாடிக்கையாளர்கள் குறித்த ஆழமான நுண்ணறிவு மற்றும் குறிப்பிட்ட பொருள் சாரந்த தகவல்கள், உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம், அதிகளவிலான பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் ஆகியவை உள்ளது. எனவே இறுதி தயாரிப்பு வாடிக்கையாளர்கள் மதிக்கத்தக்க அம்சங்களைக் கொண்டிருக்கும். அதிகளவில் உற்பத்தி செய்வதால் விலை குறைக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தப் பொருட்களை குறைந்த விலையில் எங்களால் வழங்கமுடிகிறது.”

நுணுக்கமான விஷயங்களிலும் கவனம் செலுத்தப்படுகிறது

MarQ தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் அனைத்து தொழிற்சாலைகளும் செயல்முறை தணிக்கை மற்றும் தயாரிப்பின் செயல்பாடு சார்ந்த ஆய்விற்கு உட்படுத்தப்படுகிறது. இந்த ஆய்வுகள் தொழிற்சாலைகளிலும் தனிப்பட்ட மற்றும் உலகத்தரம் வாய்ந்த ஆய்வு ஏஜென்சிக்களிலும் நடத்தப்படுகிறது. உற்பத்தியினூடே தணிக்கைகள் நடத்துதல் போன்ற நடவடிக்கைகளும் தரத்தை உறுதி செய்ய மேற்கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு தயாரிப்பும் நூற்றுக்கும் மேற்பட்ட சோதனைகளுக்குப் பிறகே விற்பனைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மைக்ரோவேவ் உற்பத்தி ஆலை ISO 9001:2008 சான்றிதழ் பெற்றது. அனைத்து தயாரிப்புகளுக்கும் மின் அழுத்தத்தின் ஏற்ற இறக்கங்கள், துரு எதிர்ப்புத் தன்மை, நிலைத்தன்மை போன்றவவை பரிசோதிக்கப்படுகிறது.

நடுநிலையான தளம்

மற்ற ப்ராண்டுகளைப் போன்றே MarQ-க்கும் கட்டணமில்லா மாதத்தவணை வசதியும் பொருட்களை மாற்றிக்கொள்வதற்கான சலுகைகளும் உள்ளது. அதேபோல் விற்பனைக்குப் பிறகான வாடிக்கையாளர் அனுபவத்திற்காக ஃப்ளிப்கார்ட் இலவசமாக சாதனங்களை பொருத்துதல் மற்றும் உத்தரவாதம் வழங்குவதுடன் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 300 நகரங்களில் சேவை மையங்கள் அமைக்கிறது. இதற்காக ஃப்ளிப்கார்ட்டின் சேவை பார்ட்னரான Jeevees மூலமாக 1,000 புதிய ஊழியர்கள் இணைந்துள்ளதாக குறிப்பிட்டார் ஆதர்ஷ்.

”பெரிய சாதனங்களுக்கு விற்பனைக்கு முன்பு இருப்பது போலவே விற்பனைக்குப் பிறகான சேவையும் முக்கியமாகும். Jeeves வாயிலாக பொருளின் அம்சங்களை விவரித்து அதன் பிறகே உங்களுக்கு இன்ஸ்டால் செய்கிறோம்,” என்றார். 

பெரிய சாதனங்கள் விற்பனையில் ஃப்ளிப்கார்ட் மிகப்பெரிய ரீடெய்லராக செயல்படுவதாக தெரிவிக்கிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் செயல்படும் தங்களது போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதாகவும் தெரிவிக்கிறது.

ப்ரைவேட் லேபிளுடன் விற்பனை செய்வதால் தளத்தில் உள்ள அதே வகையான தயாரிப்புகளை விற்பனை செய்யும் மற்ற ப்ராண்டுகளுடன் முரண்பாடுகள் தோன்றதா?

ஆதர்ஷ் அவ்வாறு நினைக்கவில்லை. 

”தரமான ப்ராண்டுகள் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் வாடிக்கையாளர்கள் மனதில் ஒவ்வொரு ப்ராண்டுகளுக்கும் தனிப்பட்ட மதிப்பீடு இருக்கும். நாங்கள் எங்களது பிரத்யேக ப்ராண்டை அறிமுகப்படுத்தி ஒன்பது மாதங்கள் முடிந்துள்ளது. பிரத்யேக ப்ராண்டிங் காரணமாக தளம் பலனடைந்துள்ளது,” என்றார்.

தற்போது MarQ ப்ராண்டை விற்பனை செய்வதற்கு 10 விற்பனையாளர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கியுள்ளது. ப்ராண்ட் வளர்ச்சியடைந்து அதிக பிரிவுகளை அறிமுகப்படுத்தியதும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார் ஆதர்ஷ்.

வளர்ச்சிக்கான உத்தி

ஃப்ளிப்கார்டின் ப்ரைவேட் லேபிள் முயற்சியானது லாபகரமான வளர்ச்சிக்கான உத்தியாகும். ஃப்ளிப்கார்டின் போட்டியாளரான அமேசான் தனது ப்ரைவேட் லேபிள் முயற்சியில் உலகளவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு ஃபேஷன் பிரிவில் அமேசான் பேசிக்ஸ், உணவுப் பிரிவில் அமேசான் ஹேப்பி பெல்லி, எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் அமேசான் எக்கோ போன்றவை சிறப்பாக செயல்படுகிறது.

தரவுகளைக் கொண்டு ஆராய்கையில் கண்டறியப்படும் இடைவெளியை சரிசெய்வதற்காகவே ப்ரைவேட் லேபிள்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஃப்ளிப்கார்ட் ஸ்மார்ட்பை என்கிற ப்ராண்டின் குடையின் கீழ் வீட்டு உபயோகம், எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன் உள்ளிட்ட 32 பிரிவுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

செப்டம்பர் மாதம் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்ற பண்டிகைக்கால விற்பனை நிகழ்வான பிக் பில்லியன் டேஸ் நிகழ்விற்கு பத்து நாட்களுக்கு முன்பு ஃப்ளிப்கார்ட் பெர்ஃபக்ட் ஹோம்ஸ் என்கிற ஃபர்னிச்சர்களுக்கான ப்ரைவேட் லேபிளை அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்வில் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்பட்ட பெரிய ஃபர்னிச்சர் ப்ராண்டுகளில் பெர்ஃபக்ட் ஹோம்ஸ் இராண்டாவது இடத்தைப் பிடித்ததாக தெரிவிக்கிறது ஃப்ளிப்கார்ட்.

சிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கினால் ஃப்ளிப்கார்ட் மேலும் சிறப்பாக செயல்பட முடியும். பயிற்சிபெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள், விரைவாக இலவசமாக சாதனங்களை பொருத்துதல், விற்பனைக்குப் பிறகான சேவை போன்றவை இந்தப் பிரிவில் செயல்படும் போட்டியாளர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : அதிரா ஏ நாயர்