தமிழகத்துக்குக் கிடைத்த மற்றுமொரு 'அஷ்வின்'- ஐபிஎல் போட்டியின் கோடீஸ்வர வீரர்!

0

அண்மையில் நடந்து முடிந்த ஐ பி எல் ஏலம், தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வின் முருகனுக்கு திருப்புமுனையாகவே அமைந்துள்ளது. அது வரை அதிகம் பேசப்படாத பந்து வீச்சாளர் அஷ்வின் இன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

விடாது அழைக்கும் தொலைபேசி அழைப்புகள், எதிர் வரும் போட்டிக்கான பயிற்சி மற்றும் மீடியா பேட்டி இவற்றிற்கிடையே தமிழ் யுவர்ஸ்டோரியிடம் தொலைபேசியில் உரையாடினார் அஸ்வின்.

"ஐ பி எல் போட்டியில் பங்கு பெரும் வாய்ப்பு அமையும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அதற்கான ஏலத் தொகை எதிர்பாராத ஒன்று" என்கிறார்.

அஷ்வின் தனது அடிப்படை தொகையான பத்து லட்சத்திலிருந்து நாற்பத்தைந்து மடங்கு கூடி நான்கரை கோடிக்கு 'ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்' அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் ஆர்வம்

ஆறு வயது முதற்கொண்டே கிரிக்கெட் விளையாட தொடங்கியதாகக் கூறும் அஷ்வின், பெளலிங்கில் மட்டுமே கவனம் செலுத்தியதாகக் கூறுகிறார். "சிறு வயதில் சௌகார்பேட்டையிலிருந்து நிறைய பந்துகளை அம்மா அடிக்கடி வாங்கித் தருவார்" என்கிறார்.

பன்னிரெண்டாவது வயதில் மாநில அளவில் விளையாடத் தொடங்கிய அஷ்வின், சமீபத்தில் நடந்த சயத் முஷ்டாக் அலி டீ20 போட்டியில் சராசரி 5.2 ரன்களுக்கு, பத்து விக்கெட்டுகள் பெற்றதன் மூலம் தான் பலரது கவனத்தை ஈர்த்ததாகத் தெரிகிறது.

படிப்பிலும் கவனம்

கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம், கடுமையான பயிற்சி இருந்த போதிலும், படிப்பிலும் சிறந்தே விளங்கியுள்ளார் அஷ்வின்.

"படிப்பிலும் கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டேன், பத்தாம் வகுப்பில் 93% பெற்று தேர்ச்சிப் பெற்றேன், அதே போல் 94.5% பனிரெண்டாம் வகுப்பில் பெற்றேன். SSN கல்லூரியில் 2012 ஆம் ஆண்டு மெக்கானிகல் எஞ்சினியரிங் பிரிவில் தேர்ச்சி பெற்றேன்," 

என்று கூறும் அஷ்வின், படிப்பில் சிறந்து விளங்கியதால் பள்ளியிலும் கல்லூரியிலும் விளையாட்டிற்காக அனுமதி பெறுவது சிரமமாக இருக்கவில்லை என்கிறார்.

ஐ பி எல் வாய்ப்பு

கடந்த வருடம் CSK வலைப் பயிற்சிக்கு பௌலிங் போட அழைப்பு வந்தது. 

"தோனி மற்றும் பிற சர்வதேச வீரர்களுக்கு பௌலிங் போட வாய்ப்பு பெற்றது பெரும் மகிழ்ச்சி. இதன் மூலம் கிரிக்கெட் வீரர் பிளெமிங்கின் கவனத்தைப் பெற்றேன்" என்றார்.

ஒன்றரை வருடம் முன்பு மணமுடித்த அஷ்வின், தனது மனைவி ஐஸ்வர்யா மிகவும் ஊக்கமளிப்பதாகக் கூறுகிறார்.  

"சிறு வயது முதலே அவரைத் தெரியும். பட்டப் படிப்பு முடித்து மேற்படிப்பா அல்லது கிரிக்கெட்டை தேர்ந்தெடுப்பதா என்ற சூழல் வந்த பொழுது ஐஸ்வர்யா தான் நம்பிக்கை அளித்து கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுக்க ஊக்கமளித்தார்" என்கிறார் அஷ்வின்.

தனது தந்தை தான் தனக்கு முன் மாதிரி என்று கூறும் அஷ்வின், கிரிக்கெட் விளையாட்டில் அணில் கும்ப்ளே மற்றும் ஷேன் வார்னே ஆகியோரை முன்மாதிரியாகக் கொண்டுள்ளார். நேரம் கிடைக்கும் பொழுது பிற விளையாட்டுகளையும் பார்க்கும் அஷ்வின் டென்னிஸ் விளையாட்டில் ரோஜர் பெடெர்ரெர் பிடிக்கும் என்கிறார்.

நமக்கு பிடித்தமான விஷயத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கூறும் அஷ்வின் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி அணிக்கு பலம் சேர்ப்பதே இப்பொழுதைய குறிக்கோள் என்கிறார். 

தமிழகத்துக்கு கிரிக்கெட்டில் மற்றுமொரு அஷ்வின் கிடைத்துவிட்டார் என நம்பிக்கையோடு வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்!

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற தமிழகத்தில் இருந்து வெற்றிநடை போடும் விளையாட்டு வீரர்கள் தொடர்பு கட்டுரைகள்:

திண்டுக்கல் டூ ஃபிபா: சர்வதேச கால்பந்தில் 'ரெஃப்பரி' ஆகி கோல் அடித்துள்ள முதல் தமிழச்சி!

உடுமலைபேட்டையில் இருந்து ஆம்ஸ்டர்டாம் வரை - மணி குமாரின் கால்பந்து ஆர்வம்