’மீடியா என்ற பயம் போய்விட்டது, அதை நாம் மீண்டும் கொண்டு வருவோம்'- அர்னப் கோஸ்வாமி

0
"இந்த நாட்டில் நாம் கத்தி கூச்சலிடாவிட்டால் யாரும் நம்மை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்,” 

என்றார் அர்னப் கோஸ்வாமி. 2017 Under 25 summit என்ற பெங்களுருவில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார் அர்னப். 

அர்னபின் பேச்சுக்கு எழுந்த கரகோஷமே அங்கு குழுமியிருந்த 3000 பங்கேற்பாளர்கள் அவரின் மீது கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்தியது. அங்கே அர்னப் தனக்கு வாக்கு கேட்டு பேசி இருந்தால் அவர் மாபெரும் வெற்றி அடைந்திருப்பார். அந்த அளவிற்கு அவரின் மீது மதிப்பை வைத்திருந்தனர். அர்னப் தான் தொடங்கவிருக்கும் புதிய மீடியா சேனலுக்கு ஆதரவு திரட்டவே மேடை ஏறினார். ’ரிப்பளிக்’ என்று பெயரிடப்பட்ட அந்த சேனலைப் பற்றி பகிரவே அர்னப் இளைஞர்களை சந்தித்தார். 

அங்கிருந்தோர், ‘ரிபப்ளிக்... ரிபப்ளிக்...” என்று குரல் எழுப்பி அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய அர்னப், ‘இந்த நாடு ரிப்பளிக் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறது...’ என்று தன் பாணியில் கேள்வியை எழுப்பினார். 

தன் போட்டியாளர்களை தாக்கிப் பேசிய அர்னப், ‘பத்திரிகைத்துறையின் மதிப்பிற்குரிய ஜாம்பவாங்கள்’ என்று கூறிக்கொள்வோர், பெங்களூரில் நடந்த பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவத்தை விவாதிக்காமல், உத்தர பிரதேசத்தின் குடும்ப அரசியல் பிரச்சனையில் ஆர்வம் காட்டினார்கள். ஊடகங்களுக்கு எது சரி எது தவறு என்று தீர்மானிக்கும் திறமை போய்விட்டது என்றார். 

"புனிதமான பத்திரிகைத்துறை, டெல்லியில் கடந்த பத்து ஆண்டுகளாக சீர்குலைந்த நிலையில், இறக்கும் தருவாயில் உள்ளது. நினைத்து பார்க்கமுடியாத சமரச நிலைக்கு அவர்கள் போய்விட்டனர்,” என்றார். 
”நீங்களும் நானும் சேர்ந்து இந்திய பத்திரிகைத்துறையைக் காப்பாற்றுவோம். செல்வாக்கு மிகுந்த டெல்லி செய்திகளைத் தாண்டி மற்ற நகரங்களான புனே முதல் கெளவ்ஹாத்தி வரை, பெங்களுரு முதல் மும்பை வரை பத்திரிகைத்துறையை எடுத்துச் செல்வோம். டெல்லி பத்திரிகைகள் மக்களின் பிரதிநிதியாக இருக்க தகுதியற்றவர்கள்,” என்று தன் உரத்த குரலில் பேசினார் அர்னப். 

ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் மூலம் தனது அறிவிப்பைப் பற்றி சில நாட்களுக்கு முன் அர்னப் வெளியிட்டு இருந்தார். அவர் டிஜிட்டல் ஊடகத்தில் கால்பதிக்க இருக்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது.

அண்மையில் பெங்களுருவில் நடந்த பாலியல் வன்முறை சம்பவத்தை பற்றி கோவத்துடன் பேசிய அர்னப், “உங்களுக்கு எல்லாம் பெங்களுருவில் என்ன நடந்தது என்று தெரியுமா?” என்று கூட்டத்தை நோக்கி கேட்க, “ஆமாம்...” என்றனர். 

“என் சீற்றம் கூடுகிறது. என்னால் அமைதியாக இருக்கமுடியவில்லை. பொதுவாக நேரலையில் வராதது பற்றி கவலைப்படாத என்னால் இந்த தினங்களில் அப்படி இருக்க முடியவில்லை. இந்த நிகழ்வைப் பற்றி இழிவாக பேசிய அந்த அமைச்சரை பற்றி நினைக்கையில் என் அடிவயிற்றில் இருந்து கோபம் பீறிட்டு எழுகிறது... நம் நாட்டில் உள்ள ஊடகங்கள் எங்கே சென்றுவிட்டன? அவர்களுக்கு வேறென்ன செய்தி அப்படி சுவாரசியமாக கிடைத்துவிட்டது? மக்கள் என்னிடம் நீங்கள் ரிபப்ளிக்கை ஏன் தொடங்குகிறீர்கள் என்று கேட்கின்றனர்? இதோ இதற்காகத்தான்...”  

தனது சேனலை ஒரு இயக்கம் என்று சொல்லும் அர்னப், சுதந்திரமாக செயல்படும் ஒரு ஊடகம் தற்போது தேவை என்றார். “மக்கள் என்னிடம் பத்திரிகைத்துறையின் மூலப்பொருட்கள் என்ன? என்று கேட்பர். என்னை பொறுத்தவரை, அது ராக்கெட் சயின்ஸ் ஒன்றும் இல்லை. அதில் செய்யவேண்டியது, வேண்டாதது என்ற பட்டியல் உள்ளது. சரி அல்லது தவறு இந்த இரண்டு தான். உண்மையை எடுத்துரைப்பதல்ல அது. சிலர் என்னை நீங்கள் ஏன் உண்மைகளை நம்புவதில்லை என்று கேட்கின்றனர். அவர்களுக்கு என் பதில், நான் உண்மையை சார்ந்து மட்டும் இருந்தால் நான் பத்திரிகையாளனே இல்லை வெறும் விக்கிப்பீடியா தான்,” என்றார்.

இதற்கு உதாரணமாக, 2010 இல் தான் காமன்வெல்த் கேம்ஸ் தொடர்பான ஊழலை சேனலின் மூலம் வெளியிட்டதை நினைவுக் கூர்ந்தார் அர்னப். டிசம்பர் 27, 2016 இல் ஊழல் குற்றச்சாட்டுள்ள சுரேஷ் கல்மாடி இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிரந்தர தலைவரக நியமிக்கப்பட்டார். அதை ஏன் எந்த ஊடகமும் கேள்வி கேட்கவில்லை? கடந்த சில மாதங்களாக மீடியா ஏன் செயலற்று இருக்கிறது? வேறொன்றுமில்லை, 

“மீடியா என்ற பயம் போய்விட்டது. அதை நாம் திரும்பப்பெறுவோம்.” 

அங்கு குழுமியிருந்த இளம் தலைமுறையினருடன் சகஜமாக உரையாடிய அர்னபின் மீது அவர்கள் கொண்டிருந்து மதிப்பும் மரியாதையும் அப்பட்டமாக வெளிப்பட்டது. இளைய சமுதாயம் எதற்கும் அஞ்சாத நெஞ்சம் படைத்தவர்கள். அதனால் அர்னப் கோஸ்வாமி இவர்களை போன்ற இளைய சமுதாயத்தினரின் துணையோடு தன் குரலை உரக்க ஒலிக்கச் செய்வார் என்றே எதிர்ப்பார்க்கலாம். 

ஆங்கில கட்டுரையாளர்: தீப்தி நாயர்