பெண்கள் பொதுக்கழிப்பறைகளை சுகாதாரமாக பயன்படுத்த உதவும் சாதனம்! 

பொதுக்கழிப்பறைகளை பெண்கள் சுகாதாரத்துடன், பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் மலிவுவிலை சாதனம் ஒன்றை  கண்டுபிடித்துள்ளனர் இரு ஐஐடி மாணவர்கள்!

0

இந்தியாவில் எப்போதும் சுகாதாரம் முக்கியப் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் 732 மில்லியன் பேருக்கு அடிப்படை சுகாதார வசதி கிடைப்பதில்லை என வாட்டர்எய்ட் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்திய நகர்புறங்களில் பொதுக்கழிப்பறை வசதிகள் உள்ளபோதும் 71 சதவீத பொதுக்கழிப்பறைகள் பயன்பாட்டில் இல்லை.

இதனால் பெண்களே மிகவும் மோசமாக பாதிப்படைகின்றனர். அதிலும் குறிப்பாக அதிகம் பயணிப்போர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒரு புள்ளியல் விவரத்தின்படி 62 சதவீத கர்ப்பிணிப் பெண்கள் அரை குந்து நிலையில் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதை வலி நிறைந்ததாக உணர்கின்றனர்; 50 சதவீதம் பேருக்கு சிறுநீர் பாதை தொற்று (UTIs) ஏற்படுகிறது; 48 சதவீதம் பேர் பொதுக்கழிப்பறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க சிறுநீரை அடக்கிக்கொள்கின்றனர். இந்த விவரம் நிலைமையை மேலும் தெளிவாக்குகிறது.

பொதுக்கழிப்பறைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றை குறைக்க Sanfe (Sanitation for Female) ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்துகிறது. இந்தத் தயாரிப்பு கழிப்பறையில் உட்காராமல் பயன்படுத்த உதவுகிறது. Sanfe என்கிற ஸ்டார்ட் அப்பை ஐஐடி டெல்லியின் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களான அர்சித் அகர்வால் மற்றும் ஹாரி ஷெராவத் ஆகியோர் நிறுவினர்.

இந்த சாதனத்தின் விலை 10 ரூபாய் மட்டுமே. எய்ம்ஸ், அப்போலோ மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களில் கிடைக்கிறது. இவ்விருவரும் தங்களது சாதனத்திற்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த சாதனம் மக்கக்கூடியது. அத்துடன் எளிதில் அப்புறப்படுத்தக்கூடியது.

அர்சித் முதலாம் ஆண்டு படித்தபோது டெல்லியில் உள்ள பொதுக்கழிப்பறைகளின் அவலநிலை குறித்து ஒரு அறிக்கையை தொகுத்தபோதுதான் இந்த முயற்சி குறித்த எண்ணம் முதல் முறையாக உதித்தது.

தனது ப்ராஜெக்ட் வாயிலாக சுகாதாரமற்ற கழிப்பறை இருக்கைகளால் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை உணர்ந்தார். இவரது ப்ராஜெக்ட் முடிவுகளை உலக சுகாதார நிலையம் ஆதரித்தது. இரண்டு பெண்களில் ஒருவருக்கு அவர்களது வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டிருக்கும் என உலக சுகாதார நிலையம் குறிப்பிடுகிறது.

அர்சித் கழிப்பறையை சுத்தப்படுத்தும் தானியங்கி இயந்திரம் குறித்து பணியாற்றி வந்த தனது நண்பரான ஹாரியுடன் இணைந்துகொண்டார். பின்னர் இருவரும் இணைந்து Sanfe துவங்கினர்.

’டிஎன்ஏ இண்டியா’ உடனான நேர்காணலில் ஹாரி குறிப்பிடுகையில்,

”நாங்கள் நகர் முழுவதும் உள்ள பொதுக்கழிப்பறைகளை பார்வையிட்டோம். கிட்டத்தட்ட அனைத்துமே சுகாதாரமில்லாமலும் பயன்படுத்த முடியாத நிலையிலும் இருந்தது. இது குறித்து மேலும் ஆராய்கையில் பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றிற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்துவதே என்பதைத் தெரிந்துகொண்டோம்,” என்றார்.

அர்சித் கூறுகையில்,

“நாங்கள் மேற்கொண்ட கணக்கெடுப்பின்போது பெண்கள், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை உணர்ந்தோம். அப்போதுதான் பெண்கள் நின்றவாறே சிறுநீர் கழிக்க உதவும் ஒரு தயாரிப்பை உருவாக்கவேண்டும் என சிந்தித்தேன். பொதுக்கழிப்பறைகளில் உள்ள கழிப்பறை இருக்கையின் மீது தொடர்பு இல்லாமல் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் அவசியம். ஒரு எளிமையான பெய்குழல் (funnel) வடிவமைப்புடன் துவங்கி அதை சில பெண்களிடம் கொடுத்து பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டோம்.

அனைத்து பெண்களாலும் எதைப் பயன்படுத்தமுடியும் என்பது இவ்விரு நிறுவனர்களுக்கும் தெரியாததால் சாதனத்தின் வடிவமைப்பு சிக்கலாக இருந்தது. இதற்கு தீர்வுகாண ஐஐடி-டெல்லியின் வடிவமைப்பு துறையின் பேராசிரியரான ஸ்ரீனிவாசன் வெங்கடராமனை இவர்கள் அணுகினர். ஹரீஷ் கூறுகையில்,

ஒரு பர்ஸில் எடுத்துச்செல்லக்கூடிய அளவு சிறியதாக இது இருக்கும். ஒருமுறை பயன்படுத்திய பிறகு எளிதாக அப்புறப்படுத்திவிடலாம். சருமத்தில் சிராய்ப்பு ஏற்படுவதைத் தவிர்க்க இந்தக் கருவியின் மேற்பரப்பு மென்மையான வளைவுகளைக் கொண்டுள்ளது.

தயாரிப்பு தயார்நிலையில் இருப்பதால் இவ்விருவரும் தங்களது நண்பர்களையும் மற்றவர்களையும் பயன்படுத்தி அதன் வடிவமைப்பு குறித்த அவர்களது கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இதை அடிப்படையாகக் கொண்டு வருங்காலத்தில் வடிவமைப்பில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள உள்ளனர். இவர்களுக்கு ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. டெல்லியைத் தாண்டி பிற பகுதிகளுக்கு இதை எடுத்துச் செல்ல விரும்புகின்றனர்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL