உலகம் கொண்டாடும் தாய்லாந்து அரசு!

தாய்லாந்து குகைக்குள் சிக்கித் தவித்த சிறுவர்களும் பயிற்சியாளரும் 17 நாட்கள் போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

0

தாய்லாந்தில் சுமார் 10 கிலோ மீட்டர் நீளமுள்ள ஆழமான தாம் லுவாம் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியினரும் அவர்களது பயிற்சியாளரும் திடீர் என ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

குகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தியிருந்த சைக்கிள்கள் மூலம் அவர்கள் குகைக்குள் சிக்கி கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுவர்களும் பயிற்சியாளரும் உள்ளே சென்றிருந்த நிலையில், திடீரெனப் பெய்த பெருமழையும், அதையடுத்து குகைக்குள் பாய்ந்த காட்டு வெள்ளமும் குகையின் வெளியேறும் வாயில்களை அடைத்துக் கொண்டதால், இந்த 13 பேர் அணி, ஒதுங்குவதற்கு சற்று மேடான இடத்தைத் தேடி குகைக்குள் பின்னோக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால், வெள்ளம் சூழ்ந்த, ஆழமான, சிக்கலான பாதைகளை உடைய அந்தக் குகையில் சிக்கிக்கொண்ட கால்பந்து அணியைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது.

இந்த விவகாரம் சர்வதேசக் கவனத்தைப் பெற்றது. பிரிட்டிஷ் குகை மீட்பு வல்லுநர்கள் உள்பட, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பு வீரர்களும், குகை மீட்பு வீரர்களும் தாய்லாந்தில் குவிந்தனர்.

9 நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில் இருந்து 4 கிலோ.மீட்டர். தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இந்த குகை அமைப்பு ஒரு மலையின் அடிப்புறத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் இருந்து சிறுவர்கள் சிக்கியுள்ள இடம் 800 மீட்டர் ஆழத்தில், அதாவது முக்கால் கிலோமீட்டருக்கும் கூடுதலான ஆழத்தில் இருந்தது.

சிறுவர்களோடு பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் நிகழ்த்திய உரையாடல் அடங்கிய விடியோ பதிவு ஒன்றும் வெளியானது, இது எல்லோருக்கும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்தது.

குகையில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் ஒன்று சிறுவர்கள் முக்குளிக்கக் கற்றுக் கொண்டு வெள்ளம் சூழ்ந்த குகையை நீந்திக் கடக்கவேண்டும் அல்லது வெள்ளம் வடியும் வரை சுமார் 4 மாதம் குகையிலேயே காத்திருக்க வேண்டும் என்று தாய்லாந்து ராணுவம் அறிவித்தது.

ஒருபுறம் குகையில் இருந்த தண்ணீரை மோட்டார் வைத்து இறைக்குப் பணி மேற்கொள்ளப்பட்டது. மறுபுறம் குகையின் ஆழத்தில் சிக்கிக் கொண்ட சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு உணவு, மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை சப்ளை செய்யும் பணியை தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர்கள் மேற்கொண்டனர்.

நான்கு மாதமும் இப்படியே உணவும் மருந்தும் சப்ளை செய்து அவர்களை காத்திருக்கச் செய்யலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், ஒவ்வொரு முறை ஒரு முக்குளிக்கும் வீரர் குகைக்குள் சென்று திரும்புவது மிகக் கடினமான, ஆபத்தான, பல மணி நேரம் பிடிக்கும் பயணமாக இருந்தது. எனவே அவர்களை உடனடியாக மீட்க திட்டம் வகுக்கப்பட்டது.

தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர் ஒருவர் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஆக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில் ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் உயிரிழந்தார்.

இது மீட்புக் குழுவை அதிர்ச்சி அடைய வைத்தது. அங்கு மேலும் சில நாட்களில் கடும் மழை எதிர்பார்க்கப்பட்டதால், குகைக்குள் மேலும் வெள்ளம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது.

குகையின் உள் பகுதி சில இடங்களில் 33 அடி உயரம் வரை இருந்தாலும், சில இடங்கள் மிகவும் குறுகலானவை. மீட்புப் பணியாளர்கள் தங்கள் காற்று உருளையையோடு அந்த இடங்களை நீந்திக் கடப்பது கடினம். எனவே, அவர்கள் தங்கள் உருளையை கழற்றி எடுத்துக் கொண்டுதான் அந்த இடங்களைக் கடக்க முடியும்.

ஒவ்வொரு சிறுவரோடும் இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் உடன் வரும்வகையில் மீட்பு திட்டமிடப்பட்டது. மீட்பு வீரர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஏற்கெனவே மீட்புப் பாதை நெடுக ஒரு கயிறு போடப்பட்டிருந்தது. அதன் வழியாக இரண்டு மீட்பு வீரர்களும் ஒரு சிறுவரும் நீந்திக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

ஆனால் மீட்புப் பாதை என்பது வெறும் நீந்தும் வகையில் மட்டும் இல்லை. நடப்பது, பாறை ஏறுவது, சேற்றில் நடப்பது போன்றவற்றையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சேம்பர் 'சி' என்ற இடத்தை அடைந்த பிறகு அவர்கள் ஓய்வெடுத்துவிட்டு நடந்தே வந்துவிடலாம். அந்த இடத்தில்தான் மீட்புப் பணியாளர்கள் முகாம் அமைத்துள்ளனர்.

குகைக்குள் சிறுவர்கள் சிக்கியுள்ள இடத்தில் காற்றில் ஆக்சிஜன் விகிதம் வீழ்வது அச்சுறுத்துவதாக இருந்தது. சாதாரணமாக காற்றில் 21 சதவீத ஆக்சிஜன் இருக்கவேண்டும். ஆனால், குகைக்குள் 15 சதவீதம் வரை ஆக்சிஜன் அளவு வீழ்ந்தது. எனவே, மீட்புப் பணியாளர்கள் ஏராளமான ஆக்சிஜன்களை உள்ளே கொண்டு சென்றனர்.

இந்த கடினமான பணியை மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக் கிழமை 4 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இரண்டு நாள்கள் தொடர்ந்து விடாது முயற்சி மேற்கொண்ட நேவி சீல் வீரர்கள் அனைவரையும் மீட்டுள்ளனர். இதனை அந்நாடு உற்சாகமாக கொண்டாடி வருகிறது. 

Related Stories

Stories by YS TEAM TAMIL