உலகின் முதல் ஸ்மார்ட்-வாட்ச் நிறுவனம் நிறுவிய 19 வயது இளைஞர்!

ஒரு TEDx பேச்சாளர், உலகின் முதல் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்-வாட்ச் கம்பெனியின் இணை நிறுவனர், ஒரு என்.ஜி.ஓ.வில் இருந்துகொண்டு அனைத்து செயல்பாடுகளையும் கையாள்பவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவால் அழைக்கப்பட்டவர், சித்தாந்த் வாட்ஸ் பற்றி நீங்கள் புரிந்துகொள்ள இதுபோதும்.

0

சித்தாந்த் வாட்ஸிடம் சில நிமிடங்கள் உரையாடினாலே போதும், இவர் வித்தியாசமானவர், விநோதமானவர் என்பதை உணர்ந்துகொள்வீர்கள். தனது கனவுகளை அடைவது பற்றி ஆழமான பேரார்வம் கொண்டவர் இவர். இதற்காக தன் உயர்நிலைப் பள்ளிப்படிப்பையே பாதியில் விட்டவர் அவர். “நான் என் படிப்பை நிறுத்த முடிவு செய்ததை அறிந்த போது என் பெற்றோர் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். இன்றுவரை அது தொடர்கிறது” என்று நினைவு கூறுகிறார். உற்சாகமூட்டும் இந்த இளைஞரின் வெற்றிப்பயணத்தின் சுருக்கம் இதோ:

நான் கனவு காண்பவன்

சித்தாந்த் வாட்ஸ் எதிலும் வித்தியாசமானவர். அவரை சக வயதினரிடம் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும் சில விஷயங்கள் :

1. இவர் ஒரு கனவு காண்பவர். ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக இவர் உருவாக உதவிய முதல் விஷயம் இது. ரிஸ்க் எடுக்க இவர் எப்போதுமே தயங்கியதில்லை. உண்மையைச் சொல்லப்போனால், அவற்றை சவால்களாகவே இவர் கருதியதில்லை. 

2. பாலிவுட் திரைப்படங்களின் சுபமுடிவுகளைப் போல, எல்லாவற்றுக்கும் நல்ல முடிவு உண்டு; அல்லது இது முடிவில்லை என்று நம்புகிறார். (அபி பாக்கி ஹே மேரே தோஸ்த் படம் மாதிரி).  

3. எட்டாம் வகுப்பு படிக்கும் போது தனது என்.ஜி.ஓ. அமைப்பைத் தொடங்கினார்.  

4. விதிகளுக்குள் இவர் தன்னை அடைத்துக் கொள்ளவில்லை. தான் விரும்பிய எதையும், தன் மனதுக்கு சரி என்று படுகிற எதையும் அவர் செய்து முடித்தார்.

சாதனைகள்

1. ஆண்ட்ராய்ட்லி சிஸ்டம்ஸ்

சித்தாந்த் தனது பதினேழாவது வயதிலேயே அபூர்வா சுகந்த் மற்றும் இரண்டு நண்பர்களுடன் இணைந்து ஆண்ட்ராய்ட்லி சிஸ்டம்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். அவர் கூறுகிறார்:

உலகின் முதல் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்-வாட்ச் உருவாக்க நாங்களே காரணமாக இருந்தோம். அந்த கைக்கடிகாரத்துக்கு நாங்கள் ‘ஆண்ட்ராய்ட்லி(Androidly)’ என்று பெயரிட்டோம். இந்த கைக்கடிகாரத்தில் தொலைபேசியில் அழைப்பது போல கால் செய்யலாம், இணையத்தில் ப்ரவுஸ் செய்யலாம், வாட்ஸப் பயன்படுத்தலாம், இசைக் கேட்கலாம், படமெடுக்கலாம். மொத்தத்தில், நடைமுறையில் உங்கள் ஃபோன் என்னவெல்லாம் செய்யுமோ, அதையெல்லாம் இதிலும் உங்களால் செய்ய முடியும்.

இதற்காக தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பையே இவர் இரண்டு வருடங்கள் தள்ளிப் போட்டுவிட்டார். 2013 மத்தியில் இருந்தே 220 டாலர் விலையில் ஆண்ட்ராய்ட் வாட்சுகள் உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்துவிட்டன. உலகம் முழுவதும் 110 நாடுகளில் விற்கப்படும் இதன் அடுத்த பதிப்பு (வெர்ஷன்) இந்த ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பர் காலகட்டத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. “இனி வரப்போகும் ஆண்ட்ராய்ட்லி ஸ்மார்ட்-வாட்சுகள் தற்போதைய ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தைக் கொண்டிருக்கும். இவற்றின் வடிவமைப்பும் முந்தையதைப் போல (உருவத்தில் பெரியதாக இல்லாமல்) இல்லாமல் பார்ப்பதற்கு சாதாரண வாட்சை போலவே இருக்கும். ஃபேஷனுக்கு அணியும் பொருளைப் போலை இதை அணிந்து கொள்ளலாம்” என்கிறார் சித்தாந்த்.

2. ஃபலக் ஃபவுண்டேஷன் (Falak Foundation)

சித்தாந்தின் தாயாரால் தொடங்கப்பட்ட ஃபலக் ஃபவுண்டேஷன் (Falak Foundation) என்னும் என்.ஜி.ஓ. அமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக விழிப்புணர்வு சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. சித்தாந்த் ஏழாம் வகுப்பில் இருக்கும் போதே, அடிப்படை கம்ப்யூட்டர் திறன்கள், ஆங்கிலம், மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை குழந்தைகளுக்கு கற்றுத் தந்தார். காலப்போக்கில், ரத்ததான முகாம்கள், உடல்பரிசோதனை முகாம்கள் போன்றவற்றை ஒருங்கிணைப்பது போன்ற செயல்பாடுகளிலும், என்.ஜி.ஓ.வின் தினசரி செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

என்.ஜி.ஓ.வின் பெரிய சாதனை பற்றி சித்தாந்த் கூறுகையில், “எனது என்.ஜி.ஓ. அமைப்பின் மூலமாக, அமெரிக்காவின் வெர்ஜீனியாவை மையமாகக் கொண்டு செயல்படும் மடாலயத்துடன் இணைந்து, புத்தகயாவில் ஒரு சர்வதேச மடாலயத்தை வெற்றிகரமாக கட்டி முடிக்க முடிந்தது. மிக அதிக வெளிநாட்டு மூலதனத்தை பயன்படுத்திக் கட்டப்பட்ட இதன் தொடக்க விழாவுக்கு மட்டுமே 1000க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இது அதற்கே உரிய வழியில் பிஹாரின் பொருளாதாரத்துக்கு உதவுவதுடன், சுற்றுலா மூலமாகவும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும்.”

3. இதுவரை டெட்எக்ஸ் (TEDx), ஹொராசிஸ் பிசினஸ் மீட் (அழைக்கப்பட்ட பிசினஸ் உலகின் முதல்100 புதுமையாளர்களில் ஒருவராக), பிக் இஃப் (BIG IF) (பில் கேட்ஸுடன்) உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட மாநாடுகள், கருத்தரங்குகளில் கலந்து கொண்டு சித்தாந்த் பேசியிருக்கிறார்.

4. இந்திய பிரதமர் அலுவலகத்தில் இருந்து சிறந்த தொழில்முனைவோர் விருது வாங்கியிருக்கிறார். அத்துடன் அமெரிக்க அதிபர் ஒபாமாவால் வெள்ளை மாளிகைக்கும் அழைக்கப்பட்டிருக்கிறார்.

ஊக்கமும் உத்வேகமும்

சித்தாந்தை பொறுத்தவரையில் “ஒரே விஷயத்தை நீண்ட நேரம் செய்வதில் நான் மகிழ்ச்சியடைவதேயில்லை. இதுதான் என்னை இயக்குவது. என் கனவுகளை துரத்தவே நான் விரும்புகிறேன். என் மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அவற்றையெல்லாம் செய்ய நான் விரும்புகிறேன். எதுவும் என்னை ஊக்கமூட்டுவதில்லை. நான் எதையாவது செய்ய வேண்டுமென்று மட்டுமே விரும்புகிறேன். பின் எல்லாவற்றையும் செய்ய நேரமிருக்கிறது என்று நான் உணரவே, அதைச் செய்வதில் என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன்”.

சவால்கள்

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சவாலே, நம் ஊக்கத்தைக் கெடுக்கும், நம் தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும் சுற்றத்தார் மற்றும் குடும்ப நண்பர்கள் தான்.

உங்கள் எண்ணம் மதிப்பில்லாதது என்று அவர்கள் சொல்வார்கள். அதுமட்டுமல்ல, உங்கள் திட்டம் அல்லது எண்ணம் ஏன் வெற்றி பெறாது என்று உங்களைத்தவிர எல்லோரும், ஏன் சில நேரங்களில் உங்கள் குழு உறுப்பினர்களே பல காரணங்களை அடுக்குவார்கள். அது எப்படி வேலை செய்யும் என்பதை ஒருவரும் என்னிடம் வந்து சொல்ல மாட்டார்கள்.

கையிலுள்ள அடுத்தத் திட்டம் – தலைமைத்துவ மாநாடு (Leadership Summit)

அனைத்துத் துறைகளில் இருந்து வருபவர்கள் கலந்துரையாடவும் மற்றவர்களுக்கு ஊக்கமூட்டவும் வழியேற்படுத்தும் வகையில் ஒரு சர்வதேச மேடையை உருவாக்க வேண்டுமென்று விரும்புகிறார் சித்தாந்த். “லீடர்ஷிப் சம்மிட் (மேடையின் பெயர்), TED பேச்சு மேடையை ஒத்ததாக இருக்கும். மக்கள் தங்கள் உற்சாகமூட்டும் வெற்றிக் கதைகளை பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கும் ஒரு சந்திப்பிடம் அங்கிருக்கும். அதற்கும் மேல், எதிர்காலத்தில் கல்லூரிகள், பள்ளிகளை இது சென்றடைய விரிவாக்கமும் செய்யப்படும்” என்று தனது திட்டங்களை விளக்குகிறார்.

“அதைத்தவிர, திடீரென எனக்கு ஏதாவது ஒரு எண்ணம் தோன்றும். நான் அதற்காக வேலை செய்யத் தொடங்கி விடுவேன்” என்று மேலும் கூறுகிறார்.

இந்த இளம் சாதனையாளருக்கு ஹலோ சொல்ல, ட்விட்டரில் @siddhantvats என்னும் முகவரியிலும், அவரது ஃபேஸ்புக் முகவரியிலும் https://www.facebook.com/SiddhantVatsOfficial நீங்கள் அவரை ஃபாலோ செய்யலாம்.