ஆப், வாட்ஸ்-அப், ஆன்லைன் டெலிவரி என்று தொழில்நுட்ப வசதிகளுடன் அசத்தும் பொள்ளாச்சி சூப்பர் மார்கெட் !

2

பொள்ளாச்சி அருகே சிறிய கிராமம் ஒன்றில் துவக்கப்பட்ட மளிகைக் கடை இன்று அதன் உரிமையாளர்களின் கடின உழைப்பால் பெரும் வளர்ச்சி கண்டு ’மணி மளிகை குழுமமாக’ பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இக்காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, வாட்ஸ்-அப், செயலி மற்றும் ஹோம் டெலிவரி என்று வாடிக்கையாளர்களை அசத்தி வருகின்றனர். 

இது எப்படி சாத்தியமாயிற்று? அதன் உரிமையாளர் ம.முருகன் தன் தொழில் பயணத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

மணி மளிகையின் உரிமையாளர்கள் முத்தையா மற்றும் ம.முருகன், மதுரையில் உள்ள ஒரு சிறிய பாத்திரக்கடையில் 120 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்து வந்தனர். பின்னர் முருகன் தன் சம்பள சேமிப்பான ரூபாய்.5000 கொண்டு மளிகை பொருட்களை வாங்கி வந்து அருகில் உள்ள மக்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கினார்கள். அதனை தொடர்ந்து செய்ததில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நற்பெயர் கிடைத்தது. சிறிது காலத்தில் பொள்ளாச்சிக்கு உட்பட்ட கொல்லபட்டி காளியாபுரம் என்னும் கிராமத்தில் சிறிய கடை ஒன்றை ஆரம்பித்தனர்.

கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் சில வருடங்களில் பொள்ளாச்சி சத்திரம் வீதியில் ’மணி மளிகை’ என்னும் மளிகைக் கடை ஆரம்பித்தார்கள். தங்கள் தொழிலின் முக்கிய நோக்கத்தைப் பற்றி விவரித்த முருகன், 

"குறைந்த விலை, நிறைந்த தரம், சிறந்த சேவை’  என்னும் தாரக மந்திரத்தை மனதில் கொண்டே செயல் பட்டு வந்தோம். இதுவே எங்கள் வெற்றிக்கு முதற்படியாக அமைந்தது. அதனை தொடர்ந்து நானும் எனது சகோதரர்களும் சேர்ந்து பொள்ளாச்சி கோவை மற்றும் உடுமலை சாலையில் புதிதாக கடைகளை தொடங்கினோம்,” என்றார்.

தற்போது ’மணி மளிகை’ வாடிக்கையாளர்களின் சேவைக்காக சத்திரம் வீதி மற்றும் உடுமலை ரோட்டில் இயங்கி வருகிறது. 

தொடக்கம் மற்றும் வளர்ச்சி

திருநெல்வேலி மாவட்டம் தட்டார்மடம் என்னும் சிறிய கிராமத்தில் மிக ஏழ்மையான, குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தது முருகனின் குடும்பம். 

“வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்ல முடியாமல் என் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு வேலை தேடி மதுரை வந்தேன். அங்கே ஒரு சிறிய பாத்திரக்கடையில் 120 ரூபாய் சம்பளத்திற்கு வேலை கிடைத்தது,”

என்று தன் ஆரம்பக்கட்டத்தை நினைவுக்கூர்ந்தார். பின்னர் தனது சம்பள சேமிப்பைக் கொண்டு மளிகை பொருட்களை அருகில் உள்ள மக்களுக்கு விற்பனை செய்து வந்தனர். சிறிது காலத்தில் 1976-ஆம் ஆண்டு பொள்ளாச்சிக்கு உட்பட்ட கொல்லபட்டி காளியாபுரம் என்னும் கிராமத்தில் சிறிய கடை ஒன்றை தனது பெரியப்பா உடன் தொடங்கியதாக கூறினார்.   

தற்போது முருகனின் மகன் ஆனந்த். பி.இ முடித்துவிட்டு அப்பாவுக்கு துணையாக தொழிலில் ஈடுபட்டு, தொழில்நுட்பத்தைக் கண்டு தொழிலை வளர்க்க உதவுகிறார். 

“நமது கடைகள் காலை 8.30 மணி முதல் இரவு 11 மணிவரை வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதுவே எங்களின் வெற்றியாக நம்புகிறேன்!”

சந்தித்த சவால்கள், சமாளித்த தருணங்கள்

முருகனின் குடும்ப கஷ்டம், தம்பி, தங்கைகளை படிக்க வைக்க வேண்டும், அவர்கள் கஷ்டப்படக் கூடாது என்கிற லட்சியமே, இவரை இரவும், பகலுமாக உழைக்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் தன்னை வாழ வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக அனைத்து பொருட்களையும் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள். 

உள் படம்: உரிமையாளர் முருகன்
உள் படம்: உரிமையாளர் முருகன்
”அதிக அளவில் மளிகைப் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு ரெடி கேஷ் மூலம் வாங்கினோம், அதனால் குறைந்த விலைக்கு வாங்க முடிந்தது, வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த விலையில் பொருட்களை விற்க முடிகிறது. இதனால் மக்களின் பேராதரவை பெற்றோம்.” 

20000-திற்கு மேல் வாடிக்கையாளர்களை பெற்றதற்கு இதுவே முக்கியக்காரணம் என்றார் முருகன். வாடிக்கையாளர்கள் பலரும் ’சூப்பர் மார்க்கெட்’ போன்று மொத்தவியாபார இடமாக எங்கள் கடைகளை மாற்ற வேண்டும் என கூறிவருகின்றனர். 

“அப்படியே வெளிநாட்டில் இருக்கும் ’வால்மார்ட்’ போன்று, இன்று இல்லையென்றாலும் கண்டிப்பாக விரைவில் கொண்டு வருவோம். அது எங்கள் கனவு. அதற்கான வேலையைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்,” என்றார் முருகன்.

குறைந்த லாபத்துடன், நிறைய கிளைகள் இருப்பதினால், சராசரியாக 5% லாபத்துடன் இயங்குவதாக தெரிவித்தார். இவர்களின் வெற்றிக்கு தூணான வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள்.

”20000+ வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த வெற்றிக்கு பின்னால் நம் கடை ஊழியர்களின் கடின உழைப்பும், நான் ஆரம்பித்த சிறு துவக்கத்தை பெரிதாக்க வேண்டும் என்று எண்ணிய என் சகோதரர் செல்வகுமார், என் சித்தாப்பா மற்றும் எனது மகன் ஆகியோரின் முயற்சிகளும் உள்ளன,” என்றார். 

இன்றைய தொழிநுட்ப வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் விதமாக ’ஆண்ட்ராய்டு ஆப்’ மூலமும் ஆர்டர்கள் கொடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இப்போது இதுவே பொள்ளாச்சியில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

“இது எங்களின் அடுத்த வெற்றி. பெரும்பாலும் கிராமத்து மக்கள் சார்த்த பொள்ளாச்சி-ல் நாங்களே அனைவருக்கும் ’மணி மளிகை ஆன்ட்ராய்டு ஆப்’ மூலம் ஆர்டர் செய்ய கற்றுக்கொடுக்கிறோம். தொழிநுட்பம் நல்லதே...” என்கிறார் முருகன்.

ஆன்ட்ராய்டு ஆப் வசதி, வாட்ஸ்-அப் மூலம் ஆர்டர் அனுப்பும் வசதி, டோர் பிரீ எண்ணில் ஆர்டர் செய்யும் வசதி, முகநூல் மூலம் ஆர்டர் செய்யும் வசதி என பல தொழில்நுட்ப வளர்ச்சி தங்கள் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஏற்படுத்தியுள்ளனர் இவர்கள்.

தொடக்கம் எங்கு இருந்தாலும் இலக்கு பெரிதாக இருந்தால், கடும் உழைப்பு மற்றும் புத்திசாலிதனத்தைக் கொண்டு தொழிலில் வெற்றி அடையமுடியும் என்பது இந்த மளிகைக் கடையின் 40 ஆண்டுகால வளர்ச்சியில் இருந்து பலரும் கற்கவேண்டிய பாடம். 

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Related Stories

Stories by Induja Ragunathan