இயலாமையை இணையத்தால் இல்லாமல் செய்த 'வெப் அசிஸ்ட்'

0

ஹர்பிரீத் சிங், இவர்தான் வெப்அசிஸ்ட் (Webassist) மையத்தின் நிறுவனர். யுவர்ஸ்டோரிக்கு இவர் அளித்த பிரத்யேக பேட்டியில், உடல்நல குறைபாடு கொண்டவர்களுடன் இணையத்தை இணைக்கும் வகையில் ஒரு மையத்தை தொடங்கியமைக்காக நாஸ்காம் சமூக பங்களிப்பு விருது பெற்றது குறித்தும், தொழில்முனைவராக தனது ஆரம்பகாலக்கட்டத்தில் கடந்து வந்த பாதைகள் குறித்தும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

நாஸ்காம் விருது (NSIH ) பெற்றதன் பின்னர் உங்களது பயணம் எப்படியிருக்கிறது? / அல்லது நாஸ்காம் விருது உங்கள் பயணத்தை எவ்வகையில் மேம்படுத்தியுள்ளது?

நிச்சயமாக. நாஸ்காம் விருது பெற்றது பல வழிகளிலும் கதவுகளை திறந்திருக்கிறது. தொழில்துறையினர், பங்குதாரர்கள், வெற்றிகரமான தொழில்முனைவர்கள் என பல தரப்பினருடனும் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. நாஸ்காம் கவுரவம் எனது செயற்திட்டத்துக்கு புத்தாக்கம் அளித்து, புதிய பரிமாணங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளது. ஆம், சமூக மாற்றத்துக்கான நேர்மறை பணிகளை மேற்கொள்வதற்கான நம்பிக்கை தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

நாஸ்காம் விருது எனக்குமட்டுமல்ல சமூக மாற்றத்துக்கான செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ள எங்களது மொத்த குழுவினருக்கும் நம்பிக்கையை அளித்துள்ளது.

விருது அளித்த அங்கீகாரமும், கவுரவமும் எங்கள் வியர்வையை விதைகளாக விதைத்து நல்ல அறுவடை செய்ய எங்கள் குழுவினரை ஊக்குவித்துள்ளது. எங்கள் தொழில் இதன் மூலம் விஸ்தாரமான ஒரு தளத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விருதுக்குப் பின்னர் நீங்கள் அடைந்த குறிப்பிடத்தகு முன்னேற்றம் என்ன?

NSIH விருது பெற்றது தொடர்பாக வாடிக்கையாளர்களின் பின்னூட்டங்களை பகுப்பாய்ந்தபோது, எங்களது செயற்திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடிந்தது. தொழில்நுட்ப ரீதியாக பார்க்கும்போது வெப் அசிஸ்ட்Webassist , நிறுவனம் கிளவுட் கம்ப்யூடிங் அதாவது மேக கண்ணிமயம் முறை மூலம் அஸிஸ்டிவ் டெக்னாலஜி என்ற தொழில்நுட்ப முறையை பின்பற்றி டிஸ்லெக்ஸியா, மோட்டார் சென்ஸரி குறைபாடுகள் மற்றும் பல்வேறு உடல்நல குறைபாடுகளுடன் வாழ்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது.

அதேவேளையில் வெப்அசிஸ்ட் மையத்தின் கிளைகளை விஸ்தரிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டோம்.

இச்சேவையை மொபைல் தளத்திலும் அளிக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா? மொபைல் ஆப்களை உருவாக்கும்போது ஏற்படும் மொழி சவால்களை எப்படி சமாளிக்க திட்டமிட்டிருக்கிறீர்கள்?

ஆம். 2011-ல் வெப்அசிஸ்ட் துவங்கப்பட்டபோது அது அனைத்து வகையான தளங்களுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்றே வடிவமைத்தோம். எனவே இணைய உலகில் அவ்வப்போது வரும் மாற்றங்களுக்கு ஏற்ப புதுப்புது வடிவங்களுக்கு ஏற்றாற்போல் செயலியை வழங்கவும் நாங்கள் தயாரகவே இருக்கிறோம். பலவகையான குறைபாடுகள் கொண்டவர்களும் எங்கள் செயலியை அவர்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களது லட்சியம்.

அதேவேளையில் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் பெருகிவரும் மொபைல் பிளாட்பார்ம்களில் அவற்றிற்கேற்றவாறு செயலிகளை வடிவமைப்பதும் பெரும் சவாலே. அதை எங்களது தொழில்நுட்ப குழுவினர் வெற்றிகரமாக செய்து வருகின்றனர்.

மாணவப் பருவத்தில் தொழில்முனைவராக இருப்பதில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை யாவை?

வெப்அசிஸ்ட் மையத்தை நான் ஒரு மாணவனாக இருக்கும்போதே தொடங்கிவிட்டேன். ஆரம்ப நிலையில் தேவைப்பட்ட சில ஆய்வுகளை தொடர்ச்சியாக செய்வதிலும், ஒரு நேர்த்தியான குழுவை அமைப்பதிலும் நிறைய சவால்கள் இருந்தன. ஆரம்ப நிலையில் இருந்த இச்சவால்கள் போகப்போக சீராகின. ஆரம்ப நிலையில், அன்றாடம் நிறைய குறைபாடுகள் கொண்டவர்களை சந்தித்து அவர்களது எதிர்பார்ப்புகளை கண்டறிந்தோம். ஒவ்வொரு நாளும் 17 முதல் 18 மணி நேரம் வேலை பார்க்க வேண்டியிருந்தது.

இவற்றையெல்லாம் எப்படி சமாளித்தீர்கள்?

முழுமையாக புலனாகாத ஒரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது அதற்கு செயற் வடிவம் கொடுப்பது என்பது மிகவும் சவாலானது. ஒவ்வொரு புது முயற்சியும் புதுப்புது படிப்பினையை எனக்கு அளித்தது. அதேவேளையில், மனத்தடைகளை தகர்த்து சுய முன்னேற்றச் சிந்தனைகளை வளர்த்து கொண்டதால் நான் முன்னெடுத்த முயற்சியை கைவிடாமல் தொடர முடிந்தது.

மாணவப் பருவத்தில் தொழில்முனைவராக இருப்பதன் சிறப்புகள் என்னென்ன?

ஒரு மாணவராக இருப்பதால் எல்லாவற்றையும் நேர்மறை சிந்தனையுடன் அணுகும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், பிரச்சினைகளில் எதிர்கொள்ளும் போது கிடைக்கும் படிப்பினைகளைக் கொண்டு அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். புதிய எண்ணங்களுக்கு குறைவிருக்காது. இத்தருணத்தில் பிரபல் எழுத்தாளர் பால்.ஜி.யின் ஒரு பொன்மொழியை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். "நீ ஒரு விஷயத்தில் வெறும் கத்துக்குட்டியாக இருக்கிறாய் என நினைத்தால் அதைச் சார்ந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்" என்பதே அது. இது ஒரு சிறந்த தாரக மந்திரம்.

பகுதி நேர தொழில்முனைவராக இருந்து முழு நேர தொழில் முனைவராக ஆனதில் உள்ள வேறுபாடு என்ன?

அது ஒரு அடுத்தகட்டத்துக்கான நகர்வு. குழுவினருடன் கூடுதல் ஒத்துழைப்புடன் கூடுதல் கடின உழைப்பை முதலீடு செய்வதற்கான தருணம். இப்போது எங்களுக்கு இருக்கும் சவால், இந்த சேவையை பெரும்பாலான உடல் மற்றும் இதர குறைபாடுகள் கொண்டோருக்கு எடுத்துச் செல்வது மட்டுமே.