தமிழ்நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைத்த திருநங்கைகள்!

1

2015- பல மாற்றங்களுக்கு நம்மை பழக்கிய ஆண்டு. முத்தப்போராட்டம், ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக ஃபேஸ்புக் ப்ரொஃபைல் படத்தை மாற்றிய பலர் என பல புரட்சிகள் சத்தமே இல்லாமல் நடந்தேறின. திருநங்கைகளுடன் கரம் கோர்த்து, இயல்பாக உரையாட ஆரம்பித்திருக்கிறோம். அவர்களின் வியத்தகு வெற்றிகளை நாமும் கொண்டாடியிருக்கிறோம். அவர்களுடைய வெற்றிகளை கொண்டாட நம்மை திரும்பிப் பார்க்க வைத்த திருநங்கைகள் சிலரை நினைவுகூர்தல், நலம் தானே...

  • நூரி அம்மா

சென்னையில் ‘சிப் ஹோம்’ (SIPHOME) என்றொரு ஆசிரமம் நடத்திக் கொண்டிருக்கும், வாழ்வின் பல ஏற்ற இறக்கங்களைக் கண்ட, 66 வயதான திருநங்கை நூரி அம்மாள். சிப்ஹோம் மூலமாக வீடில்லாத குழந்தைகள் மற்றும் ஹெச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பரமாரித்து வருகிறார் இவர். நிரந்தர முகவரி இல்லாத அவருடைய ஆசிரமத்தை, முன்னேற்றும் நோக்கோடு, ஆசிரமத்திற்காக கட்டிடம் கட்ட நிதி திரட்டிக் கொண்டிருக்கிறார். 

“எங்கள் தோல்விக்கு சமூகம் தான் காரணம் என்று திருநங்கைகள் சொல்லக் கூடாது. இந்த சமுதாயத்தில் ஏராளமான அன்புக் கொட்டிக் கிடக்கிறது. அதை புரிந்துக் கொள்ள வேண்டும்”, என்பது நூரி அம்மாவின் அன்பு மொழி!

நூரி அம்மாவின் 'சிப் ஹோம்' பக்கம்

நூரி அம்மா பற்றிய விரிவான கட்டுரைக்கு இங்கே சொடுக்குக

  • பத்மினி பிரகாஷ்

இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர். கோவையைச் சேர்ந்த பத்மினி, நடனம், நடிப்பு, எழுத்து என பல திறன்கள் பெற்றவர். தற்போது, லோட்டஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் பத்மினி, கோவையில் தன் கணவர் மற்றும் குழந்தையோடு இன்புற்றிருக்கிறார். 

“திருநங்கைகளுக்கு, கல்வி மிக அவசியமான ஒன்று. கல்வியோடு சேர்த்து, நம் திறமைகளையும் நாம் ஆக்கப்பூர்வமாக வளர்த்தெடுக்க வேண்டும். சமூகம் நமக்கு மரியாதை செலுத்தும்படி வாழ்ந்துக் காட்ட வேண்டும்” - என்பது பத்மினியின் நம்பிக்கை வாசகம்.

பத்மினி பிரகாஷ் பற்றிய கட்டுரையை படிக்க இங்கே சொடுக்குக

  • ப்ரித்திகா யாஷின

இந்தியாவின் காவல் துறையில் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டரான ப்ரித்திக்காவிற்கு பூர்வீகம் சேலம். பல இன்னல்களுக்கு மத்தியிலும் கணினியில் தன் இளநிலைப் பட்டத்தைப் பெற்றிருக்கிறார். சிறு வயதிலிருந்தே விளையாட்டுகளில் ஆர்வமாய் இருந்த ப்ரித்திகாவிற்கு, காவல் துறையில் பணி நெடுங்கால கனவு. அது நனவான போது, ப்ரித்திக்கா மட்டுமல்லாமல், அந்த வெற்றியை தமிழகமே கொண்டாடியது.

“திருநங்கைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு நிச்சயம் தேவை. முறையான கல்வியும், பெற்றோரின் அரவணைப்பும் முன்னேற்றத்தின் பாதையில் எங்களை செலுத்தும்” என்பது இவரது கூற்று.

ப்ரித்திக்காவின் நேர்காணல் கட்டுரைக்கு இங்கே சொடுக்குக

  • குணவதி

ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த குணவதி, பெற்றோரின் ஆதரவோடு, ஆங்கில இலக்கியத்திலும், சமூக பணியிலும் முதுநிலை பட்டம் பெற்றவர். 2013ஆம் ஆண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு துறையில் தற்காலிக பணியில் அமர்த்தப்பட்டார்.

ஏளனங்களுக்கு ஆளாவதில் இருந்து குணவதியும் தப்பவில்லை. இருப்பினும், தன் இலக்கை நோக்கிய பயணத்தின் தீவிரம், ஏளனங்களை எல்லாம் கண்டுக்கொள்ளச் செய்வதில்லை. “ஆசிரியராவது என் கனவு, லட்சியம். அதை கண்டிப்பாக நான் அடைவேன்” என்ற முடிவோடு பயணிக்கிறார்.

  • க்ரேஸ் பானு

பொறியியல் பட்டப்படிப்பில் சேர அண்ணா பல்கலைகழக கவுன்சிலிங் மூலம் தேர்ச்சி பெற்றிருக்கும் முதல் திருநங்கை க்ரேஸ் பானு. பெற்றோர்களால் கைவிடப்பட்ட பானு, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட டிப்ளமோ படிப்பில் 94 சதவீதம் பெற்றிருந்தாலுமே, அவருக்கு அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காதது வருத்தம் தான். 

பல சமூக சிக்கல்களுக்கு எதிராகவும், வாழ்வுரிமைகளுக்காவும் குரல் கொடுப்பவர். புரட்சி, போராட்டத்திற்கு எல்லாம் சளைக்க மாட்டார். பொறியியல் படிப்பில் சிறந்த மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற இவருக்கு வாழ்த்துக்கள்!