நோயாளிகள் எளிதாக உறங்க உதவும் மருத்துவமனை கட்டிலை உருவாக்கிய இளைஞர்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த நிகில், தன் அனுபவம் மூலம் இந்த கட்டிலை வடிவமைத்துள்ளார். 

0

நிகில் ஔதருக்கு 17 வயதிருக்கையில் கடுமையான மைலாய்டு லூகோமியா இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது அவர் உயிர் பிழைக்க 10 முதல் 20 சதவீதம் மட்டுமே வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. இரண்டு சுற்று ஆரம்பகட்ட சிகிச்சை, கீமோதெரபி, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்குப் பிறகு கடினமான சிகிச்சைமுறையைக் கூட அவரால் பொறுத்துக்கொள்ள முடிந்தது, ஆனால் தூக்கமின்மை பிரச்சனையை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

"கீமோவினால் பலவீனமானதால் நிமோனியா ஏற்பட்டது. கீழே விழ நேர்ந்தபோது அதிர்ஷ்டவசமாக என் அப்பாவின் கைகளில் விழுந்தேன். அழுத்தப்புண் ஏற்பட்டது. இதனால் நோய் தொற்று ஏற்படும் என அஞ்சி முறையாக குளிக்கமுடியாமல் போனது. எனக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் பக்க விளைவாக என்னுடைய நுரையீரல் திறன் குறைந்துபோனது,” என்றார் நிகில்.

இறுதியாக முதுகுப்புறத்திற்கு அடியில் வைக்கப்பட்ட சாய்ந்துகொள்வதற்கு ஏற்ற முக்கோண வடிவில் உள்ள தலையணை நிகில் தூங்குவதற்கு உதவியது. இவ்வாறு அவரது அனுபவத்தால் உருவானதுதான் ’கெட் டு ஸ்லீப் ஈஸி’ (Get to Sleep Easy) என்கிற சாய்வான கட்டில்.

தற்போது 24 வயதாகும் நிகில், ஆஸ்திரேலியா சிட்னியில் மருத்துவ மாணவராக உள்ளார். ’கெட் டு ஸ்லீப்’ வாயிலாக ஈட்டப்படும் வருவாயில் இருந்து ஒரு பகுதியை நன்கொடையாக அளிக்கிறார். நிகில் கடினமான போராட்டத்திற்குப் பிறகு புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர் பிழைத்துள்ளார். ஆனால் அவர் பெற்ற சிகிச்சை தீவிர உடல் உபாதைகள் இருக்கும் நோயாளிகள் சந்திக்கும் வேதனைகள் குறித்த கண்ணோட்டத்தை அவருக்கு அளித்தது.

தனிப்பட்ட முறையில் உணர்ந்த வலி இவரது முயற்சிக்கு உந்துதலளித்தது

நிகில் தான் சந்தித்த பல்வேறு கஷ்டங்கள் சிறு சிறு நடவடிக்கைகள் மூலம் தவிர்க்கக்கூடியவை என விவரித்தார். மருத்துவ மாணவராக இருப்பதால் அவர் ஆய்வு மேற்கொள்ளத் துவங்கியபோது அவர் கண்டறிந்தது அதிர்ச்சியளித்தது. நிமோனியாவைக் குறைப்பதற்கு ஒரு பொருத்தமான உதாரணத்தை அவர் குறிப்பிட்டார். 

“உட்கார்ந்த நிலையில் இருப்பது நிமோனியாவையும் அதன் தீவிரத்தையும் பெருமளவு குறைக்கிறது. இதனால் மருத்துவமனையில் செலவிடும் நேரமும் 35 சதவீதம் வரை குறைகிறது,” என்றார். 

அடுத்ததாக நோயாளிகள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை கீழே விழுதல் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளாகும்.

”பெரும்பாலும் நோயாளிகள் எழ முற்படும்போதும், சிலர் நடக்கும்போதும், அறையில் யாரும் இல்லாதபோதும் கீழே விழுந்துவிடுகின்றனர். இவ்வாறு பலர் கீழே விழுந்துவிட்டாலும் அவர்களின் நிலை குறித்து மருத்துவ ஊழியருக்கு பின்னரே தெரிய வருகிறது. அழுத்தப் புண் நாள்பட நீடித்து சீழ்பிடிக்கும் நிலைக்கு தள்ளிவிடும்,” என்று குறிப்பிட்டார் நிகில். 

இத்தகைய நிலைகளே ’கெட் டு ஸ்லீப் ஈஸி’ உருவாக வாய்ப்பு ஏற்படுத்தியது என்றும் விளக்கினார்.

எவ்வாறு செயல்படுகிறது?

’கெட் டு ஸ்லீப் ஈஸி’-யின் படுக்கையை ரிமோட்டைக் கொண்டு இயக்கலாம். இந்தக் கட்டில் உங்களது விருப்பப்படி உங்களை மேலேயும் கீழேயும் நகர்த்தும். நோயாளிகள் நகர்வது பாதுகாப்பற்றது என்கிற நிலையிலோ அல்லது உயிர் காக்கும் முதலுதவி வழங்கும் நிலைக்கு நகர்த்த வேண்டும் என்றாலோ நர்ஸ் அல்லது மருத்துவர்களும் இதன் செயல்பாடுகளில் தலையிடலாம்.

படுக்கைக்கு கிழே இருக்கும் உணர்கருவிகள் படுக்கையில் இருப்பவரின் நிலையைக் கண்டறிந்து நகரும் பாங்கினைக் கண்காணித்து படுக்கைக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தையும் கண்காணிக்கும்.

”ஒருவரின் சுவாசத்தைக் கண்காணித்தும் ஒருவர் கீழே விழ இருந்தாலோ அல்லது விழுந்திருந்தாலோ அதைக் கண்டறியும் உணர்கருவியைக் கொண்டும் இந்தக் கட்டில் எச்சரிக்கை ஒலி எழுப்பும்,” என்றார் நிகில்.

ஏதேனும் உதவி பெறவேண்டும் என்றாலோ நர்ஸ் உதவி தேவைப்படும் என்றாலோ குரலைக் கண்டறியும் ஷீல்ட் உதவும். தற்போது மருத்துவமனைகளில் காணப்படும் அழைப்பு முறை குறித்து பல நர்ஸ்கள் புகார் எழுப்புகின்றனர். நோயாளிகள் தண்ணீர் தேவை போன்ற சிறு உதவிக்கு அழைக்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் அவசர தேவைக்கு அழைக்கிறார்களா என்பதை வேறுபடுத்த முடியவில்லை என்பதே அவர்களது முக்கிய புகாராகும். கெட் டு ஸ்லீப் ஈஸியின் குரல் அங்கீகரிக்கும் மென்பொருள் நோயாளி எவ்வாறு உணர்கிறார், மருந்துகள் எடுத்துக்கொண்டாரா, மூச்சு பயிற்சி மேற்கொண்டாரா உள்ளிட்டவற்றை சோதிக்கும்.

”சக்தி வாய்ந்த காற்று பம்ப், பல மெமரி ஃபோம்கள், மெத்தை பொருட்கள் ஆகியவற்றின் முன்வடிவத்தை உருவாக்கத் துவங்கினோம். இறுதியாக இந்த எடையை தூக்கக்கூடிய மிகச்சிறிய பம்ப்பைக் கண்டறிந்தோம்,” என்றார் நிகில்.

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் வழக்கமான கட்டிலின் விலை 2,000 டாலருக்கும் அதிகமாக இருக்கும். இதில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே செலவாகக்கூடிய படுக்கைகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளருடன் இக்குழுவினர் தற்போது இணைந்துள்ளனர். கூட்டுநிதி வாயிலாகவும் பல்வேறு நன்கொடைகள் வாயிலாகவும் இக்குழுவினர் நிதி திரட்டுகின்றனர். இந்தத் தயாரிப்பை உருவாக்க நிகில் சக மாணவர்களுடனும் குடும்பத்தினருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.

வெவ்வேறு பார்ட்னர்களுடன் பணியாற்றினார்

நிகில் தற்சமயம் எடை உணர்கருவிகள் மற்றும் பிற உணர்கருவிகளை உருவாக்கி வருகிறார். சக்கரநாற்காலி பயன்படுத்துவோர் விரைவில் குணம்பெற உதவக்கூடிய அழுத்தப்புண் உணர்கருவி உருவாக்கும் லூப்ப்ளஸ் போன்ற நிறுவனங்களின் உதவியும் ஆலோசனையும் பெறுவதாக நிகில் தெரிவித்தார்.

”சுவாச உணர்கருவிகள் மற்றும் அனைத்து சாதனங்களையும் ஒன்றிணைக்கக்கூடிய ஏபிஐ ஆகியவை குறித்தும் பணியாற்றி வருகிறோம்,” என்றார் நிகில்.

நோயாளிகளை தூங்கும்போது அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காப்புரிமை பெற்ற காற்று உட்செலுத்தும் அமைப்பு (air inflation system) சரியான அளவிலான காற்றை செலுத்தவும், செலுத்தப்பட்ட காற்று திரும்ப பின்னோக்கி வருவதைத் தவிர்க்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என நிகில் குறிப்பிட்டார். இது விலை மலிவானது மற்றும் மிகச்சிறிய ஆக்சுவேட்டர்களைக் கொண்டது.

கூகுள், நாசா போன்ற மிகப்பெரிய நிறுவனங்களால் துவங்கப்பட்ட ’ரேண்டம் ஹேக்ஸ் ஆஃப் கைண்ட்னெஸ்’ வாயிலாக உதவி கிடைத்தது குறித்தும் உணர்கருவிகள் உருவாக்குவதற்கு வழிகாட்டிய ஹாக்கதான் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

”உணர்கருவிகளைத் தொடர்பு கொண்டு நோயாளிகள் நகர்ந்தாலோ அல்லது நீண்ட நேரம் கட்டிலின் ஒரே பக்கத்தில் படுத்திருக்கும் காரணத்தால் உதவி தேவைப்பட்டாலோ எச்சரிக்கை எழுப்பும் நர்ஸ் மாட்யூல் தற்போது எங்களிடம் உள்ளது,” என்றார் நிகில்.

விலை மற்றும் எதிர்காலம்

இதன் விலை 200 டாலர் முதல் 300 டாலர் வரையாகும். தயாரிப்பை வாங்கி அதன் பயன்பாட்டை உறுதிசெய்ய மருத்துவமனைகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்து கொண்டிருப்பதாக இக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தால் இயக்கப்படும் பொது மருத்துவமனைகள் மற்றும் குடும்ப அறக்கட்டளைகள் (family trusts) என வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இந்தத் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருவதாக நிகில் தெரிவித்தார்.

இவர்கள் சுமார் பன்னிரண்டு மருத்துவமனைகளோடு இணைந்திருப்பதாகவும் இதன் மூலம் விற்பனைக்கான சாத்தியக்கூறுகளும் மருத்துவ ரீதியாக பரிசோதிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரித்திருப்பதாக நிகில் தெரிவித்தார்.

”எங்களது தயாரிப்பு பல்வேறு துறைகளில் திறன்கொண்டதாக அமைய ஒட்டுமொத்த தயாரிப்பு, ஏபிஐ சார்ந்த வடிவமைப்பு, டேட்டாபேஸ் வடிவமைப்பு ஆகியவை குறித்த ஆலோசனைகளை உலகம் முழுவதும் இருக்கும் ஆய்வாளர்கள் வழங்குகின்றனர்,” என்றார் நிகில். 

தற்போது விற்பனைக்கு முந்தைய நிலையில் உள்ளது. இவர்களது உற்பத்தி பார்ட்னர் செப்டம்பர் மாத இறுதியிலோ அல்லது அக்டோபர் மாத துவக்கத்திலோ உற்பத்தியை துவங்க திட்டமிட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள மக்களின் உடல்நலத்தை மேம்படுத்தவும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவக்கூடிய பல்வேறு தயாரிப்புகளை ’கெட் டு ஸ்லீப் ஈஸி’ வழங்கும் என நிகில் நம்பிக்கை தெரிவித்தார்.

இவர்களது ஏபிஐ விரிவடைய உதவுகிறது. அதே போல் தனித்துவமான தரவு சேகரிப்பு முறை மருத்துவர்கள் நோயாளிகளை நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்கவும் உதவி அவசர நிலை ஏற்படாமல் தவிர்க்கவும் உதவுகிறது. அது மட்டுமல்லாது ரத்த குளுக்கோஸ் கண்காணிக்கும் கருவி, ஸ்பைரோமீட்டர்கள் போன்ற நோயாளிகளை கண்காணிக்க உதவும் மற்ற கருவிகளையும் இணைத்துக்கொள்ள உதவுகிறது

”வருங்காலத்தில் மார்கெட்டிங் பிரச்சாரங்கள் துவங்க திட்டமிட்டுள்ளோம். சுவாரஸ்யமான தொடர் கூட்டுநிதி பிரச்சாரங்களையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். The HeadPhillow பணியையும் சமீபத்தில் துவங்கியுள்ளோம்,” என்றார் நிகில்.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப் | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL