கணவன் மனைவி தொடங்கிய கைவினைப் பொருள் நிறுவனம் ‘கிராஃப்ட்கல்லி’

0

500 கோடி டாலர் வர்த்தகத்தை உடைய சந்தையைக் குறிவைத்து 2014ம் ஆண்டு துவங்கப்பட்டது இந்த கைவினைப் பொருட்கள் ஆன்லைன் விற்பனை நிறுவனம். ஆன்லைனில் மட்டுமே கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று இது. ஆரம்பித்து இரண்டு ஆண்டு முடிவதற்குள் சுமார் ஆயிரத்து 500 தயாரிப்புகளுடன் (இன்னும் வளர்கிறது) கைவினைப் பொருட்களுக்கான சிறந்த விற்பனை நிலையங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.

கைவினைக் கருவிகள் செய்யலாம் என்று போகிற போக்கில் உதித்த ஒரு யோசனையில் ஆரம்பித்து, விரைவிலேயே நாடு முழுவதிலுமுள்ள கலைஞர்கள் மற்றும் கைவினைப் பொருள் தயாரிப்பாளர்களுக்குத் தேவையான பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாக வளர்ந்தது. இதுதான் "க்ராஃப்ட் கல்லி" (CraftGully) இணையதளம் பிறந்த கதை. இதில் சுவையான விஷயம் என்னவெனில் க்ராஃப்ட் கல்லியின் செயல்பாடுகள், அதன் கிடங்கு கோவாவில் இருக்க நிர்வாக அலுவலகம் மும்பையில் உள்ளது.

க்ராஃப்ட் கல்லியின் தயாரிப்புகள்
க்ராஃப்ட் கல்லியின் தயாரிப்புகள்

“ஏன் கோவா?” என்று கேட்டால் “ஏன் கோவாவில் இருக்கக் கூடாது?” என்று நம்மை மடக்குகிறார் தீரேந்தர். இனிமையான சூழல் உள்ள அழகிய பிரதேசம் அது. இது தான் நாங்கள் தொடங்க வேண்டிய இடம் என்று இயல்பாகவே அதைத் தேர்வு செய்து விட்டோம் என்கிறார் அவர்.

இணைய தளத்தைத் தொடங்கியதில் இருந்து அவர்கள் அந்தாமானில் ஆரம்பித்து அருணாச்சலப் பிரதேசம் வரை ஏன் தொலை தூரத்தில் உள்ள ஜம்மு காஷ்மீர் வரை அத்தனை மாநிலத்திற்கும் சென்றிருக்கின்றனர்.

தீரேந்தரும் அவரது மனைவி கஞ்சால் நிர்வானியும் தான் க்ராஃட் கல்லியின் நிறுவனர்கள். க்ராஃப்ட் கல்லியின் மூளை தீரேந்தர் என்றால் இதயம் கஞ்சால் நிர்வானி. இருவரும் க்ராஃப்ட் கல்லியில் முதலீடு செய்வதற்காக தங்களது வசதியான வேலையைத் துறந்தனர். கைவினைப் பொருட்கள் மீது கஞ்ஜாலுக்கு அளவிட முடியாத ஆர்வம். கைவினைப் பொருட்களுக்கான பயிற்சி பட்டறை என எப்போதும் படைப்பு தொடர்பான வேலைதான் அவருக்கு பிடிக்கும். ஒரு சந்தர்ப்பத்தில், இந்தியாவில் தரமான கைவினைப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் விற்பனையாளர் யாரும் இல்லை என்பதை உணர்ந்தார் கஞ்ஜால்.

தீரேந்தர் நிர்வானி
தீரேந்தர் நிர்வானி

டிஜிட்டல் மீடியாவில் ஏராளமான அனுபவம் பெற்ற தீரேந்தர் இவர்களது தொழிலில் தொழில்நுட்பப் பகுதியைக் கவனித்துக் கொள்கிறார். கனடாவில் மின்னாளுகை (e-governance) முன்முயற்சியில் ஆரம்பத்தில் பங்குபணியாற்றியவர் தீரேந்தர். பின்னர் ஷாதி.காம் (Shaadi.com) ஷேர்கான்.காம் (Sharekhan.com) போன்ற இந்தியாவின் முன்னணி இணையதளங்களில் பணியாற்றினார். கடைசியாக அவர் ஐபிஎம் இந்தியாவில் நிறுவன தலைமை மற்றும் மேம்பாடு தொடர்புத்துறையில் பணிபுரிந்தார். இந்தியாவின் மென்பொருள் உலகில் ஐபிஎம்மின் மென்பொருளை முன்னிறுத்தியதில் தீரேந்தருக்கு முக்கியப் பங்குண்டு.

“கடைசியாக நான் பார்த்த வேலை எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்தது. இந்தத் துறைக்கு(கைவினைப் பொருள் துறை) மாறுவதற்கான போதிய தன்னம்பிக்கையை அளித்தது.” என்கிறார் தீரேந்தர். கைவினைப் பொருட்களில் குயிலிங் (quilling) எனப்படும் அலங்கார வேலைப்பாடுகள், செதுக்குச் சித்திரம்( punch craft) போன்ற புதிய தலைமுறை மாற்றங்கள் அல்லது செயற்கை பூ, ஆபரணங்கள் போன்ற எப்போதும் மவுசு குறையாத கைவினைப் பொருட்கள், கைவினைப் பொருட்களுக்கான தனித்தன்மை வாய்ந்த கருவிகள் அல்லது அடிப்படைத் தேவையான கருவிகள் போன்றவற்றில் புதிதாக வந்துள்ள நவீன மாற்றங்களுக்கு ஏற்றபடி, நுகர்வோர் தங்களுக்குத் தேவையான பொருளைத் தேர்வு செய்வதற்கு வசதி செய்து கொடுக்கிறது க்ராஃப்ட்கல்லி.

வழங்கும் வாய்ப்புகள்

புற உதவி எதுவுமில்லாமல் உருவான அந்த நிறுவனம், குயிலிங் பேப்பர்களில் 50 வகையான வண்ணங்கள், 15 வகையான காதணிகள், 40 வகையான வண்ணப் பொடிகள் என விதவிதமான தயாரிப்புகளுடன் இன்று வளர்ந்து நிற்கிறது. கைவினைப் பொருள் உலகின் இன்றைய ட்ரெண்ட்டுக்கு ஏற்ற புதிய புதிய படைப்புகளை உருவாக்கத் தேவையான கருவிகளையும் சொந்தமாகத் தயாரித்து அளிக்கிறது க்ராஃப்ட் கல்லி.

அற்புதமான ஜூமுக்கா காதணிகளை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் உள்ளடக்கிய ஜூமுக்கா கிட் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது கிராஃட் கல்லி.

“முதன் முதலாக எங்களுக்கு ஆர்டர் கிடைத்த அந்த கணத்தை மறக்க முடியாது. எங்கள் வாழ்க்கையில் வந்த சந்தோஷமான தருணங்களில் ஒன்று அது. அப்போதிருந்து இப்போது வரையில் எங்கள் பயணம் உற்சாகம் நிறைந்ததாகவே உள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் எங்களது தயாரிப்பு செல்கிறது என்ற எண்ணமிருக்கிறதே அது அதிஅற்புதமானது. எங்கள் பயணத்தில் நாங்கள் கற்றுக் கொண்டது நிறைய. வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும்.. வாடிக்கையாளருக்கு உரிய நேரத்தில் பொருளைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதுதான் நாங்கள் கற்றுக் கொண்ட பாடத்திலேயே தலையாயது” என்கிறார் தீரேந்தர்.

இந்தத் தொழிலில் கிராப்ட் கல்லி சந்திக்கும் போட்டி முக்கியமானது. இட்சிபிட்சி.இன் (ItsyBitsy.in), தி ஹாபி (the Hobby), கிராப்ட்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் மெகாஸ்டோர்ஸ் (Crafts and Arts megastore) போன்ற நிறுவனங்களில் இருந்து வரும் போட்டியைச் சமாளிக்க வேண்டியுள்ளது. ஏராளமான தயாரிப்புகளுடன் நிச்சயமாக க்ராஃட் கல்லிக்கு இணையான உயரத்தில்தான் அந்தப் போட்டி நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அவர்கள் கடை விற்பனையை அதிகரிப்பதில்தான் (ஆஃப்லைன் விற்பனை) கவனம் செலுத்துகின்றனர். கிராஃட் கல்லி ஆன்லைன் விற்பனையில் கவனம் செலுத்துவதால், அந்தப் போட்டியாளர்களை மிஞ்சி ஒருபடி மேலே நிற்க முடிகிறது.

கஞ்சால் நிர்வானி
கஞ்சால் நிர்வானி

இதுவரையிலான பயணம்

தொடக்கத்தில் எல்லோருக்கும் நேர்வதைப் போலத்தான் எங்களுக்கும் நேர்ந்தது என்கிறார்கள் தீரேந்தரும் கஞ்சாலும். தங்களது பயணம் ரோலர் கோஸ்டர் போன்ற பல்வேறு வளைவு நெளிவுகளையும் மேடுபள்ளங்களையும் கொண்டது என்கிறார்கள் அவர்கள். “எங்களுக்கு கிடைத்த ஆர்டரின் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்ந்த போது ஏற்பட்ட பிரமிப்பில் இருந்து, அதை எப்படி 20 ஆயிரமாக மாற்ற வேண்டும் என்ற பதற்றம் வரையில் எல்லாவிதமான உணர்வுகளையும் பார்த்து விட்டோம். சரியான திறமைசாலியை வேலைக்கு அமர்த்த நடத்தும் போராட்டத்தில் இருந்து எங்கள் பணியைப் பாராட்டி வாடிக்கையாளரிடமிருந்து வரும் மின்னஞ்சல் அளிக்கும் திருப்தி வரையில் பார்த்து விட்டோம். இப்படி நாங்கள் அனுபவித்த ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும் நாங்கள் பெரிதாக வளர உண்மையில் உதவியிருக்கிறது” என்கிறார் தீரேந்தர்.

ஆரம்பத்தில் இந்தத் தொழிலைத் தொடங்குவதில் தயக்கம் இருந்ததாக ஒப்புக் கொள்ளும் அவர்கள், தற்போது தங்களது முடிவு சரியானதுதான் என்று சொல்லும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். எதையேனும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்கிற அவர்களின் எண்ணமும், பிரச்சனைகளை வெற்றி கொள்வதற்கான அவர்களின் அற்பணிப்பும் அவர்களுக்கு மகத்தான திருப்தியைக் கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை.

அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி

கைவினைக் கலைஞர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்வதற்கான செல்போன் செயலி (mobile app) ஒன்றை உருவாக்கியது உட்பட, அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது க்ராஃட் கல்லி. ஆன்ட்ராய்ட் சிஸ்டத்திற்கென வடிவமைக்கப்பட்ட க்ராஃட் கல்லியின் செல்போன் செயலி கூகுள் பிளேஸ்டோரில் (Google Playstore) தரவிரக்கம் செய்யக் கிடைக்கிறது.

கைவினைக் கலைஞர்கள் உலகின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்கு உதவும் சிறந்த தொழில் நேர்த்தியுடைய அதே சமயத்தில் ரசனைக்குரியதாகவும் மேலும் சில புதிய அறிமுகங்கள் கிரஃப்ட் கல்லியில் இருந்து விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முடிவாக, “கைவினைக் கலைஞர்கள் அனைவருக்கும் அவர்களின் ஒவ்வொரு படிநிலையிலும், அவர்களது முழுப் படைப்பாற்றலையும் மொத்தமாக வெளிப்படுத்த உதவும் தயாரிப்புகளையும் அதற்கான கருவிகளையும் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது லட்சியம்” என்கிறார்கள் தீரேந்தரும் கஞ்சால் நிர்வானியும்.