ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உறுதியாக தமிழக அரசு 10 கோடி நிதி உதவி!

0

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை (Tamil Chair) அமைக்க 6 மில்லியன் டாலர்கள் நிதி தேவை என்று கேம்பிரிட்ஜில் அமைந்துள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கோரிக்கை வைத்தது. அதனை தொடர்ந்து இருக்கை அமைக்க அமெரிக்க வாழ் தமிழ் மருத்துவர்களான வி.ஜானகிராமன் மற்றும் திருஞானசம்மந்தம் இணையத்தளம் மூலம் இருக்கை அமைக்க நிதி திரட்டத் தொடங்கினர். 

இதனை ஒட்டி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க, இன்று தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதி உதவி செய்வதாக தமிழ் வளர்ச்சி, தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன் பகிர்ந்தார். தமிழை உலகளவில் கொண்டு செல்ல இந்த தொகை பெரும் உதவியாக இருக்கும். இதன் மூலம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உறுதியானது.

தமிழக முதல் அமைச்சர் இதற்கான ஒரு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையில்,

“உலக தமிழ் சமுதாயத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழ் நாடு அரசு சார்பில் பத்து கோடி ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன்,” என அறிவித்திருந்தார்.

இதனை உறுதி செய்யும் விதமாகவும், நன்றி அளித்தும் ஹார்வர்ட் தமிழ் குழு தங்கள் டிவிட்டர் பகுதியில் தமிழக அரசுக்கு நன்றி கூறி ட்வீட் செய்துள்ளது.

மேலும் தமிழ் இருக்கையின் தேவை குறித்தும் தமிழக முதலமைச்சர் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்,

“இந்த இருக்கையை ஏற்படுத்துவதன் மூலம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தமிழ்மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்தியவியல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளுதல், ஆராய்ச்சிக் கல்வியில் தமிழ் இலக்கியம், இலக்கணம், பண்பாடு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்குதல், அமெரிக்க நூலகங்களிலும், ஆவணக் காப்பகங்களிலும் உள்ள தமிழ் தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்துதல், பதிப்பிக்கப்படாத ஆவணங்களை படியெடுத்து பதிப்பிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகள் மூலம் தமிழ்மொழியின் வளம் உலகறியச் செய்ய வழிவகை ஏற்படும்,” என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த இருக்கைக்கு ஏற்கனவே டாக்டர்கள் ஜானகிராமன் மற்றும் சம்மந்தம் ரூ.6 கோடியே 70 லட்சத்தை வழங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து உலக அளவில் வசிக்கும் தமிழ் மக்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்துள்ளனர். இதில் இசை அமைப்பாளர் எ.ஆர் ரஹ்மான் உட்பட பல பிரபலங்கள் அடங்கும்.

தற்போது எஞ்சிய நிதியை தமிழக அரசு கொடுக்க முன் வந்ததால் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உறுதியானது. 6 செம்மொழிகள் இருக்கையோடு இன்று தமிழ் 7 ஆம் இருக்கையாய் அமையும்.