அப்ப இவர்தானே நிஜமான ‘கோலமாவு கோகிலா’

0

தென்னிந்திய பாரம்பரியமான கோலத்தின் மூலம் மக்களின் மனதை வென்று வருகிறார் 51 வயதான மங்களம் ஸ்ரீநிவாசன். இவரது முகநூல் பக்கத்தில் கோலமாவு, சாக், அரிசிமாவு, செம்மண் போன்றவற்றைக் கொண்டு பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் போடப்படும் கோலங்கள் அழகாக காட்சியளிக்கிறது. 


திருச்சியின் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மங்களத்தின் முகநூல் பக்கத்தில் 95,000-க்கும் அதிகமான விருப்பக்குறியீடுகள் காணப்படுகின்றன. ’மை மாம்ஸ் ஆர்ட் கேலரி’ என்கிற முகநூல் பக்கத்தை மங்களத்தின் மகள்களான பார்கவியும் ஐஸ்வர்யாவும் 2013-ம் ஆண்டு உருவாக்கினர். மலேசியா, துபாய், அமெரிக்கா, ஐரோப்பா என இவரது கலைக்கு ஏற்கெனவே ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளன. இவரது தனித்திறன் குறித்து மேலும் அறிந்துகொள்ள பலர் நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

அரிசி மாவைக்கொண்டும் கோலமாவைக் கொண்டும் மங்களம் கோலம் போடுகிறார். இவரது கோலங்கள் சில அங்குல அளவு முதல் 11 அடி வரை காணப்படுகிறது. 

11 அடியில் உருவாக்கப்பட்ட சிவனின் வடிவமைப்பு இவர் உருவாக்கியதிலேயே மிகப்பெரிய கோலமாகும். 

முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா மறைந்த அடுத்த நாள், அதாவது டிசம்பர் 6-ம் தேதி காலை ஜெயலலிதாவின் உருவத்தை கோலமாக வரைந்தார். ஒரு வடிவமைப்பை உருவாக்க ஒரு மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை எடுத்துக்கொள்கிறார். சில சமயம் இதைத் தாண்டியும் நேரம் செலவிடுகிறார். அவர் உருவாக்க விரும்பும் ஓவியத்தின் அடிப்படையில் அதற்கான நேரம் மாறுபடுகிறது என ’மம்ஸ் ஆஃப் ஸ்டோரிஸ்’ குறிப்பிடுகிறது.

மங்களம் சிறுவயதில் தனது அம்மாவிடம் இருந்து இந்த கலையைக் கற்றுள்ளார். தமிழக அரசாங்கத்தின் மூலம் தஞ்சாவூர் ஓவியம் கற்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. 

பெரும்பாலான நேரங்களில் தனது கலைத் திறமையை குடும்பத்தினரிடமும் குழந்தைகளிடமும் மட்டுமே வெளிப்படுத்தி வந்தார். ஆனால் இவரது மகள்கள் மங்களத்தின் கலையை பலரிடையே கொண்டு சேர்க்கவேண்டும் என்பதற்காக ஒரு முகநூல் பக்கத்தைத் துவங்கினர்.


மங்களம் 20 வயதில் பட்டப்படிப்பை முடித்த உடன் தற்போது BHEL நிறுவனத்தில் பொது மேலாளராக உள்ள எஸ் வி ஸ்ரீநிவாசன் உடன் அவருக்கு திருமணம் நடந்தது. இவர் மங்களம் கோலத்தை உருவாக்கும் ஒட்டுமொத்த செயல்முறைகளையும் படம்பிடித்து யூட்யூபில் பதிவேற்றம் செய்தார். இவர்களது இரு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. அவர்கள் மங்களத்துடன் வசித்து வருகின்றனர்.

மங்களம் தனது கோலத்தில் ஜரிகைக்கான பொன்னிற பொடியை உருவாக்குவதில் சிரமத்தை சந்தித்ததாக ’தி பெட்டர் இண்டியா’ உடனான நேர்காணலில் தெரிவித்தார். பல ஆண்டுகளாக பல்வேறு தஞ்சாவூர் ஓவிய வகைகளை வடிவமைத்த பிறகு எலுமிச்சை நிற மஞ்சள், காவி, ஆரஞ்சு, அடர் சிகப்பு ஆகிய நிறங்களின் பொடியை கலந்து சரியான பொன்னிறத்தை உருவாக்குதில் நிபுணத்துவம் பெற்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL