ராணுவ மருத்துவக் கல்லூரியின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்கும் மாதுரி கனித்கர்!

0

மாதுரி கனித்கருக்கு ராணுவத்தில் சேரும் கனவு அவரது இளம் பருவத்தில் இருந்ததில்லை. அவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் வரை ராணுவ மருத்துவக் கல்லூரி குறித்து கேள்விப்பட்டதே இல்லை. இருப்பினும் அவர் ஒரு ராணுவ மருத்துவரானார். தற்போது மேஜர் ஜெனரல் மாதுரி கனித்கர் பூனேவில் அவர் படித்த ராணுவ மருத்துவக் கல்லூரியில் முதல் பெண் முதல்வாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாதுரி பூனேவின் ஃபெர்குசன் கல்லூரியில் பள்ளிப்படிப்பை முடித்ததும் மருத்துவப் பிரிவை தேர்ந்தெடுக்க விரும்பினார். அதே சமயத்தில்தான் அவரது நண்பர்களில் ஒருவர் மூலம் ராணுவ மருத்துவக் கல்லூரி குறித்து தெரிந்துகொண்டார். அவர் அங்கு சேர தூண்டுதலாக இருந்த விஷயம் குறித்து ’ஃபெமினா’-விடம் பகிர்ந்துகொள்கையில்,

எனக்கு என்டிஏ-வில் நண்பர்கள் இருந்தனர். அங்குள்ளவர்களிடம் ஏதோ ஒரு சிறப்பம்சம் இருப்பதை கவனித்தேன். என்னுடைய அறையில் உடன் வசித்த தோழி ஒருவருக்கு விமானப்படை பின்புலம் இருந்ததால் அவர் ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேரவேண்டும் என்று தீவிர முனைப்புடன் இருந்தார். அப்போதுதான் முதல் முறையாக அந்தக் கல்லூரி குறித்தே நான் கேள்விப்பட்டேன். அவருடன் கல்லூரியை பார்வையிட்டேன். தூய்மை, ஒழுக்கம் போன்ற அம்சங்களுடன்கூடிய அந்த மாறுபட்ட சூழல் என்னை வெகுவாகக் கவர்ந்தது.

1980-களில் பெண்களுக்கு உகந்த சூழலாக அமையாத ஒரு துறையில் மாதுரி முத்திரை பதிக்க முயன்றார். மேலும் அது ஆணாதிக்கம் நிறைந்த துறை என்பதால் அவர் பல்வேறு போராட்டங்களை சந்திக்க நேர்ந்தது. இருப்பினும் அனைத்தையும் எதிர்கொண்டு ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து தங்கப் பதக்கத்துடன் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.

அதன் பிறகு குழந்தைகள் நலப் பிரிவில் மேற்படிப்பு, எய்ம்ஸ்-ல் குழந்தைகள் சிறுநீரகவியல் துறையில் பயிற்சி, சிங்கப்பூர் மற்றும் லண்டனில் சில ஃபெலோஷிப்கள் ஆகியவற்றைத் தொடர்ந்தார்.

ராணுவத்தில் சுமார் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு ஆயுதப்படைகளில் முதல் குழந்தைகள் சிறுநீரக மருத்துவரானார் மாதுரி. ராணுவ மருத்துவக் கல்லூரியில் தலைவராக பொறுப்பேற்று செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்து ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உடன் மாதுரி பகிர்ந்துகொள்கையில்,

ராணுவ மருத்துவக் கல்லூரியின் ஒரு அங்கமாக இருந்து நான் அதிகம் கற்றுக்கொண்டேன். தற்போது நான் படித்த கல்லூரியின் வளர்ச்சிக்கு பங்களிக்கவேண்டிய நேரம் வந்துள்ளது. இங்கு சிறப்பான குழு உள்ளது. மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்துவோம். மதிப்பீடு கற்றலை ஊக்குவிக்கும். ஆனால் நாங்கள் எங்களது மருத்துவர்களுக்கு தொடர்பு கொள்ளும் திறன், மன அழுத்தத்தை போக்கும் வகையில் நோயாளியை அணுகும் விதம் உள்ளிட்ட பாடதிட்டம் தாண்டிய திறன்களில் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துவோம்.

ராணுவத்தின் எந்த நிலையில் பெண்கள் இணைந்தாலும் அது 21-ம் நூற்றாண்டிலும் கவனத்தை ஈர்க்கும் விஷயமாகவே உள்ளது. 1980-களில் தனது பணி வாழ்க்கையைத் துவங்கிய மாதுரி குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளார்.

கட்டுரை : THINK CHANGE INDIA