வீட்டில் இருந்தே வர்த்தகம் செய்ய உதவும் அசத்தலான 15 யோசனைகள்! 

16

ஒரு ஐடியா செயலாக்கம் பெறுவதில் துவங்கி, பூமியை விட பெரிதான கனவுகள் நிஜமாவது வரை வர்த்தகம் செழிக்க, தொழில்நுட்பம் தான் முன்னோடியாக இருக்கிறது. தொழில்நுட்பம் உலகை சுருக்கி, நம்முடைய உண்மையான ஆற்றலை உணரச்செய்திருக்கிறது. குறிப்பாக பணம் சம்பாதிப்பது மற்றும் வெற்றிகரமான வர்த்தகத்தை நடத்துவதில் இது இன்னும் உண்மையாக இருக்கிறது. 

மின்வணிக ஜாம்பவனான அமேசான் நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். துவக்கத்தில் காரேஜில் இருந்து செயல்பட்ட அமேசான் இன்று உலகம் முழுவதும் புத்தகங்கள், ஆடைகள் மற்றும் மின்னணு சாதனங்களை விற்றுக்கொண்டிருக்கிறது.

இணையத்தால் இணைக்கப்பட்ட உலகில் விற்பது, வாங்குவது மற்றும் சேவைகள் அளிப்பது எல்லாம் மேலும் எளிதாகவும், தொடர்பு தன்மை கொண்டதாகவும் மாறியிருக்கிறது. அதற்காக மூலதனம் குறைவாக இருக்கிறது என்றும் கவலைப்பட வேண்டாம். ஒரு சில ஐடியாக்களை பத்தாயிரம் ரூபாய் கையில் இருந்தால் துவக்கி விடலாம். தேவைகள் மாறுபடலாம் என்றாலும் கூட, வீட்டில் இருந்தபடியே தொழில் துவங்குவதற்கான வாய்ப்பு எல்லோருக்கும் சாத்தியமாகி இருப்பதை மறுக்க முடியாது. 

ஆக, மூலதனம் அதிகம் இல்லாவிட்டாலும் கூட திறன் மற்றும் வீட்டில் கொஞ்சம் இடம் இருந்தால் தொழில் துவங்கலாம். இதற்கு கைகொடுக்கக் கூடிய சில வெற்றிகரமான ஐடியாக்கள் இதோ:

பரிசுப்பொருட்கள்

நீங்கள் கலைநயம் மிக்கவர் என்றால், இணையத்திலும், வெளியிலும் உங்கள் திறன் மற்றும் படைப்பூக்கத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கலாம். வீட்டிலேயே செய்த சோப், மெழுகுவர்த்திகள், பென்சில், நோட்டுப்புத்தகம் போன்ற ஸ்டேஷனரிப் பொருட்கள் என பலவற்றை முயற்சித்துப்பார்க்கலாம். அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற பெரிய மின்வணிக இணையதளங்களில் விற்பனை செய்யலாம். அல்லது சிறிய அளவில் எளிமையாக செயல்பட விரும்பினால், இந்தியாமார்ட், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் போன்றவை போதுமானவை. தொழில்நுட்பத்தின் உதவியோடு, குறைந்தபட்ச மூலதனத்தில் உங்கள் படைப்பூக்கம் மூலம் வருவாய் ஈட்டலாம்.

இதே போல உள்ளூர் சந்தை, திருவிழாக்கள் மற்றும் கண்காட்சிகளிலும் பங்கேற்கலாம். நீங்கள் உருவாக்கிய பொருட்களை காட்சிப்படுத்த எண்ணற்ற வழிகள் இருக்கின்றன. பெங்களூருவில் சண்டே சோல் சண்டே, தில்லியில் திவாளி மேலா மற்றும் சென்னையில் பல்லாவரம் வாரச்சந்தை என பல வித வாய்ப்புகளை உதாரணமாக கூறலாம். பலர் தங்கள் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் சிறியதாக துவங்கி பெரிய அளவில் வர்த்தகத்தை வளர்த்தெடுத்துள்ளனர். உதாரணத்திற்கு கிராப்ட் கார்ட் (craft cart ) மினியேச்சர் பொருட்கள், துணைப்பொருட்கள், வாழ்த்து அட்டைகள், மெழுகுவர்த்திகள், செய்திதாள் பெட்டிகள், கூடைகள், விளக்கு அமைப்புகள் உள்ளிட்டவற்றை உருவாக்கி விற்பனை செய்கிறது.

டிஃபன் சேவை

பணி நிமித்தமாக வீட்டை விட்டு நகரங்களில் குடியேறியவர்கள், நியாயமான விலையில் வீட்டில் தயார் செய்யப்பட்ட நல்ல உணவை சுவைக்க ஏங்குகின்றனர். நீங்கள் சுற்றியுள்ள பகுதியிள் இளம் பணியாளர்கள் அதிகம் இருந்து, உங்களுக்கு நன்றாக சமைக்கத்தெரியும் என்றால், இது உடனடி வாய்ப்பாக அமையும். நீங்கள் சிறிய அளவில் துவக்கி பின்னர் விரிவாக்கம் செய்யலாம். இப்போது மளிகை பொருட்கள் வீடு தேடி வந்து டெலிவரி செய்படுவதால் ஷாப்பிங் நேரத்தை மிச்சம் செய்து, அந்த நேரத்தில் சமையலில் செலவிட்டு, நல்ல உணவை அளிக்கலாம். தேவை அதிகரிக்கும் போது உதவிகளுக்கு சிலரை சேர்த்துக்கொண்டு 30 முதல் 50 பேருக்கு வீட்டில் இருந்தே சேவை அளிக்கலாம்.

டியூஷன் மற்றும் புரோகிராமிங் வகுப்புகள்

இப்போது ஆன்லைனிலேயே வகுப்புகள் நடத்தப்படுவதால் முன்போல டியூஷன்களுக்கான தேவை அதிகம் இல்லை என்றாலும், பல பெற்றோருகள் தங்கள் பிள்ளைகள் புதிதாக கற்றுக்கொள்வதை விரும்புகின்றனர். கோடிங் செய்வது முதல் ஸ்டெம் தலைப்புகள் வரை பலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். புரோகிராமிங் மொழி கற்பதற்கான தேவையும் அதிகம் உள்ளது. நீங்கள் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்த துவங்கினால் போதும் வாய்மொழி மூலமே வாய்ப்புகள் தேடி வரும். நன்றாக சொல்லித்தரும் பட்சத்தில் பெற்றோர்களின் ஆர்வத்திற்கு பஞ்சம் இருக்காது. வாட்ஸ் அப்பில் ஒரு குழுவை உருவாக்கி பெற்றோர்களுக்கு வகுப்புகள் தொடர்பாக தேவையான விவரங்களை வழங்கலாம்.

மாண்டசோரி மற்றும் கிரீச்கள்

மழலையர் கல்விக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இன்றைய போட்டி மிக்க உலகில் சிறு வயதில் இருந்தே தரமான கல்விச்சூழல் தேவைப்படுகிறது. உங்கள் பகுதியில் நல்ல இடத்தை தேர்வு செய்து ஒரு பிளே ஸ்கூல் துவக்கலாம். லாப நோக்கிலான அல்லது லாப நோக்கில்லாத நிறுவனமாக பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே உள்ள நிறுவனத்தின் பிரான்சைசாக செயல்படலாம் அல்லது தனியேவும் துவக்கலாம்.

பல ஆண்டுகளாக பெற்றோர்கள் பணிக்கு சென்றுவிடும் போது பிள்ளைகளை தாத்தா பாட்டிகளே கவனித்து வந்தனர். ஆனால் இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குழுவாக செயல்படும் நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுக்களில் ஈடுபட விரும்புவதால் பிளே ஸ்கூல் மற்றும் காப்பகம் பிரபலமாக உள்ளது. கற்றுத்தருவதில் ஆர்வமும் குழந்தைகளிடம் ஈடுபாடும் இருந்தால் இது உங்களுக்கு ஏற்ற வாய்ப்பாகும்.

பொழுதுபோக்கு வகுப்புகள்

ஓவியம், பாட்டு, கலை மற்றும் இசை என பலவிதமான வகுப்புகளை எடுக்கலாம். நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் இதற்கான தேவை உள்ளது. இசையில் திறமை உள்ளவர் எனில் கர்நாடக இசை கற்றுத்தரலாம். இல்லை எனில் பியானோ அல்லது கித்தார் இசைக்க கற்றுத்தரலாம். உங்கள் திறனுக்கேற்ற வகுப்புகளை எடுக்கலாம். உங்கள் மாணவர்கள் படைப்புகள் இன்ஸ்டாகிராம் அல்லது ஸ்னேப்சாட்டில் பகிர்ந்து கொள்வதன் மூலம் மேலும் ஆதரவை தேடிக்கொள்ளலாம். இது விளம்பரமாக அமைவதோடு, நீங்கள் செய்வதை காட்சிப்படுத்தவும் உதவும்.

புகைப்படக்கலை

உங்களுக்கு பயணம் செய்வதிலும், படங்களை கிளிக் செய்வதிலும் ஆர்வம் இருக்கிறதா? உங்களுக்கு புகைப்படக்கலையின் அடிப்படையில் தேர்ச்சியும், ஆர்வமும் உண்டா? எனில் புகைப்படக்கலை மற்றும் வீடியோகிராபியை மற்றவர்களுக்கு கற்றுத்தரலாம். வீட்டிலேயே கற்றுத்தருவதா அல்லது வெளிப்புறத்தில் கற்றுத்தருவதா என்பது உங்கள் விருப்பம் மற்றும் பட்ஜெட்டை பொருத்து அமையும். உலகில் கிளிக் செய்வதற்கான காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. பலர் இதற்கான நுட்பங்களை காசு கொடுத்து கற்றுக்கொள்ள தயாராக உள்ளனர். ஊக்கம் தேவை எனில் கோவை இளைஞர் வருண் ஆதித்யா கதையை தெரிந்து கொள்ளுங்கள்.

பேக்கிங்

வீட்டிலேயே பேக்கிங் செய்வது இனிமையானது. கேக் செய்யும் மணத்தை தொலைவில் இருந்தே உணரலாம். பிரத்யேக கேக்கள், பாஸ்டரிஸ், டோனட்ஸ். சாக்லெட், பிரெட் போன்றவை யாருக்கு தான் பிடிக்காது. பேக்கிங் செய்யும் ஆற்றல் இருந்தால் நீங்கள் வீட்டில் இருந்தே கேக் செய்து வழங்கலாம். பேக்கிங் வகுப்புகள் கூட எடுக்கலாம். இல்லத்தலைவியான சரிதா சுப்ரமணியத்தின் தொழில் பயணம் இப்படி தான் துவங்கினார்.

நர்சரிகள்

உங்கள் வீட்டு தோட்டத்திலேயே பழங்கள், ஆர்கானிக் கீரைகள் ஆகியவற்றை பயிர் செய்யலாம். மூலிகை செடிகள், பழங்கள், காய்கறிகள், விஷேச பழங்களை உங்கள் தோட்டத்தில் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம். இன்று ஆரோக்கியமான வாழ்வையே பலரும் விரும்புகின்றனர். ஆர்கானிக் முறையில் காய், கனிகளை உற்பத்தி செய்தவாக தெரிவித்தால் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

இதைத்தவிர, போகன்வில்லா, போன்சாய் மற்றும் அலங்கார செடிகளையும் விற்பனை செய்யலாம். உங்கள் வீட்டு தோட்டம், மாடி, பால்கனியை அலங்காரம் செய்வதில் துவங்கி, உள் அலங்கார நிபுணராகவும் உருவாகலாம். தோட்டக்கலை விற்பனையகத்தையும் துவக்கலாம். தொடக்கத்தில் முகநூல் மூலம் பவன் ராகவேந்தர் துவங்கிய ஸ்டார்ட் அப் நிறுவனமான PKR Greens தோட்டக்கலை தேவைகளை நிறைவேற்றி வருகிறது.

மினி நூலகம்

நீங்கள் புத்தக புழுவா? உங்கள் வீட்டில் புத்தகங்கள் நிறைந்திருக்கின்றனவா? எனில் உங்கள் பகுதிக்கான நூலகத்தை துவக்கலாம். மற்ற புத்தக பிரியர்களை சந்திப்பதற்கான வாய்ப்போடு உறுப்பினர் சேர்க்கை மூலம் வருமானமும் கிடைக்கும். உங்கள் சொந்த புத்தகத்தைக் கொண்டு வாருங்கள் எனும் கருத்தாக்கத்திலான நிகழ்ச்சிகளையும் நடத்தலாம். சந்திப்புகள் உள்பட பலவிதமான நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

செல்லப்பிராணி பராமரிப்பு

செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் விடுமுறைக்கு செல்லும் போது என்ன செய்கின்றனர் என யோசித்து பார்தத்துண்டா? இப்படி செல்பவர்களின் செல்லப்பிராணிகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். உங்கள் வீட்டில் தற்காலிக இடமளியுங்கள். செல்லப்பிராணிகளுக்கு உணவு அளித்து அவற்றை நடைப்பயிற்சிக்கு அழைத்துச்செல்லுங்கள். இதற்கு தேவையான செலவை ஏற்றுக்கொள்ள செய்வதோடு, உங்கள் சேவைக்கும் கட்டணம் பெறலாம்.

ஊறுகாய்

ஊறுகாய், ஜாம்கள் போன்றவற்றுக்கான தேவை அதிகம் இருப்பதோடு, வீட்டிலேயே தயார் செய்தது எனில் அதற்கான மவுசும் அதிகம் உங்களால் இவற்றை வீட்டிலேயே தயார் செய்ய முடியும் என்றால், நீங்கள் இவற்றை சொந்த லேபிளில் தயார் செய்து விற்கலாம். தி கவுர்மெட் ஜார் நிறுவனர் அபேக்‌ஷா ஜெயின் இப்படி தான் துவங்கினார்.

அலங்கார நகைகள்

துணைப்பொருட்களை தயார் செய்வது என்பது ஒரு திறன். அதிலும் ஒரு சிலருக்கு கலாப்பூர்வமாக, துடிப்பாக இருப்பதிலும் ஆர்வம் அதிகம். காதணிகள் முதல் நெக்லஸ் வரை உருவாக்க முடியும் என்றால், பேஷன் போக்கையும் அறிந்திருந்தால் உங்களால் அலங்கார நகைகளை வடிவமைத்து விற்பனை செய்ய முடியும். உங்கள் படைப்புகளில் தனித்துவம் காண்பித்தால் நீங்களே ஒரு பிராண்டாக உருவாகலாம்.

பூவேலைப்பாடுகள்

வடிவமைப்பில் ஆர்வம் இருக்கிறதா? பூவேலைப்பாடு அல்லது பிரிண்டில் ஆர்வம் இருக்கிறதா? சாதாரணமானவற்றை கூட கலைத்தன்மை பெற வைக்க உங்களால் முடியுமா? எனில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே தொழில்முனைவராகலாம். பலரும் தங்கள் ஆடைகளில் அலங்காரத்தை எதிர்பார்க்கின்றனர். அவர்கள் விருப்பங்கள் மற்றும் தேவைகளை உங்கள் வடிவமைப்பு திறன் கொண்டு நிறைவேற்றுங்கள். சிறிய அளவில் துவக்கி பெரிய அளவில் வளரலாம். இப்படி தான் வீட்டில் சிறிய அளவில் துவங்கிய பெடல் கிராப்ட்ஸ் நிறுவனர் உஷா ஜெயின் இன்று பாட்னாவில் மதுபாணி கலையின் புரவலாக திகழ்கிறார்.

ஆலோசனை சேவைகள்

பலருக்கு வருமான வரி தாக்கல் தொடர்பான அடிப்படைகள் தெரியாது. நிதிச்சேவைகளை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பது தெரியாது. ஆன்லைனில் சுய வழிகாட்டுதல் இருந்தாலும், பலர் ஆலோசகர்களின் உதவியை நாடுகின்றனர். உங்களுக்கு இவற்றில் நிபுணத்துவம் இருந்தால் நீங்கள் ஆலோசனை சேவைகளை வழங்கலாம். இதற்கான கட்டணைத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

உடற்பயிற்சி ஆலோசனை

பலரும் உடற்பயிற்சி அல்லது நடன வகுப்புகளை தவற விடுபவர்களாகவே இருக்கின்றனர். இந்த குறையை வல்லுனர்கள் போக்கலாம். ஜிம் வசதி கொண்ட குடியிருப்புகளில் ஜும்பா அல்லது யோகா பயிற்சி வகுப்புகளை அளிக்கலாம். உங்களுக்கு ஊட்டச்சத்து விஷயத்தில் ஆர்வம் இருந்தால், உடற்பயிற்சி அளிப்பவருடன் இணைந்து ஊட்டச்சத்து ஆலோசனை அளிக்கலாம். குடியிருப்பிலேயே செயல்பட்டால் செலவுகளையும் மிச்சமாக்கலாம். ஊட்டச்சத்து நிபுணத்துவம் உள்ளவர்கள் ஒட்டுமொத்த பயிற்றுணர்களாகவும் விளங்கலாம். ஆன்லைனு குழு அமைத்து ஃபிட்னஸ் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

நடனத்தில் ஆர்வம் இருந்தால், டான்ஸ் ஸ்டூடியோ அமைக்கலாம். சல்சா, பரத நாட்டியம் என பலவிதமான நடனங்களை கற்றுக்கொடுக்கலாம்.

ஏர்பிஅன்பி வாய்ப்பு

வேறு ஒரு நகரில் வாடகைக்கு விடக்கூடிய இடம் இருக்கிறதா? கிராமப்புறம் அல்லது மலைவாசஸ்தலத்தில் உள்ள உங்கள் வீடு வெறுமையாக இருக்கிறதா? இந்த வீடுகளை ஏர்பிஎன்பி தளம் மூலம் பயணிகளுக்கு வாடகைக்கு விடலாம். மேலும் பல, ஆன்லைன் மேடைகளில் பதிவு செய்து கொண்டு பயணிகளுக்கு வாடகைக்கு விடலாம். இது ஒரு பகுதி நேர வருமானமாக இருக்கும். இதையே முழுநேரமாகவும் மேற்கொள்ளலாம். சுற்றுலாவுக்கு எப்போதுமே தேவை இருக்கும் என்பதால், உங்கள் வீட்டை வாடகைக்கு விடத்தயார் எனில் இது நல்ல வர்த்தக வாய்ப்பாக அமையும்.

ஆக, உங்கள் ஆர்வம் அல்லது பொழுதுபோக்கை வர்த்தகமாக மாற்றுவது எளிதானதே என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம். இதற்காக பெரிய அளவில் கஷ்டப்பட வேண்டியதும் இல்லை. மின்வணிக தளங்கள் உங்களுக்கு கைகொடுக்கும். உங்கள் ஐடியா என்னவாக இருந்தாலும் சட்டப்பூர்வமான விதிகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துங்கள். வீட்டிலேயே இருந்த வர்த்தகம் செய்வது கடினமானதல்ல. தொழில்முனைவின் பாதையில் முன்னேறுங்கள்.

தமிழில் சைபர்சிம்மன்