இளம் வயதில் தொழில் முனைவோர் ஆகியுள்ள 21 கேரள கல்லூரி மாணவர்கள் சிலிகான்வாலி செல்ல தேர்வு! 

0

கேரளா பொறியியல் கல்லூரிகளில் இருந்து 21 இளம் தொழில்முனைவோர் சிலிகன்வாலிக்கு பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வெள்ளிக்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர்.

’கேரளா ஸ்டார்ட் அப் மிஷன்’ பொறியியல் மாணவர்களில் இருந்து சிறந்த தொழில் முனைவு மாணவர்களை தேர்வு செய்தனர். மாணவர்கள் முன்வைத்த நவீன தொழில்நுட்ப ஸ்டார்ட் - அப் கருத்துக்களின் அடிப்படையில் இந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய தொலைத் தொடர்பு இன்னொவேஷன் ஹப் உதவியுடந்தான் தேர்வு செய்யப்பட்ட இம்மாணவர்கள் அமெரிக்காவிலுள்ள சிலிகன்வாலிக்கு செல்கிறார்கள். கல்வி, கலாச்சார பகிர்வு திட்டத்தின் கீழ் இந்த மாணவர்கள் 7 நாள் பயிற்சியில் கலந்து கொள்ள செல்கிறார்கள். தங்களின் கண்டுபிடிப்புகள், நவீன கருத்துக்கள் தொடர்பாக கட்டுரை வாசிக்கவும் இவர்களுக்கு அங்கே வாய்ப்பு கிடைக்கும்.

தேர்வு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோனர் பாலக்காடு என்.எஸ்.எஸ் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், கோதமங்கலம், எர்ணாகுளம் என்று பல ஊர்களில் இருந்தும் மாணவர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

பொறியியல் மாணவர்கள் மட்டுமல்லாமல் சமூக கட்டமைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட என்.எஸ்.எஸ் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்களான ஆர்.ஹரிகரன், திருவனந்தபுரம் சி.ஈ.டி மாணவர் சைலேந்திர சோமன் ஆகியோர்தான் இந்த குழுவை வழிநடத்துவார்கள்.

கேரளா ஸ்டார்ட் அப் மிஷனுடன் இணைந்து செயல்படும் 20 இளம் தொழில் முனைவோரும் இக்குழுவுடன் செல்வார்கள் என்று தொழில்முனைவு வளர்ச்சி மையத்தின் தலைவரான துணை பேராசிரியரான கே.ஆர்.கிரண், முன்னாள் தலைவரான பேராசிரியர் வினோத் ஆகியோர் தெரிவித்தனர்.

Related Stories

Stories by YS TEAM TAMIL